வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு(ம்) கொண்டல் அதனோடும்
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும்
கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி
கொந்து ஆர் அரும்பு(ம்) நின் தாள் மறந்து குன்றாமல் உன் தன் அருள் தாராய்
பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா
செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே.
வண்டுகள் தேனை உண்டு மயக்கத்துடன் வந்து மொய்க்கின்ற, மேகம் போன்ற, கூந்தலுடன், வளப்பம் பொருந்திய மன்மதனின் (மலர்ப்) பாணங்களின் திறனைக் குறைக்கவல்ல, வலிய போரை எதிர்த்த கண்ணாகிய வேலையும் கொண்டு வளைத்துப் போட்டு, பார்த்தவர்கள் சஞ்சலம் அடைய நிற்கின்ற விலைமாதர்களின் தென்னங் குரும்பை ஒத்த மார்பினில் மனம் பொருந்தி, பூங்கொத்துக்கள் நிரம்பத் தோன்றும் உனது திருவடியை மறந்து நான் அழிவுறாமல் உனது திருவருளைத் தந்து அருளுக. பண்டை நாள் முதலாக, சக்கரம், சங்கு இவைகளுடன் பாற்கடலில் துயில் கொள்ளும் தன்மை வாய்ந்த திருமால் மகிழும் மருகனே, இசையுடன் இணைந்து உள்ளம் நெகிழ அன்பான துதிகளை ஓதும் அடியார்களின் பக்கத்தில் நிற்கும் குமரேசனே, (அசுரர்களைச்) சிதற அடித்தும், தேவர்கள் கொண்டாடவும், கனகசபையில் நின்று கூத்தாடுகின்ற சிவபெருமான் உள்ளத்தில் மகிழவும் செய்த செல்வமே, செந்நெல் மிகுந்து வளர, மேகங்கள் சஞ்சரிக்கும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.
வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு(ம்) கொண்டல் அதனோடும் ... வண்டுகள் தேனை உண்டு மயக்கத்துடன் வந்து மொய்க்கின்ற, மேகம் போன்ற, கூந்தலுடன், வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் ... வளப்பம் பொருந்திய மன்மதனின் (மலர்ப்) பாணங்களின் திறனைக் குறைக்கவல்ல, வலிய போரை எதிர்த்த கண்ணாகிய வேலையும் கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி ... கொண்டு வளைத்துப் போட்டு, பார்த்தவர்கள் சஞ்சலம் அடைய நிற்கின்ற விலைமாதர்களின் தென்னங் குரும்பை ஒத்த மார்பினில் மனம் பொருந்தி, கொந்து ஆர் அரும்பு(ம்) நின் தாள் மறந்து குன்றாமல் உன் தன் அருள் தாராய் ... பூங்கொத்துக்கள் நிரம்பத் தோன்றும் உனது திருவடியை மறந்து நான் அழிவுறாமல் உனது திருவருளைத் தந்து அருளுக. பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே ... பண்டை நாள் முதலாக, சக்கரம், சங்கு இவைகளுடன் பாற்கடலில் துயில் கொள்ளும் தன்மை வாய்ந்த திருமால் மகிழும் மருகனே, பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா ... இசையுடன் இணைந்து உள்ளம் நெகிழ அன்பான துதிகளை ஓதும் அடியார்களின் பக்கத்தில் நிற்கும் குமரேசனே, செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே ... (அசுரர்களைச்) சிதற அடித்தும், தேவர்கள் கொண்டாடவும், கனகசபையில் நின்று கூத்தாடுகின்ற சிவபெருமான் உள்ளத்தில் மகிழவும் செய்த செல்வமே, செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... செந்நெல் மிகுந்து வளர, மேகங்கள் சஞ்சரிக்கும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.