தோல் கொண்டு மூடப்பட்ட இந்த உடலை நம்பி, மாதர்களுடைய வஞ்சக லீலைகள் நிரம்புவதால், அவர்களுக்கு வேண்டிய பொருளைத் தேட வேண்டி ஓடியும், வருந்தியும், புதுவிதமான நூல்களாக தூது, நான்மணிமாலை, பிரபந்தங்கள், கோவை, உலா, மடல் முதலியவற்றைப் பாடி, அவற்றிலேயே ஈடுபட்டு, குற்றம் நிறைந்த இளைஞர்களின் வாசல் தோறும் புகுந்து வருந்துகின்ற கால்களைக் கொண்டவனை, வீணனை, நீதி தவறிய பொய்யைக் கொண்டவனை, மானமில்லாது அழிந்திடும் நெஞ்சனை, பிறரை வருத்தும் லோபியை, பயனற்றவனை, நிந்திக்கப்படும் கீழ்மகனாகிய என்னை, காரண, காரியத் தொடர்போடு வரும் இவ்வுலகத் துன்பங்கள் எல்லாம் நீங்கவும், நல்வாழ்வு சேரவும், விருப்பமுடன் குற்றமற்ற செல்வமாகிய உண்மை ஞானமான தவநிலை வந்தடைய சிறிதாவது அருளக்கூடாதோ? பால் போன்ற வெண்மையான அன்னத்தின் மீது வீற்றிருந்து, நான்கு முகங்களும் பொன்னிறமும் கொண்டு, படைத்தல் தொழில் செய்யும் பிரமனை, முன்பு தலைகளில் குட்டி, தண்டனை விதித்தவனே, முன்பு, அந்தப் பெரிய அநுமானின் தோளிலே வீற்றிருந்து போர் செய்து, பாவியாம் ராவணனுடைய தலைகள் சிதறவும், உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறவும் செய்து, மணந்த பாவையாம் சீதையின் தோளைத் தழுவிய மாமனாம் (ராமனின்) திருமாலின் சிந்தைக்கு இனியவனே, நல்ல குணங்கள் நிறைந்த நாரத முநிவர் உன்னிடம் வந்து, இதுதான் அவ்வள்ளி வாழும் தினைப்புனமாகும் என்று குறிப்பிட்டுக் காட்ட, உடனே நீ முடுகிச் சென்று, தேன் போன்ற மொழியாளாகிய வள்ளியின் பச்சைக்கற்பூர கலவையை அணிந்த, அழகிய, இன்பம் நல்கும் மலையொத்த மார்பினைத் தழுவியவனே, சேல், வாளை, வரால் மீன்கள் யாவும் கிளம்பித் துள்ளிப் பாய்ந்து, குலைசாய்த்திருக்கும் பாக்கு மரங்களில் குலாவும் இன்பகரமான திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.