கார்ச் சார் குழலார் விழி ஆர் அயிலார்
பால் மொழியார் இடை நூல் எழுவார்
சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே
காழ்க் காதலது ஆம் மனமே
மிக வார்க் காமுகனாய் உறு சாதக
மா பாதகனாம் அடியேனை
நின் அருளாலே பார்ப்பாய் அலையோ
அடியாரொடு சேர்ப்பாய் அலையோ
உனது ஆர் அருள் கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா
பார்ப் பாவலர் ஓது சொ(ல்)லால்
முது நீர்ப் பாரினில் மீறிய கீரரை
ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே
வார்ப்பேர் அருளே பொழி காரண
நேர்ப் பாவ ச காரணமா(ம்)
மத ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப வாக்கா
சிவ மா மதமே மிக ஊக்க அதிப
யோகமதே உறும் மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா
திருவேற்காடு உறை வேத புரீசுரர் தரு சேயே
வேட்டார் மகவான் மகளானவள் ஏடு ஆர் திரு மா மணவா
பொ(ன்)னின் நாட்டார் பெரு வாழ்வு எனவே வரு பெருமாளே.
மேகத்தை ஒத்த கூந்தலை உடையவர்கள், கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள், பால் போல் இனிய சொற்களை உடையவர்கள், இடையானது நூல் போல நுண்ணிதாக உடையவர்கள் பொருந்திய இள நீரைப் போன்ற மார்பகங்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் மீதுள்ள மயக்கத்தாலே, திண்ணியதான அன்பு பூண்டுள்ள மனமே, மிக்க காமப் பித்தனாக இருக்கின்ற ஜாதகத்தை உடையவனும், மிகவும் பெரிய பாதகச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியேனை, உன்னுடைய திருவருள் கொண்டு பார்க்க மாட்டாயோ? உனது அடியார்களோடு சேர்க்க மாட்டாயோ? உன்னுடைய பூரண அருளை நிரம்பத் தர மாட்டாயோ? உமா தேவி பெற்ற குமரேசனே, பூமியில் உள்ள புலவர்கள் ஓதும் புகழ்ச் சொற்களால் பழைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் மேம்பட்டு விளங்குபவராகிய நக்கீரரை மகிழ்ந்து ஏற்பவனே, உனது திருவருளை அதேபோலப் பாலித்து ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை எனக்கு அருளுவாயாக. (உலகத்துக்கு) நீடிய பேர் அருளையே பொழிந்த மூல காரணனே, நேரிட்டு எதிர்த்த பாவத்துக்குத் துணைக் காரணமாகிய சமண மதத்தை ஏற்பாடு செய்த மதக் குருக்கள் அழிபட (தேவாரப் பாடல்களை திருஞானசம்பந்தராக வந்து) கூறிய, கோபம் கொண்ட திருவாக்கை உடையவனே, சிறந்த சிவ மதமே பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே, யோக நிலையில் இருக்கும் பெரியவனே, சிவனது குமரனே, குகனே அடியார்களின் செல்வமே, வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும் வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியிடம் அன்பு பூண்ட நல்ல அழகிய கணவனே, திருவேற்காட்டில் வீற்றிருக்கும் வேத புரீசுரர் பெற்ற குழந்தையே, வேள்வி நிரம்பிய யாகபதியாகிய இந்திரனுடைய மகளான தேவயானையின் சிறந்த அழகிய மணவாளனே, பொன்னுலகத்தினரான தேவர்களுடைய செல்வம் என வருகின்ற பெருமாளே.
கார்ச் சார் குழலார் விழி ஆர் அயிலார் ... மேகத்தை ஒத்த கூந்தலை உடையவர்கள், கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள், பால் மொழியார் இடை நூல் எழுவார் ... பால் போல் இனிய சொற்களை உடையவர்கள், இடையானது நூல் போல நுண்ணிதாக உடையவர்கள் சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே ... பொருந்திய இள நீரைப் போன்ற மார்பகங்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் மீதுள்ள மயக்கத்தாலே, காழ்க் காதலது ஆம் மனமே ... திண்ணியதான அன்பு பூண்டுள்ள மனமே, மிக வார்க் காமுகனாய் உறு சாதக ... மிக்க காமப் பித்தனாக இருக்கின்ற ஜாதகத்தை உடையவனும், மா பாதகனாம் அடியேனை ... மிகவும் பெரிய பாதகச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியேனை, நின் அருளாலே பார்ப்பாய் அலையோ ... உன்னுடைய திருவருள் கொண்டு பார்க்க மாட்டாயோ? அடியாரொடு சேர்ப்பாய் அலையோ ... உனது அடியார்களோடு சேர்க்க மாட்டாயோ? உனது ஆர் அருள் கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா ... உன்னுடைய பூரண அருளை நிரம்பத் தர மாட்டாயோ? உமா தேவி பெற்ற குமரேசனே, பார்ப் பாவலர் ஓது சொ(ல்)லால் ... பூமியில் உள்ள புலவர்கள் ஓதும் புகழ்ச் சொற்களால் முது நீர்ப் பாரினில் மீறிய கீரரை ... பழைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் மேம்பட்டு விளங்குபவராகிய நக்கீரரை ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே ... மகிழ்ந்து ஏற்பவனே, உனது திருவருளை அதேபோலப் பாலித்து ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை எனக்கு அருளுவாயாக. வார்ப்பேர் அருளே பொழி காரண ... (உலகத்துக்கு) நீடிய பேர் அருளையே பொழிந்த மூல காரணனே, நேர்ப் பாவ ச காரணமா(ம்) ... நேரிட்டு எதிர்த்த பாவத்துக்குத் துணைக் காரணமாகிய மத ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப வாக்கா ... சமண மதத்தை ஏற்பாடு செய்த மதக் குருக்கள் அழிபட (தேவாரப் பாடல்களை திருஞானசம்பந்தராக வந்து) கூறிய, கோபம் கொண்ட திருவாக்கை உடையவனே, சிவ மா மதமே மிக ஊக்க அதிப ... சிறந்த சிவ மதமே பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே, யோகமதே உறும் மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே ... யோக நிலையில் இருக்கும் பெரியவனே, சிவனது குமரனே, குகனே அடியார்களின் செல்வமே, வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா ... வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும் வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியிடம் அன்பு பூண்ட நல்ல அழகிய கணவனே, திருவேற்காடு உறை வேத புரீசுரர் தரு சேயே ... திருவேற்காட்டில் வீற்றிருக்கும் வேத புரீசுரர் பெற்ற குழந்தையே, வேட்டார் மகவான் மகளானவள் ஏடு ஆர் திரு மா மணவா ... வேள்வி நிரம்பிய யாகபதியாகிய இந்திரனுடைய மகளான தேவயானையின் சிறந்த அழகிய மணவாளனே, பொ(ன்)னின் நாட்டார் பெரு வாழ்வு எனவே வரு பெருமாளே. ... பொன்னுலகத்தினரான தேவர்களுடைய செல்வம் என வருகின்ற பெருமாளே.