மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி மட்டு முற்ற கோதை போத ...... முடிசூடி மத்த கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு வட்ட மிட்ட வாரு லாவு ...... முலைமீதே இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை யெத்தி முத்த மாடும் வாயி ...... னிசைபேசி எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி யெய்த்து நித்த மான வீன ...... முறலாமோ துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை தொக்க திக்க தோத தீத ...... வெனவோதச் சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி சொற்கு நிற்கு மாறு தார ...... மொழிவோனே திக்கு மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர் திக்க முட்டி யாடு தீர ...... வடிவேலா செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு செப்பு வெற்பில் சேய தான ...... பெருமாளே.
மைக் கண் இக்கன் வாளி போல உள் க(ள்)ளத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பின் ஊடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி
இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயின் இசை பேசி எட்டு துட்ட மாதர் பாயல் இச்சை உற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்த(ம்) மான ஈனம் உறலாமோ
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓதச் சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தம் ஆடும் ஆதி சொற்கு நிற்கும் மாறு உ(த்)தார(ம்) மொழிவோனே
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே.
மை பூசிய கண் கரும்பு வில்லை உடைய மன்மதனுடைய பாணங்கள் போல வேலை செய்ய, உள்ளே இருக்கும் கள்ளக் குணத்தை வேறாக மறைத்து வைத்து விருப்பம் காட்டி, வாசனை உள்ள மாலையை செவ்வையாக தலை முடியில் அணிந்து, யானையின் மத்தகத்தில் நீண்டதாக இருக்கும் தந்தங்கள் வைத்ததை ஒத்து அழகிய மார்பில் வட்ட வடிவாய் கச்சு அணிந்த மார்பகத்தின் மேல் தடையாக இருக்கும் ஆடை விழ வெட்கப்பட்டு, தம் குறிப்பின் வழி நடக்கும் ஆட்களை வஞ்சகித்து, (தங்களுக்கு இசைந்தவர்களை) முத்தமிடுகின்ற வாயால் உடன் படுதலைப் பேசி அணுகும் துஷ்ட குணம் உள்ள விலைமாதர்களின் படுக்கையில் ஆசைப்பட்டு என்னுடைய உடலும், உயிரும் களைத்துப் போய் நாள் தோறும் அவமானம் அடையலாமோ? துர்க்கை, முக்கிளையாகப் பிரிந்த திரிசூலத்தை ஏந்திய காளியின் செங்கையில் உள்ள தாளத்தின் ஓசை தொக்க திக்க தோத தீத இவ்வாறு சப்திக்க, சுழன்று வெற்றியுடன் பாதங்கள் (சுத்தமான சொக்கம் என்னும்) நடனத்தை ஆடுகின்ற முதல்வராகிய சிவபெருமானுடைய (நீ உபதேசிப்பாயாக என்று சொன்ன) சொல்லுக்கு இணங்கும் மறு மொழியை மொழிந்தவனே, எல்லா திக்குகளிலும், பெரிய வானத்திலும் சென்ற கர்வம் மிகுந்த சூரர்கள் பல வழியாகச் சிதற, அவர்களைத் தாக்கிப் போர் புரிந்த தீரனே, கூரிய வேலாயுதனே, வெட்சி, பிச்சிப்பூ இவைகளால் ஆகிய மாலையை அணிந்த மார்பனே, அறிவுள்ள கொச்சையான சொல் கொஞ்சிப் பேசும் மாதாகிய வள்ளியுடன் பொதிய மலையில், சிவந்த முருகனாக விளங்கும் பெருமாளே.
மைக் கண் இக்கன் வாளி போல உள் க(ள்)ளத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி ... மை பூசிய கண் கரும்பு வில்லை உடைய மன்மதனுடைய பாணங்கள் போல வேலை செய்ய, உள்ளே இருக்கும் கள்ளக் குணத்தை வேறாக மறைத்து வைத்து விருப்பம் காட்டி, வாசனை உள்ள மாலையை செவ்வையாக தலை முடியில் அணிந்து, மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பின் ஊடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி ... யானையின் மத்தகத்தில் நீண்டதாக இருக்கும் தந்தங்கள் வைத்ததை ஒத்து அழகிய மார்பில் வட்ட வடிவாய் கச்சு அணிந்த மார்பகத்தின் மேல் தடையாக இருக்கும் ஆடை விழ வெட்கப்பட்டு, இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயின் இசை பேசி எட்டு துட்ட மாதர் பாயல் இச்சை உற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்த(ம்) மான ஈனம் உறலாமோ ... தம் குறிப்பின் வழி நடக்கும் ஆட்களை வஞ்சகித்து, (தங்களுக்கு இசைந்தவர்களை) முத்தமிடுகின்ற வாயால் உடன் படுதலைப் பேசி அணுகும் துஷ்ட குணம் உள்ள விலைமாதர்களின் படுக்கையில் ஆசைப்பட்டு என்னுடைய உடலும், உயிரும் களைத்துப் போய் நாள் தோறும் அவமானம் அடையலாமோ? துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓதச் சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தம் ஆடும் ஆதி சொற்கு நிற்கும் மாறு உ(த்)தார(ம்) மொழிவோனே ... துர்க்கை, முக்கிளையாகப் பிரிந்த திரிசூலத்தை ஏந்திய காளியின் செங்கையில் உள்ள தாளத்தின் ஓசை தொக்க திக்க தோத தீத இவ்வாறு சப்திக்க, சுழன்று வெற்றியுடன் பாதங்கள் (சுத்தமான சொக்கம் என்னும்) நடனத்தை ஆடுகின்ற முதல்வராகிய சிவபெருமானுடைய (நீ உபதேசிப்பாயாக என்று சொன்ன) சொல்லுக்கு இணங்கும் மறு மொழியை மொழிந்தவனே, திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடிவேலா ... எல்லா திக்குகளிலும், பெரிய வானத்திலும் சென்ற கர்வம் மிகுந்த சூரர்கள் பல வழியாகச் சிதற, அவர்களைத் தாக்கிப் போர் புரிந்த தீரனே, கூரிய வேலாயுதனே, செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே. ... வெட்சி, பிச்சிப்பூ இவைகளால் ஆகிய மாலையை அணிந்த மார்பனே, அறிவுள்ள கொச்சையான சொல் கொஞ்சிப் பேசும் மாதாகிய வள்ளியுடன் பொதிய மலையில், சிவந்த முருகனாக விளங்கும் பெருமாளே.