இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று
இணங்காப் பசிப் பொங்கி அனல் மூழ்கி
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு
இயல் தண் தமிழ் நூலின் உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா
தயங்காத் துளங்காத் திடப் புன் கவி பாடி
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்று ஏத்து உறும் பால் குணக்கு அன்புறலாமோ
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாட்கள் அணைந்தாட்கு அணித் திண் புயம் ஈவாய்
கரும்போர்க்கு அரும்போரக் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா
அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு
உணற்கு ஒன்று இலதாகி அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு
அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே.
எவரிடம் போனால் பணம் கிடைக்கும் என்று தக்க இடம் பார்த்து, இடம் பார்த்து, இதமான மொழிகளை அவர்கள் கேட்கும்படிச் சொல்லி, இரத்தல் தொழிலை மேற்கொண்டு, அத்தொழிலில் இணங்கி (மனம் பொருந்தி), பசியாகிய பொங்கி எழுகின்ற நெருப்பில் மூழ்கி, அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம், தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட மனத்துடன் பாட்டுக்களை அமைத்து, வாட்டமுற்று மனம் கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான பாடல்களைப் பாடி, அச்சமுற்று ஒதுங்கி, மனம் வருந்தி, பதுங்கியும் போய் தான் பாடிய பாடல்களைச் சொல்லிப் புகழும் இயல்பினைக் கொண்ட குணத்துக்கு நான் ஆசை வைக்கலாமோ? மத யானை காட்டில் எதிர்ப்பட ஆபத்தை உணர்ந்து கொண்டவளாய் உன்னுடைய மேன்மை பொருந்திய திருவடிகளை அணைந்த வள்ளிக்கு அழகிய வலிமையான திருப்புயங்களைத் தந்தவனே, கரும்பு வில்லை உடைய மன்மதனுக்கு அரிய போராக நெற்றிக் கண்ணைக் காட்டிய சிவபெருமான் கண்டு போற்றும் திருச்செங்கோட்டில் விளங்கி நிற்கும் ஒளி வீசும் வேலனே, உன்னை அடைக்கலமாக அடைந்தவர்க்கும், உனக்காக உருகி மெலிந்தவர்களுக்கும், உன்னிடம் கருணை உள்ளம் கொண்டவர்களுக்கும், மன அமைதி கொண்டவர்களுக்கும், பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தவர்களுக்கும், உண்பதற்கு ஒன்றும் இல்லாதவராகி அலைகின்றவர்களுக்கும், நிலை குலைந்து நிற்பவர்களுக்கும், கவலை உற்று வருந்துபவர்களுக்கும், துன்பம் உற்றவர்களுக்கும், ஞானிகளுக்கும் திருவருள் பாலிக்கும் பெருமாளே.
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று ... எவரிடம் போனால் பணம் கிடைக்கும் என்று தக்க இடம் பார்த்து, இடம் பார்த்து, இதமான மொழிகளை அவர்கள் கேட்கும்படிச் சொல்லி, இரத்தல் தொழிலை மேற்கொண்டு, இணங்காப் பசிப் பொங்கி அனல் மூழ்கி ... அத்தொழிலில் இணங்கி (மனம் பொருந்தி), பசியாகிய பொங்கி எழுகின்ற நெருப்பில் மூழ்கி, இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு ... அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம், இயல் தண் தமிழ் நூலின் உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா ... தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட மனத்துடன் பாட்டுக்களை அமைத்து, தயங்காத் துளங்காத் திடப் புன் கவி பாடி ... வாட்டமுற்று மனம் கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான பாடல்களைப் பாடி, ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்று ஏத்து உறும் பால் குணக்கு அன்புறலாமோ ... அச்சமுற்று ஒதுங்கி, மனம் வருந்தி, பதுங்கியும் போய் தான் பாடிய பாடல்களைச் சொல்லிப் புகழும் இயல்பினைக் கொண்ட குணத்துக்கு நான் ஆசை வைக்கலாமோ? கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாட்கள் அணைந்தாட்கு அணித் திண் புயம் ஈவாய் ... மத யானை காட்டில் எதிர்ப்பட ஆபத்தை உணர்ந்து கொண்டவளாய் உன்னுடைய மேன்மை பொருந்திய திருவடிகளை அணைந்த வள்ளிக்கு அழகிய வலிமையான திருப்புயங்களைத் தந்தவனே, கரும்போர்க்கு அரும்போரக் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா ... கரும்பு வில்லை உடைய மன்மதனுக்கு அரிய போராக நெற்றிக் கண்ணைக் காட்டிய சிவபெருமான் கண்டு போற்றும் திருச்செங்கோட்டில் விளங்கி நிற்கும் ஒளி வீசும் வேலனே, அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு ... உன்னை அடைக்கலமாக அடைந்தவர்க்கும், உனக்காக உருகி மெலிந்தவர்களுக்கும், உன்னிடம் கருணை உள்ளம் கொண்டவர்களுக்கும், மன அமைதி கொண்டவர்களுக்கும், பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தவர்களுக்கும், உணற்கு ஒன்று இலதாகி அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு ... உண்பதற்கு ஒன்றும் இல்லாதவராகி அலைகின்றவர்களுக்கும், நிலை குலைந்து நிற்பவர்களுக்கும், கவலை உற்று வருந்துபவர்களுக்கும், துன்பம் உற்றவர்களுக்கும், அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே. ... ஞானிகளுக்கும் திருவருள் பாலிக்கும் பெருமாளே.