கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் கனவிய கொண்டை குலைந்து அலைந்திட
அதி பாரக் களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்பு செய் கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா
இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும் படி இதவிய உந்தி எனும் தடம் தனில் உற மூழ்கி
இனியது ஒர் இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய்
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக
குவிந்து மலர்ந்த பங்கய வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி மலையில் விளங்கிய கந்த
என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்றனை வழி வழி அன்பு செய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே.
கையும், நகக் குறி கொண்ட கழுத்தும் ஒருங்கே எழுந்தும், சுருண்டு, வண்டு நெருங்கிய பெருமை வாய்ந்த கூந்தல் குலைந்து அசையவும், அதிக கனம் வாய்ந்த, கலவை நறு மணம் மிக்க தனங்கள் நெகிழ்ந்து அசையும்படியும் இணைந்து, காம மயக்கில் மயங்கி அன்பு காட்டும் கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் உண்டு, சோர்வு உற்று பஞ்சு மெத்தையின் மீது வீழ்ந்து, வாயூறு நீரைப் பருகி, பொருந்திய கரிய மீன் போன்ற கண்கள் ஒன்றுபட்டுச் சிவந்து குவியுமாறு, இன்பத்தைத் தரும் கொப்பூழ் என்னும் குளத்தில் பொருந்தி முழுகி, இனிமை தரும் ஓர் இன்பம் உண்டாக அதை அனுபவித்து, பொய் நிறைந்த பொது மகளிர் வசம் ஈடுபட்ட என் இளமை முதுமையாக மாறிக்கொண்டு வரும்போதாவது உனது திருவடிகளைப் பெறும் வழியை உணர்ந்து கொள்வேனோ? பரத நாட்டியத்துக்கு அணிந்து கொள்ளும் சலங்கைகள் ஒலிக்கும் அழகிய திருவடிகளை உடையவனே, ஒளி பொருந்திய முகத்தை உடைய ஜாம்பவான் முதலான கரடிப் படையும் குரங்குப் படையும் ஏவல் புரிய போருக்குச் சென்று, முயற்சி செய்து மலை வரிசைகளின் இடையே போய், மோசக்காரனான ராவணனது இலங்கை கலங்கும்படி, அழகிய பொன்னாலாகிய கிரீடங்களை அணிந்த பத்துத் தலைகளும் துணிக்கப்பட்டு, ஏழு உலகங்களும் நடுங்கும்படி பனம்பழம் போல் விழும்படி ஆக்கின (ராம)ரும், மருத மரங்களை ஒடிந்து விழ வைத்த (கண்ணனுமாகிய) திருமால் அன்பு வைத்துள்ள மருகனே, குவிந்து மலர்கின்ற தாமரைகள் நிறைந்த வயலூரிலும், மணம் வீசும் சண்பக மலர்கள் விளங்கும் பெருமை வாய்ந்த விராலி மலையிலும் விளங்கிய கந்தனே, என்றும் உன்னை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் வந்தனை செய்கின்ற பிள்ளையாகிய அடியேனுடைய வழிவழியாக அன்பு செய்கின்ற பாடற் பணியை ஏற்றுக்கொண்டு அருளும் பெருமாளே.
கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் கனவிய கொண்டை குலைந்து அலைந்திட ... கையும், நகக் குறி கொண்ட கழுத்தும் ஒருங்கே எழுந்தும், சுருண்டு, வண்டு நெருங்கிய பெருமை வாய்ந்த கூந்தல் குலைந்து அசையவும், அதி பாரக் களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்பு செய் கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா ... அதிக கனம் வாய்ந்த, கலவை நறு மணம் மிக்க தனங்கள் நெகிழ்ந்து அசையும்படியும் இணைந்து, காம மயக்கில் மயங்கி அன்பு காட்டும் கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் உண்டு, சோர்வு உற்று பஞ்சு மெத்தையின் மீது வீழ்ந்து, இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும் படி இதவிய உந்தி எனும் தடம் தனில் உற மூழ்கி ... வாயூறு நீரைப் பருகி, பொருந்திய கரிய மீன் போன்ற கண்கள் ஒன்றுபட்டுச் சிவந்து குவியுமாறு, இன்பத்தைத் தரும் கொப்பூழ் என்னும் குளத்தில் பொருந்தி முழுகி, இனியது ஒர் இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ ... இனிமை தரும் ஓர் இன்பம் உண்டாக அதை அனுபவித்து, பொய் நிறைந்த பொது மகளிர் வசம் ஈடுபட்ட என் இளமை முதுமையாக மாறிக்கொண்டு வரும்போதாவது உனது திருவடிகளைப் பெறும் வழியை உணர்ந்து கொள்வேனோ? பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய் ... பரத நாட்டியத்துக்கு அணிந்து கொள்ளும் சலங்கைகள் ஒலிக்கும் அழகிய திருவடிகளை உடையவனே, ஒளி பொருந்திய முகத்தை உடைய ஜாம்பவான் முதலான கரடிப் படையும் குரங்குப் படையும் ஏவல் புரிய போருக்குச் சென்று, முயற்சி செய்து மலை வரிசைகளின் இடையே போய், பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக ... மோசக்காரனான ராவணனது இலங்கை கலங்கும்படி, அழகிய பொன்னாலாகிய கிரீடங்களை அணிந்த பத்துத் தலைகளும் துணிக்கப்பட்டு, ஏழு உலகங்களும் நடுங்கும்படி பனம்பழம் போல் விழும்படி ஆக்கின (ராம)ரும், மருத மரங்களை ஒடிந்து விழ வைத்த (கண்ணனுமாகிய) திருமால் அன்பு வைத்துள்ள மருகனே, குவிந்து மலர்ந்த பங்கய வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி மலையில் விளங்கிய கந்த ... குவிந்து மலர்கின்ற தாமரைகள் நிறைந்த வயலூரிலும், மணம் வீசும் சண்பக மலர்கள் விளங்கும் பெருமை வாய்ந்த விராலி மலையிலும் விளங்கிய கந்தனே, என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்றனை வழி வழி அன்பு செய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே. ... என்றும் உன்னை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் வந்தனை செய்கின்ற பிள்ளையாகிய அடியேனுடைய வழிவழியாக அன்பு செய்கின்ற பாடற் பணியை ஏற்றுக்கொண்டு அருளும் பெருமாளே.