பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து அணியும் உரமும் மெய்ப் ப்ரபையும் மரு மலர்ப் பதமும் விரவு குக்குடமும் மயிலும்
உள் பரிவாலே படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து
எவரும் மகிழ் உற தரும நெறியின் மெய்ப் பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடிப் படையாதே
சருவி இனிய நட்பு உறவு சொ(ல்)லி முதல் பழகும் அவர் எனப் பதறி
அருகினில் சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் மானார்
தமது ம்ருகமதக் களப புளகிதச் சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழ் உறத் தழுவி
அவசம் உற்று உருகி மருள் எனத் திரிவேனோ
கரிய நிறம் உடை கொடிய அசுரரை கெருவ(ம்) மதம் ஒழித்து உடல்கள் துணி பட
கழுகு பசி கெடக் கடுகி அயில் விடுத்திடு தீரா
கமல அயனும் அச்சுதனும் வருணன் அக்கினியும் நமனும் அக் கரியில் உறையும் மெய்க் க(ண்)ணனும் அமரர் அத்தனையும் நிலை பெறப் புரிவோனே
இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து
உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே
இசையும் அரு மறைப் பொருள்கள் தினம் உரைத்து
அவனி தனில் எழில் கரும முனிவருக்கு இனிய
கர புரப் பதியில் அறு முகப் பெருமாளே.
உன்னைப் போற்றி உனது அழகிய கைகளையும், திருமுகத்தையும், முத்து மாலை அணிந்த திருமார்பையும், உடல் ஒளியையும், நறு மணம் வீசும் திருவடிகளையும், உன்னிடம் உள்ள சேவலையும், மயிலையும் இதயத்துள் அன்புடன் அழுந்திப் படிய என் மனத்தில் நிறுத்தி, திடமான சிவ பக்தி மிகப் பெற்று, யாவரும் மகிழ்ச்சி அடையும்படி அற நெறியில் நின்று, உண்மையான பசியுடன் வருகின்றவர்களுக்கு ஒரு பிடி அளவேனும் உணவு இடாமல், கொஞ்சிக் குலாவி, இனிமையான உறவு காட்டும் வார்த்தைகளைச் சொல்லி, முதலிலேயே பழகியவர்கள் போல மாய்மாலம் செய்து, அருகில் இருந்து, காம லீலைகள் புரிந்து, அதற்குத் தக்கதான பொருளை அபகரிக்கும் பொது மகளிருடைய கஸ்தூரியும் சந்தனமும் சேர்ந்த கலவை கொண்ட, புளகாங்கிதம் தருவதுமான, மலையைப் போன்ற மார்பகங்களில் மகிழ்ச்சியுடன் தழுவி, தன் வசம் இழந்து மனம் உருகி அந்த மோக மயக்கத்துடன் திரிவேனோ? கறுத்த நிறமுள்ள கொடுமை வாய்ந்த அசுரர்களின் கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழித்து அவர்களின் உடல்கள் துண்டுபடவும், (அந்தப் பிணங்களைத் தின்று) கழுகுகள் பசி நீங்கவும், வேகமாக வேலைச் செலுத்திய தீரனே, தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும், வருணனும், அக்கினி தேவனும், யமனும், அந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் ஏறி வரும் உடல் எல்லாம் கண் கொண்ட இந்திரனும், மற்ற எல்லா தேவர்களும் தத்தம் பதவிகள் நிலைக்கப் பெற்று விளங்கச் செய்தவனே, ஒலிக்கின்ற பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்தி வைத்து, புலியின் தோலை உடுத்து, பாம்பாகிய ஆபரணத்தைத் தரித்து, விளக்கம் உற ஊழிக் கூத்து நடனம் செய்யும் சிவ பெருமான் முன்பு ஈன்றருளிய உத்தம வேளே, பொருந்திய அரிய வேதங்களின் பொருள்களை நாள் தோறும் ஆய்ந்து உரைத்து, இப்பூமியில் தமது கடமைகளை அழகாகச் செய்யும் முனிவர்களுக்கு உகந்த தலமாகிய விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.
பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து அணியும் உரமும் மெய்ப் ப்ரபையும் மரு மலர்ப் பதமும் விரவு குக்குடமும் மயிலும் ... உன்னைப் போற்றி உனது அழகிய கைகளையும், திருமுகத்தையும், முத்து மாலை அணிந்த திருமார்பையும், உடல் ஒளியையும், நறு மணம் வீசும் திருவடிகளையும், உன்னிடம் உள்ள சேவலையும், மயிலையும் உள் பரிவாலே படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து ... இதயத்துள் அன்புடன் அழுந்திப் படிய என் மனத்தில் நிறுத்தி, திடமான சிவ பக்தி மிகப் பெற்று, எவரும் மகிழ் உற தரும நெறியின் மெய்ப் பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடிப் படையாதே ... யாவரும் மகிழ்ச்சி அடையும்படி அற நெறியில் நின்று, உண்மையான பசியுடன் வருகின்றவர்களுக்கு ஒரு பிடி அளவேனும் உணவு இடாமல், சருவி இனிய நட்பு உறவு சொ(ல்)லி முதல் பழகும் அவர் எனப் பதறி ... கொஞ்சிக் குலாவி, இனிமையான உறவு காட்டும் வார்த்தைகளைச் சொல்லி, முதலிலேயே பழகியவர்கள் போல மாய்மாலம் செய்து, அருகினில் சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் மானார் ... அருகில் இருந்து, காம லீலைகள் புரிந்து, அதற்குத் தக்கதான பொருளை அபகரிக்கும் பொது மகளிருடைய தமது ம்ருகமதக் களப புளகிதச் சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழ் உறத் தழுவி ... கஸ்தூரியும் சந்தனமும் சேர்ந்த கலவை கொண்ட, புளகாங்கிதம் தருவதுமான, மலையைப் போன்ற மார்பகங்களில் மகிழ்ச்சியுடன் தழுவி, அவசம் உற்று உருகி மருள் எனத் திரிவேனோ ... தன் வசம் இழந்து மனம் உருகி அந்த மோக மயக்கத்துடன் திரிவேனோ? கரிய நிறம் உடை கொடிய அசுரரை கெருவ(ம்) மதம் ஒழித்து உடல்கள் துணி பட ... கறுத்த நிறமுள்ள கொடுமை வாய்ந்த அசுரர்களின் கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழித்து அவர்களின் உடல்கள் துண்டுபடவும், கழுகு பசி கெடக் கடுகி அயில் விடுத்திடு தீரா ... (அந்தப் பிணங்களைத் தின்று) கழுகுகள் பசி நீங்கவும், வேகமாக வேலைச் செலுத்திய தீரனே, கமல அயனும் அச்சுதனும் வருணன் அக்கினியும் நமனும் அக் கரியில் உறையும் மெய்க் க(ண்)ணனும் அமரர் அத்தனையும் நிலை பெறப் புரிவோனே ... தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும், வருணனும், அக்கினி தேவனும், யமனும், அந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் ஏறி வரும் உடல் எல்லாம் கண் கொண்ட இந்திரனும், மற்ற எல்லா தேவர்களும் தத்தம் பதவிகள் நிலைக்கப் பெற்று விளங்கச் செய்தவனே, இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து ... ஒலிக்கின்ற பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்தி வைத்து, உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே ... புலியின் தோலை உடுத்து, பாம்பாகிய ஆபரணத்தைத் தரித்து, விளக்கம் உற ஊழிக் கூத்து நடனம் செய்யும் சிவ பெருமான் முன்பு ஈன்றருளிய உத்தம வேளே, இசையும் அரு மறைப் பொருள்கள் தினம் உரைத்து ... பொருந்திய அரிய வேதங்களின் பொருள்களை நாள் தோறும் ஆய்ந்து உரைத்து, அவனி தனில் எழில் கரும முனிவருக்கு இனிய ... இப்பூமியில் தமது கடமைகளை அழகாகச் செய்யும் முனிவர்களுக்கு உகந்த தலமாகிய கர புரப் பதியில் அறு முகப் பெருமாளே. ... விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.