கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி
கன அளக பந்தியாகிய நிழல் தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகில(ம்) மயில் காடை தொனி எழ
விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில (அ)வச இன்ப மேவுதல் ஒழிவேனோ
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழ எழு கடல் பயந்து கோ என அதி கோப எம படரும் என் செய்வோம் என நடு நடு நடுங்க வேல் விடு இரண முக சண்ட மாருத மயிலோனே
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே
வகை வகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே.
வலிமையுள்ளதும், அகலமானதும், குடத்துக்கு ஒப்பானதுமான வளர்கின்ற இரண்டு மார்பகங்களின் மேலே விழுகின்ற புணர்ச்சி தருகின்ற விலைமாதருடன் உறவு பூண்டு, கனத்த கூந்தல் கட்டாகிய நிழலில் இருந்து, தேனின் இனிப்பைத் தருகின்ற கொவ்வைக் கனி போன்ற வாயிதழை மென்று, காம சாஸ்திரப்படி தட்டுகை என்னும் செயல் செய்து, உடுக்கை போன்ற இடை துவள, வாள் போன்ற கண்கள் குண்டலங்கள் அளவும் சென்று போர் புரிய, முழுதும் மூடியிருக்கும் புடவை தளர்ந்து விழ, வண்டு, குயில், மயில், காடை இவைகளின் புட்குரல் ஒலிக்க, விரும்பி, கூர்மையான வளைந்த நகக் குறிகளை வைத்து, தோளின் மேல் தூங்கும் மயக்க இன்பத்தை நாடுதலை நான் தவிர்க்க மாட்டேனோ? இடி போல் முழங்கும் பேரிகையை ஒலித்துப் போர் செய்யும் அசுரர்கள் தோல்வி உற்று முறிபட்டுப் பொடியாக, ஏழு கடல்களும் அஞ்சி கோ என்று ஒலிக்க, மிகவும் கோபமுள்ள யம தூதர்களும் என்ன செய்வோம் என்று மிக நடு நடுங்க, வேலைச் செலுத்தி, போர்க்களத்தில் பெருங்காற்று போலச் சிறகை வீசிப் பறக்கும் மயில் மீது அமர்ந்த வீரனே, அழகிய அக்கினீசுரர் என்னும் சிவபெருமானும், பொய்யாக் கணபதியும் சிறந்து விளங்கும் இடமாகிய வயலூரிலும், குன்றக்குடியிலும் வாழ்பவனே, வித விதமாக உன்னைப் புகழ்ந்து இந்திரன், திருமால், பிரமன் ஆகியோரும் சந்திரனும் சூரியனும் வழிபடுவதைப் பார்த்து அவர்களுக்கு வாழ்வு அருளிய பெருமாளே.
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி ... வலிமையுள்ளதும், அகலமானதும், குடத்துக்கு ஒப்பானதுமான வளர்கின்ற இரண்டு மார்பகங்களின் மேலே விழுகின்ற புணர்ச்சி தருகின்ற விலைமாதருடன் உறவு பூண்டு, கன அளக பந்தியாகிய நிழல் தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே ... கனத்த கூந்தல் கட்டாகிய நிழலில் இருந்து, தேனின் இனிப்பைத் தருகின்ற கொவ்வைக் கனி போன்ற வாயிதழை மென்று, காம சாஸ்திரப்படி தட்டுகை என்னும் செயல் செய்து, துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகில(ம்) மயில் காடை தொனி எழ ... உடுக்கை போன்ற இடை துவள, வாள் போன்ற கண்கள் குண்டலங்கள் அளவும் சென்று போர் புரிய, முழுதும் மூடியிருக்கும் புடவை தளர்ந்து விழ, வண்டு, குயில், மயில், காடை இவைகளின் புட்குரல் ஒலிக்க, விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில (அ)வச இன்ப மேவுதல் ஒழிவேனோ ... விரும்பி, கூர்மையான வளைந்த நகக் குறிகளை வைத்து, தோளின் மேல் தூங்கும் மயக்க இன்பத்தை நாடுதலை நான் தவிர்க்க மாட்டேனோ? இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழ எழு கடல் பயந்து கோ என அதி கோப எம படரும் என் செய்வோம் என நடு நடு நடுங்க வேல் விடு இரண முக சண்ட மாருத மயிலோனே ... இடி போல் முழங்கும் பேரிகையை ஒலித்துப் போர் செய்யும் அசுரர்கள் தோல்வி உற்று முறிபட்டுப் பொடியாக, ஏழு கடல்களும் அஞ்சி கோ என்று ஒலிக்க, மிகவும் கோபமுள்ள யம தூதர்களும் என்ன செய்வோம் என்று மிக நடு நடுங்க, வேலைச் செலுத்தி, போர்க்களத்தில் பெருங்காற்று போலச் சிறகை வீசிப் பறக்கும் மயில் மீது அமர்ந்த வீரனே, வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே ... அழகிய அக்கினீசுரர் என்னும் சிவபெருமானும், பொய்யாக் கணபதியும் சிறந்து விளங்கும் இடமாகிய வயலூரிலும், குன்றக்குடியிலும் வாழ்பவனே, வகை வகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே. ... வித விதமாக உன்னைப் புகழ்ந்து இந்திரன், திருமால், பிரமன் ஆகியோரும் சந்திரனும் சூரியனும் வழிபடுவதைப் பார்த்து அவர்களுக்கு வாழ்வு அருளிய பெருமாளே.