(இறந்தவர்கள் வீட்டில்) ஒவ்வொருவரும் சுற்றி உட்கார்ந்து ஒருவர் தோள் மேல் ஒருவர் கைகோத்து அழுகின்றவர்களும் விலகிப் போகுமாறு கோரமான, பாரமான சூலத்தையும் பாசக் கயிற்றையும் கொண்ட யமன் வந்து சேர்கின்ற சமயத்தில், பாடை கட்டப்பட்டு நெருப்பில் கூட்டப்பட்டு, பாழ் அடைந்து குலைந்து நான் அழிந்து போகாமல், (உலக) ஆசையில் கட்டுண்ட என்னை ஞானம் உள்ளவர்களின் அழகிய திருவடியில் சேர்த்து வைத்து அருள்வாயாக. போர் புரிந்த சூரன் போரில் தோற்று ஓட, அவன் (மாமரமாய்க்) கிடந்த கடலில் மிகவும் கோபித்துச் சண்டை செய்த வேலனே, தெய்வ யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானைக்கும், காட்டில் வாழ்ந்த தேன்போன்ற வள்ளிக்கும் முத்து மாலையையும், கடப்ப மாலையையும் தந்தருளிய வீரனே, கூடல் நகரில் உள்ள தலைவனான சிவபெருமானை தேவி அங்கயற்கண்ணியுடன் கூட ஒன்று சேர்த்துப் பாடித் திரிந்த (திருஞான சம்பந்தப்) புலவனே, அழகிய நெல் வயல்களும் பொழில்களும் நிறைந்த, நல்லொழுக்கத்தார்கள் உள்ள கோடை நகரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.
தோள் தப்பாமல் தோய்தப் பாணி சூழ்(ந்)து உற்றார் துற்று அழுவாரும் தூரப் போக ... (இறந்தவர்கள் வீட்டில்) ஒவ்வொருவரும் சுற்றி உட்கார்ந்து ஒருவர் தோள் மேல் ஒருவர் கைகோத்து அழுகின்றவர்களும் விலகிப் போகுமாறு கோரப் பாரச் சூலப் பாசச் சமன் ஆரும் ... கோரமான, பாரமான சூலத்தையும் பாசக் கயிற்றையும் கொண்ட யமன் வந்து சேர்கின்ற சமயத்தில், பாடைக் கூடத் தீயில் தேறி பாழ் பட்டே பட்டு அழியாதே ... பாடை கட்டப்பட்டு நெருப்பில் கூட்டப்பட்டு, பாழ் அடைந்து குலைந்து நான் அழிந்து போகாமல், பாசத்தேனைத் தேசு உற்றார் பொன் பாதத்தே வைத்து அருள்வாயே ... (உலக) ஆசையில் கட்டுண்ட என்னை ஞானம் உள்ளவர்களின் அழகிய திருவடியில் சேர்த்து வைத்து அருள்வாயாக. ஆடல் சூர் கெட்டு ஓடத் தோயத்து ஆரச் சீறிப் பொரும் வேலா ... போர் புரிந்த சூரன் போரில் தோற்று ஓட, அவன் (மாமரமாய்க்) கிடந்த கடலில் மிகவும் கோபித்துச் சண்டை செய்த வேலனே, ஆனைச் சேனைக் கானில் தேனுக்கு ஆரம் தாரைத் தரும் வீரா ... தெய்வ யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானைக்கும், காட்டில் வாழ்ந்த தேன்போன்ற வள்ளிக்கும் முத்து மாலையையும், கடப்ப மாலையையும் தந்தருளிய வீரனே, கூடற்பாடிக் கோவைப் பாவைக் கூடப் பாடித் திரிவோனே ... கூடல் நகரில் உள்ள தலைவனான சிவபெருமானை தேவி அங்கயற்கண்ணியுடன் கூட ஒன்று சேர்த்துப் பாடித் திரிந்த (திருஞான சம்பந்தப்) புலவனே, கோலச் சாலிச் சோலைச் சீலக் கோடைத் தேவப் பெருமாளே. ... அழகிய நெல் வயல்களும் பொழில்களும் நிறைந்த, நல்லொழுக்கத்தார்கள் உள்ள கோடை நகரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.