பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள்
குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப் பொருள் பற்றிட நினைவோர்கள்
பத்தி நிரைத் தவளத் தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள்
பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழ் ஊறல் எச்சில் அளிப்பவர்
கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும் எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் மடமாதர்
இச்சையில் இப்படி நித்தம் மனத் துயர் பெற்று உலகத்தவர் சிச் சி எனத் திரி இத்தொழில் இக்குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர்த் திருவைப் புணர் நத்து தரித்த கரத்தர்
திருத்துளவ(ம்) அணி மார்பர் நட்ட நடுக் கடலில் பெரு வெற்பினை நட்டு அரவப் பணி சுற்றி மதித்து உள நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே
கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமரேசா
கொத்து அவிழ் பத்ம மலர்ப் பழனத்தொடு குற்ற மறக் கடிகைப் புனல் சுற்றிய கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே.
பச்சிலைப் பொடியைப் பூசி முகத்தை மினுக்குபவர்கள். வஞ்சகமான வித்தைகளில் மிக்க சாமர்த்தியசாலிகள். கூத்தாடும் பயனிலிகள். (வருபவருடைய) கைப் பொருளை அபகரிப்பதிலேயே எண்ணம் வைப்பவர்கள். வரிசை வரிசையாக உள்ள வெள்ளை நிற முத்துக்களை ஒத்ததான பற்களாலும், கண்களாலும் மயக்குபவர்கள். அன்பு மிகும்படியாக (மா, பலா, வாழை என்னும்) முப்பழங்களையும் சர்க்கரையையும் போன்ற வாயிதழ் ஊறலாகிய எச்சிலைக் கொடுப்பவர்கள். கச்சைக் கயிற்றாலாகிய படுக்கையில் முகஸ்துதியான வார்த்தைகளை நிரம்பப் பேசி பக்குவமாக ஏமாற்றி வஞ்சித்து அழைத்து மயக்கும் அழகிய விலைமாதர்கள் (மேலுள்ள) ஆசையால் இவ்வண்ணம் நாள் தோறும் மன வருத்தத்தை அடைந்து, உலகோர் சீ சீ என்று வெறுப்புக் காட்டத் திரிகின்ற இந்தச் செயலும், இந்தக் குணமும் நான் விட்டொழிக்க நல்ல திருவடிகளைத் தருவாயாக. விஷம் உள்ள பாம்பு (படுக்கையில்) துயில்கின்ற பச்சை மேகம் போன்றவரும், கருணைக் கடலானவரும், தாமரை மலரில் வாசம் செய்யும் லக்ஷ்மியைச் சேர்பவரும், சங்கு தரித்த கையை உடையவரும், துளசி மாலையை அணிந்த மார்பினரும், பாற்கடலின் நட்டநடு மத்தியில் பெரிய மந்தர மலையை நாட்டி, பாம்பாகிய வாசுகியை கயிறாகக் கட்டி, சுற்றிலும் மத்தால் கடைந்து, உள்ளத்தில் ஆசைப்பட்ட அமுதத்தை வரச்செய்து, தேவர்களுக்கு அளித்த திருமாலின் மருகனே, . மழலைப் பேச்சினளும், கரிய கண்களை உடையவளும், சிறிய இடையை உடையவளும், பெரிய மார்பை உடையவளும் (ஆன) குறப்பெண்ணாகிய வள்ளிக்கு மனத்தில் ஆசை கொண்ட குமரேசனே, இதழ்க் கொத்துக்கள் விரிகின்ற தாமரை மலர் நிறைந்த வயல்களும் (மருத நிலங்களும்), நன்றாக ஓடும் கடிகை என்னும் ஆற்றின் நீரும் சுற்றியுள்ள நல்ல திருவக்கரை என்னும் ஊரில் பொருந்த வீற்றிருக்கும் பெருமாளே.
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் ... பச்சிலைப் பொடியைப் பூசி முகத்தை மினுக்குபவர்கள். குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் ... வஞ்சகமான வித்தைகளில் மிக்க சாமர்த்தியசாலிகள். பப்பர மட்டைகள் கைப் பொருள் பற்றிட நினைவோர்கள் ... கூத்தாடும் பயனிலிகள். (வருபவருடைய) கைப் பொருளை அபகரிப்பதிலேயே எண்ணம் வைப்பவர்கள். பத்தி நிரைத் தவளத் தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள் ... வரிசை வரிசையாக உள்ள வெள்ளை நிற முத்துக்களை ஒத்ததான பற்களாலும், கண்களாலும் மயக்குபவர்கள். பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழ் ஊறல் எச்சில் அளிப்பவர் ... அன்பு மிகும்படியாக (மா, பலா, வாழை என்னும்) முப்பழங்களையும் சர்க்கரையையும் போன்ற வாயிதழ் ஊறலாகிய எச்சிலைக் கொடுப்பவர்கள். கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும் எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் மடமாதர் ... கச்சைக் கயிற்றாலாகிய படுக்கையில் முகஸ்துதியான வார்த்தைகளை நிரம்பப் பேசி பக்குவமாக ஏமாற்றி வஞ்சித்து அழைத்து மயக்கும் அழகிய விலைமாதர்கள் (மேலுள்ள) இச்சையில் இப்படி நித்தம் மனத் துயர் பெற்று உலகத்தவர் சிச் சி எனத் திரி இத்தொழில் இக்குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே ... ஆசையால் இவ்வண்ணம் நாள் தோறும் மன வருத்தத்தை அடைந்து, உலகோர் சீ சீ என்று வெறுப்புக் காட்டத் திரிகின்ற இந்தச் செயலும், இந்தக் குணமும் நான் விட்டொழிக்க நல்ல திருவடிகளைத் தருவாயாக. நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர்த் திருவைப் புணர் நத்து தரித்த கரத்தர் ... விஷம் உள்ள பாம்பு (படுக்கையில்) துயில்கின்ற பச்சை மேகம் போன்றவரும், கருணைக் கடலானவரும், தாமரை மலரில் வாசம் செய்யும் லக்ஷ்மியைச் சேர்பவரும், சங்கு தரித்த கையை உடையவரும், திருத்துளவ(ம்) அணி மார்பர் நட்ட நடுக் கடலில் பெரு வெற்பினை நட்டு அரவப் பணி சுற்றி மதித்து உள நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே ... துளசி மாலையை அணிந்த மார்பினரும், பாற்கடலின் நட்டநடு மத்தியில் பெரிய மந்தர மலையை நாட்டி, பாம்பாகிய வாசுகியை கயிறாகக் கட்டி, சுற்றிலும் மத்தால் கடைந்து, உள்ளத்தில் ஆசைப்பட்ட அமுதத்தை வரச்செய்து, தேவர்களுக்கு அளித்த திருமாலின் மருகனே, கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமரேசா ... . மழலைப் பேச்சினளும், கரிய கண்களை உடையவளும், சிறிய இடையை உடையவளும், பெரிய மார்பை உடையவளும் (ஆன) குறப்பெண்ணாகிய வள்ளிக்கு மனத்தில் ஆசை கொண்ட குமரேசனே, கொத்து அவிழ் பத்ம மலர்ப் பழனத்தொடு குற்ற மறக் கடிகைப் புனல் சுற்றிய கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே. ... இதழ்க் கொத்துக்கள் விரிகின்ற தாமரை மலர் நிறைந்த வயல்களும் (மருத நிலங்களும்), நன்றாக ஓடும் கடிகை என்னும் ஆற்றின் நீரும் சுற்றியுள்ள நல்ல திருவக்கரை என்னும் ஊரில் பொருந்த வீற்றிருக்கும் பெருமாளே.