மேகம் எனும் குழல் சாய்த்து இரு கோகனகம் கொடு கோத்து
அணை மேல் விழுகின்ற பராக்கினில் உடை சோர
மேகலையும் தனி போய்த் தனியே கரணங்களும் ஆய்க் கயல் வேல் விழியும் குவியா
குரல் மயில் காடை கோகிலம் என்று எழ போய்க் கனி வாய் அமுது உண்டு
உருகாக் களி கூர உடன் பிரியாக் கலவியில் மூழ்கிக் கூடி முயங்கி
விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில் கூரினும் அம்புய தாள்துணை மறவேனே
மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில் மூ உலகும் தொழுது ஏத்திட உறைவோனே
மூ திசை முன்பு ஒரு கால் தட மேருவை அம்பினில் வீழ்த்திய மோகன
சங்க அரி வாழ்த்திட மதியாமல் ஆகம் மடிந்திட வேல் கொண்டு சூரனை வென்று
அடல் போய்த் தணியாமையின் வென்று
அவனால் பிறகிடு தேவர் ஆதி இளந்தலை காத்து அரசாள அவன் சிறை மீட்டு
அவன் ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே.
மேகத்தைப் போல் கருமையான கூந்தலைப் பறக்கவிட்டு, இரண்டு தாமரை போன்ற கண்களால் கவ்வி இழுத்து, படுக்கையின் மேல் (காமுகரை) வீழ்த்துகின்ற விளையாட்டில் ஆடை நெகிழ, மேகலை என்னும் இடை அணியும் தனியாகக் கழல, ஒன்றுபட்டு இந்திரியங்களும் இயங்க, கயல் மீன், வேல் போன்ற கண்களும் குவிந்து மூட, குரலானது மயில், காடை, குயில் என்ற பறவைகளின் குரலில் ஒலிக்க, சென்று கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, உருகி, மகிழ்ச்சி மிக கூடவே இருந்து, நீங்குதல் இல்லாத இணைப்பில் முழுகி, கூடித் தழுவி, களைத்துப் போய் பாரமான மார்பகங்களின் மீது துயிலுதல் மிகக் கொண்டாலும், என் உறுதுணையாகிய உனது தாமரைத் திருவடிகள் இரண்டையும் மறக்க மாட்டேன். மிக்க ஆரவாரத்துடன் பேரிகைகள் பேரொலி செய்ய விராலி மலையின் கோயிலில் மூன்று உலகங்களும் தொழுது போற்ற உறைபவனே, வட திசையில் முன்பு ஒரு முறை மலையாகிய மேருவை (செண்டு என்ற) அம்பால் வீழ்த்திய வசீகரனே, சங்கை ஏந்திய திருமால் உனது வலிமையை வாழ்த்திட, (சூரனைப்) பொருட்படுத்தாமல் அவனது உடல் அழியும்படி வேலாயுதத்தால் சூரனை வென்று, (திக்கு விஜயத்தில்) போருக்குச் சென்று, குறைவு இல்லாதபடி (பல அசுரரையும்) வென்று, அந்தச் சூரனால் பயந்து ஓடிய தேவர்களின் தலைவனான இந்திரனுடைய மகனாகிய ஜயந்தனைக் காத்து, அரசாட்சி புரியும்படி அவனைச் சிறையினின்றும் விடுவித்து, அவன் ஆளும் விண்ணுலகில் மீண்டும் குடியேற்றி வைத்த பெருமாளே.
மேகம் எனும் குழல் சாய்த்து இரு கோகனகம் கொடு கோத்து ... மேகத்தைப் போல் கருமையான கூந்தலைப் பறக்கவிட்டு, இரண்டு தாமரை போன்ற கண்களால் கவ்வி இழுத்து, அணை மேல் விழுகின்ற பராக்கினில் உடை சோர ... படுக்கையின் மேல் (காமுகரை) வீழ்த்துகின்ற விளையாட்டில் ஆடை நெகிழ, மேகலையும் தனி போய்த் தனியே கரணங்களும் ஆய்க் கயல் வேல் விழியும் குவியா ... மேகலை என்னும் இடை அணியும் தனியாகக் கழல, ஒன்றுபட்டு இந்திரியங்களும் இயங்க, கயல் மீன், வேல் போன்ற கண்களும் குவிந்து மூட, குரல் மயில் காடை கோகிலம் என்று எழ போய்க் கனி வாய் அமுது உண்டு ... குரலானது மயில், காடை, குயில் என்ற பறவைகளின் குரலில் ஒலிக்க, சென்று கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, உருகாக் களி கூர உடன் பிரியாக் கலவியில் மூழ்கிக் கூடி முயங்கி ... உருகி, மகிழ்ச்சி மிக கூடவே இருந்து, நீங்குதல் இல்லாத இணைப்பில் முழுகி, கூடித் தழுவி, விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில் கூரினும் அம்புய தாள்துணை மறவேனே ... களைத்துப் போய் பாரமான மார்பகங்களின் மீது துயிலுதல் மிகக் கொண்டாலும், என் உறுதுணையாகிய உனது தாமரைத் திருவடிகள் இரண்டையும் மறக்க மாட்டேன். மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில் மூ உலகும் தொழுது ஏத்திட உறைவோனே ... மிக்க ஆரவாரத்துடன் பேரிகைகள் பேரொலி செய்ய விராலி மலையின் கோயிலில் மூன்று உலகங்களும் தொழுது போற்ற உறைபவனே, மூ திசை முன்பு ஒரு கால் தட மேருவை அம்பினில் வீழ்த்திய மோகன ... வட திசையில் முன்பு ஒரு முறை மலையாகிய மேருவை (செண்டு என்ற) அம்பால் வீழ்த்திய வசீகரனே, சங்க அரி வாழ்த்திட மதியாமல் ஆகம் மடிந்திட வேல் கொண்டு சூரனை வென்று ... சங்கை ஏந்திய திருமால் உனது வலிமையை வாழ்த்திட, (சூரனைப்) பொருட்படுத்தாமல் அவனது உடல் அழியும்படி வேலாயுதத்தால் சூரனை வென்று, அடல் போய்த் தணியாமையின் வென்று ... (திக்கு விஜயத்தில்) போருக்குச் சென்று, குறைவு இல்லாதபடி (பல அசுரரையும்) வென்று, அவனால் பிறகிடு தேவர் ஆதி இளந்தலை காத்து அரசாள அவன் சிறை மீட்டு ... அந்தச் சூரனால் பயந்து ஓடிய தேவர்களின் தலைவனான இந்திரனுடைய மகனாகிய ஜயந்தனைக் காத்து, அரசாட்சி புரியும்படி அவனைச் சிறையினின்றும் விடுவித்து, அவன் ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே. ... அவன் ஆளும் விண்ணுலகில் மீண்டும் குடியேற்றி வைத்த பெருமாளே.