மாலாசை கோபம் ஓயாதெ நாளும் மாயா விகார.....வழியேசெல் மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவு.....மினிநீயே நாலான வேத நூல் ஆக மாதி நானோதி னேனு.....மிலை வீணே நாள்போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம்.....அருள்வாயே பாலா கலார ஆமோத லேப பாடீர வாக.....அணிமீதே பாதாள பூமி யாதார மீன பானீய மேலை.....வயலூரா வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத.....பதிசேயே வீரா கடோர சூராரியே செவேளே சுரேசர்.....பெருமாளே.
மயக்கம், ஆசை, கோபம் இவையெல்லாம் ஒய்ச்சல் இல்லாமல் நாள்தோறும் பிரபஞ்ச மாயாவிகார வழியிலே போகின்ற மகாபாவி, துர்க்குணம் உள்ளவன்தான் நானெனிலும், நாதனே, தாயும், தந்தையும் இனி நீதான் எனக்கு நான்கு வேத நூல்களையும், ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும், நான் படித்ததும் இல்லை. வீணாக வாழ்நாள் போய் விடாமல் முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட நிலைத்த ஞானோபதேசத்தை அருள்வாயே, பாலனே, செங்குவளை மலர்ப் பிரியனே, ஆபரணங்களின் மேல் சந்தனம் பூசிய அழகனே, பாதாளம், பூமியிரண்டுக்கும் ஆதாரமாய் உள்ளவனே, மீனினங்களும் தண்ணீரும் நிறைந்த மேற்கு வயலூரில் குடிகொண்டவனே, வேலனே, விராலிமலைச் செல்வனே, திரளான பேய்கள், பூதகணங்கள் வணங்கும் தலைவன் (சிவன்) குமாரனே, வீரனே, கொடுமையான சூரனுக்குப் பகைவனே, செவ்வேளே, தேவர்களுக்கு ஈசனே, பெருமாளே.