கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப மேந்து குவடு குழையும் ...... படிகாதல் கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய தேங்கு கலவி யமுதுண் ...... டியல்மாதர் வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும் வாய்ந்த துயிலை மிகவுந் ...... தணியாத வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை நீந்தி அமல அடிவந் ...... தடைவேனோ ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர மோங்கு ததியின் முழுகும் ...... பொருசூரும் ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில துலவுந் ...... தனிவேலா வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக வேங்கை வடிவு மருவுங் ...... குமரேசா வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டு மளவி லுதவும் ...... பெருமாளே.
கோங்க முகையு(ம்) மெலிய வீங்கு புளக களபம் ஏந்து(ம்) குவடு குழையும்படி காதல் கூர்ந்து
குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு
இயல் மாதர் வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத வாஞ்சை உடைய அடிமை
நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ(ம்) மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும் ஓய்ந்து பிரமன் வெருவ
வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே.
கோங்க மரத்தின் மொட்டும் மெலியும்படியாக பருத்து, புளகாங்கிதத்தையும் (சந்தனக்) கலவையையும் கொண்ட மலை போன்ற மார்பகங்கள் குழையும்படியாக காதல் மிகுந்து, தளிர் மலர் விரித்த படுக்கையில் தோய்ந்து குலவுகின்ற இனிமையானதும், நிறைந்ததுமான சேர்க்கை அமுதத்தை உண்டு, அழகிய விலைமாதர்கள் செலுத்திய பாணமாகிய கண்களை மோந்து, பகலும் இரவும் ஏற்படும் தூக்கம் அதிகரித்து, குறைவுபடாத விருப்பம் பூண்ட அடிமையாகிய நான், பெரிய பிறவிக் கடலை நீந்தி, குற்றமற்ற உனது திருவடியை சேரப் பெறுவேனோ? மலை போன்ற பெரிய கப்பல்களும், ஆண் சுறா மீன்களும், அந்த மகர மீன்களும் நிறைந்துள்ள கடலில் (மாமரமாக) முழுகிச் சண்டை செய்த சூரனும் தளர்ச்சி அடைய, பிரமன் அஞ்ச, அழகு அமைந்த கழுகு மலையில் மயில் ஏறி உலவுகின்ற ஒப்பற்ற வேலனே, புலிகள் உள்ள காட்டில் வேடர்கள் திகைக்க, வள்ளியாகிய பெண்ணின் மனம் உருக, வேங்கை மர உருவத்தை எடுத்த குமரேசா, வேண்டி நிற்கும் அடியார்களும் புலவர்களும் உன்னை வேண்ட, வேண்டுதற்கு அருமையான பொருளை (அவர்களுக்கு) வேண்டிய அளவுக்குத் தந்து உதவும் பெருமாளே.
கோங்க முகையு(ம்) மெலிய வீங்கு புளக களபம் ஏந்து(ம்) குவடு குழையும்படி காதல் கூர்ந்து ... கோங்க மரத்தின் மொட்டும் மெலியும்படியாக பருத்து, புளகாங்கிதத்தையும் (சந்தனக்) கலவையையும் கொண்ட மலை போன்ற மார்பகங்கள் குழையும்படியாக காதல் மிகுந்து, குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு ... தளிர் மலர் விரித்த படுக்கையில் தோய்ந்து குலவுகின்ற இனிமையானதும், நிறைந்ததுமான சேர்க்கை அமுதத்தை உண்டு, இயல் மாதர் வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத வாஞ்சை உடைய அடிமை ... அழகிய விலைமாதர்கள் செலுத்திய பாணமாகிய கண்களை மோந்து, பகலும் இரவும் ஏற்படும் தூக்கம் அதிகரித்து, குறைவுபடாத விருப்பம் பூண்ட அடிமையாகிய நான், நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ ... பெரிய பிறவிக் கடலை நீந்தி, குற்றமற்ற உனது திருவடியை சேரப் பெறுவேனோ? ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ(ம்) மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும் ஓய்ந்து பிரமன் வெருவ ... மலை போன்ற பெரிய கப்பல்களும், ஆண் சுறா மீன்களும், அந்த மகர மீன்களும் நிறைந்துள்ள கடலில் (மாமரமாக) முழுகிச் சண்டை செய்த சூரனும் தளர்ச்சி அடைய, பிரமன் அஞ்ச, வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா ... அழகு அமைந்த கழுகு மலையில் மயில் ஏறி உலவுகின்ற ஒப்பற்ற வேலனே, வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா ... புலிகள் உள்ள காட்டில் வேடர்கள் திகைக்க, வள்ளியாகிய பெண்ணின் மனம் உருக, வேங்கை மர உருவத்தை எடுத்த குமரேசா, வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே. ... வேண்டி நிற்கும் அடியார்களும் புலவர்களும் உன்னை வேண்ட, வேண்டுதற்கு அருமையான பொருளை (அவர்களுக்கு) வேண்டிய அளவுக்குத் தந்து உதவும் பெருமாளே.