கரை அற உருகுதல் தரு கயல் விழியினர்
கண்டு ஆன செம் சொல் மடமாதர்
கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும்
உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உன் பாத கஞ்ச மலர் மீதே
உரவொடு புனை தர நினைதரும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ
வரை இரு துணி பட வளை படு சுரர் குடி வந்து ஏற இந்த்ர புரி வாழ
மத வித கஜ ரத துரக பத(தா)யின் வன் சேனை மங்க
முது மீன திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர்வேலா
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே.
எல்லை கடந்து உருகும்படி செய்யும் கயல் மீன் போன்ற கண்களை உடையவரும், கற்கண்டு போன்ற இனிய பேச்சுக்களை உடையவரும் ஆகிய விலைமாதர்களின் இணைப்பிலே மூழ்கிய வழியில் அறிவு கலங்கி மயங்குகின்ற, வினைக்கு ஈடான, நானும், என் சொற்களையும், அறிவையும், உயிரையும், உணர்வையும் உனது திருவடித் தாமரையின் மேல் உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டி, உன்னை எப்போதும் நினைக்கின்ற அடியார்களுடன் ஒன்றாகும்படியான பாக்கியத்தை என்று பெறுவேனோ? கிரெளஞ்ச மலை இரண்டு கூறுபடவும், சிறையில் அடைபட்டிருந்த தேவர்கள் தங்கள் ஊரில் குடியேறவும், தேவேந்திரனது பொன்னுலகம் வாழவும், மதம் கொண்ட யானை, தேர், குதிரை, காலாட்படை இவைகளைக் கொண்ட வலிமை வாய்ந்த அசுரர் சேனை அழிந்துபடவும், முதிய மீன்கள் உள்ள அலைகள் நிறைந்த கடல் அலறி முறையிடவும், அசுரர்கள் திண்டாட்டம் கொள்ளவும் வெற்றி கொண்ட வேலை உடையவனே, பூதலத்தின் வறுமை கெடும்படியான விளைச்சல்கள் உடைய வயல்கள் சூழ்ந்த திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் ... எல்லை கடந்து உருகும்படி செய்யும் கயல் மீன் போன்ற கண்களை உடையவரும், கண்டு ஆன செம் சொல் மடமாதர் ... கற்கண்டு போன்ற இனிய பேச்சுக்களை உடையவரும் ஆகிய விலைமாதர்களின் கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் ... இணைப்பிலே மூழ்கிய வழியில் அறிவு கலங்கி மயங்குகின்ற, வினைக்கு ஈடான, நானும், உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உன் பாத கஞ்ச மலர் மீதே ... என் சொற்களையும், அறிவையும், உயிரையும், உணர்வையும் உனது திருவடித் தாமரையின் மேல் உரவொடு புனை தர நினைதரும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ ... உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டி, உன்னை எப்போதும் நினைக்கின்ற அடியார்களுடன் ஒன்றாகும்படியான பாக்கியத்தை என்று பெறுவேனோ? வரை இரு துணி பட வளை படு சுரர் குடி வந்து ஏற இந்த்ர புரி வாழ ... கிரெளஞ்ச மலை இரண்டு கூறுபடவும், சிறையில் அடைபட்டிருந்த தேவர்கள் தங்கள் ஊரில் குடியேறவும், தேவேந்திரனது பொன்னுலகம் வாழவும், மத வித கஜ ரத துரக பத(தா)யின் வன் சேனை மங்க ... மதம் கொண்ட யானை, தேர், குதிரை, காலாட்படை இவைகளைக் கொண்ட வலிமை வாய்ந்த அசுரர் சேனை அழிந்துபடவும், முது மீன திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர்வேலா ... முதிய மீன்கள் உள்ள அலைகள் நிறைந்த கடல் அலறி முறையிடவும், அசுரர்கள் திண்டாட்டம் கொள்ளவும் வெற்றி கொண்ட வேலை உடையவனே, ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... பூதலத்தின் வறுமை கெடும்படியான விளைச்சல்கள் உடைய வயல்கள் சூழ்ந்த திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.