தோழமை கொண்டுசலஞ்செய் குண்டர்கள் ஓதிய நன்றிம றந்த குண்டர்கள் சூழ்விரதங்கள் கடிந்த குண்டர்கள்.....பெரியோரைத் தூஷண நிந்தைபகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் சூளுற வென்பதொழிந்த குண்டர்கள்.....தொலையாமல் வாழநினைந்து வருந்து குண்டர்கள் நீதியறங்கள்சிதைந்த குண்டர்கள் மானவகந்தைமிகுந்த குண்டர்கள்.....வலையாலே மாயையில் நின்றுவருந்து குண்டர்கள் தேவர்கள் சொங்கள்கவர்ந்த குண்டர்கள் வாதை நமன்றன்வருந்திடுங்குழி.....விழுவாரே ஏழு மரங்களும் வன்குரங்கெனும் வாலியும் அம்பரமும் பரம்பரை ராவணனுஞ்சதுரங்க லங்கையும்.....அடைவேமுன் ஈடழியும்பட சந்த்ரனுஞ் சிவ சூரிய னுஞ்சுரரும் பதம்பெற ராம சரந்தொடு புங்கவன்திரு.....மருகோனே கோழி சிலம்ப நலம்ப யின்ற கலாப நடஞ்செய மஞ்சு தங்கிய கோபுர மெங்கும்விளங்கு மங்கல.....வயலூரா கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேல னெனும்பெய ரன்புடன் புகழ் கோடை யெனும்பதி வந்த இந்திரர்.....பெருமாளே.
நட்பைக் காட்டிப் பினனர் நண்பருக்கு வஞ்சகம் செய்யும் கீழோர், போதித்த நன்றியை மறந்த கீழோர், அநுஷ்டிக்க வேண்டிய விரதங்களை விலக்கிய கீழோர், பெரியோரை வைது நிந்தித்துப் பேசிய கீழோர், மற்றவர்க்குக் கொடுப்பதைக் கண்டு அதைத் தடுத்த கீழோர், சத்திய வார்த்தை என்பதையே ஒழித்த கீழோர், எப்போதும் தாம் அழியாமல் வாழ நினைத்து அதற்காகவே வருந்தும் கீழோர், நீதியையும், தர்மத்தையும் அழித்த கீழோர், குற்றமும், ஆணவமும் மிகுந்துள்ள கீழோர், பாசவலையால் உலகமாயையில் சிக்கி வருந்தும் கீழோர், தெய்வச் சொத்தை அபகரித்த கீழோர், இவர்கள் யாவரும் வேதனைக்கு இடமாகிய, யமனது நரகக் குழியில் வீழ்வர். மராமரம் ஏழும், வலிய குரங்காகிய வாலியும், கடலும், அசுர பரம்பரையில் வந்த ராவணனும், அவனது நால்வகைப் படையும் (யானை, தேர், குதிரை, காலாட்படை) இருந்த இலங்கையும், யாவுமே முன்பே வலிமை குன்றி அழியும்படியும், சந்திரனும், சிவ சூரியனும், தேவர்களும் தமது பதவியிலே நிலைபெறவும், ராமசரம் என்ற ராமநாமம் கொண்ட அம்பைச் செலுத்திய சிறப்பான ராமச்சந்திர மூர்த்தியின் அழகிய மருகனே, சேவல் கொடியில் இருந்து ஒலிசெய்ய, அழகிய தோகையை உடைய மயில் நடனம் செய்ய, மேகங்கள் தங்கும் உயரமான கோபுரங்கள் எங்கும் விளங்கும் மங்களகரமான வயலூர் வாசனே, அழகிய தேவர்களும், தொண்டர்களும், மண்டலாதிபர்களும், வேலன் என்ற பெயரை அன்புடன் புகழ்கின்ற பெருமாளே, கோடைநகர் என்ற பதியில் வந்துள்ள பெருமாளே, இந்திரர்களுக்குப் பெருமாளே.