பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து
பைம் தார் புனைந்த குழல் மீதே
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற
பங்கேருகம் கொள் முகம் மீதே
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி
வன் பாதகம் செய் தனம் மீதே
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து
மங்காமல் உன் தன் அருள் தாராய்
கந்தா அரன் தன் மைந்தா விளங்கு
கன்று ஆ முகுந்தன் மருகோனே
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட
கண்டா அரம்பை மணவாளா
செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு
திண் தோள் நிரம்ப அணிவோனே
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு
செங்கோடு அமர்ந்த பெருமாளே.
பந்தாட்டம் விளையாடி அழகிய கை நொந்துள்ள பெண்கள் ஆசையோடு அணிந்த பசுமை வாய்ந்த பூ மாலையைச் சூடிய கூந்தலின் மீதும், அழகு நிறைந்த வண்டுகள் இசை பாடுகின்ற தாமரை போன்ற முகத்தின் மேலும், மந்தாரம் என்னும் செவ்வரத்தம் பூவின் வாசனையைக் கொண்ட சந்தனம், முத்து மாலை இவைகளை அணிந்தனவாய், கொடிய பாவங்களுக்கு இடமான மார்பகங்களின் மேலும், நிரம்ப ஆசை பூண்டு, ஆவி விண்டு உயிர் பிரிவது போல வருந்தி, நான் சோர்வு அடையாமல் உன்னுடைய திருவருளைத் தந்து அருள்வாய். கந்தனே, சிவபெருமானுடைய குமாரனே, விளங்குகின்ற கன்றுகளை உடைய பசுக்களுக்குப் பிரியமானவர் ஆகிய கண்ணனின் மருகனே, கோபித்து, மலையாகிய கிரெளஞ்சம் ஒன்றை வழி திறக்கச் செய்யுமாறு வேலைச் செலுத்திய வீரனே, தேவலோகப் பெண்ணான தேவயானையின் கணவனே, சிவந்த மகரந்தத் தூள் பொருந்திய பூங் கொத்துக்கள் அடர்ந்த கடப்ப மாலையை உறுதியுள்ள தோள்களில் மிகவும் விரும்பி அணிபவனே, வலிய குரங்குகள் கரடியுடன் தூங்குகின்ற திருச் செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.
பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே ... பந்தாட்டம் விளையாடி அழகிய கை நொந்துள்ள பெண்கள் ஆசையோடு அணிந்த பசுமை வாய்ந்த பூ மாலையைச் சூடிய கூந்தலின் மீதும், பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே ... அழகு நிறைந்த வண்டுகள் இசை பாடுகின்ற தாமரை போன்ற முகத்தின் மேலும், மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே ... மந்தாரம் என்னும் செவ்வரத்தம் பூவின் வாசனையைக் கொண்ட சந்தனம், முத்து மாலை இவைகளை அணிந்தனவாய், கொடிய பாவங்களுக்கு இடமான மார்பகங்களின் மேலும், மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து ... நிரம்ப ஆசை பூண்டு, ஆவி விண்டு உயிர் பிரிவது போல வருந்தி, மங்காமல் உன் தன் அருள் தாராய் ... நான் சோர்வு அடையாமல் உன்னுடைய திருவருளைத் தந்து அருள்வாய். கந்தா அரன் தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே ... கந்தனே, சிவபெருமானுடைய குமாரனே, விளங்குகின்ற கன்றுகளை உடைய பசுக்களுக்குப் பிரியமானவர் ஆகிய கண்ணனின் மருகனே, கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா ... கோபித்து, மலையாகிய கிரெளஞ்சம் ஒன்றை வழி திறக்கச் செய்யுமாறு வேலைச் செலுத்திய வீரனே, தேவலோகப் பெண்ணான தேவயானையின் கணவனே, செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே ... சிவந்த மகரந்தத் தூள் பொருந்திய பூங் கொத்துக்கள் அடர்ந்த கடப்ப மாலையை உறுதியுள்ள தோள்களில் மிகவும் விரும்பி அணிபவனே, திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... வலிய குரங்குகள் கரடியுடன் தூங்குகின்ற திருச் செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.