ஐந்து பூதமும்
ஆறு சமயமு
மந்த்ர வேத புராண கலைகளும்
ஐம்பதோர்விதமான லிபிகளும்
வெகுரூப அண்டர் ஆதி சராசரமும்
உயர் புண்டரீகனு மேக நிறவனும்
அந்தி போலுருவானு
நிலவொடு வெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமும்
அசபையும்
விந்து நாதமும்
ஏக வடிவம்
அதன்சொரூபம் அதாக வுறைவது சிவயோகம்
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய்
உப தேச குருபர சம்ப்ரதாயமொடு
ஏயு நெறியது பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம் விபூதர் குடிபுக
மண்டு பூத பசாசு பசிகெட
மயிடாரி வன்கண் வீரி பிடாரி
ஹரஹர சங்கராஎன
மேரு கிரிதலை மண்டு தூளெழ
வேலை யுருவிய வயலூரா
வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாச விகார பரவச வென்றியான
ச மாதி முறுகுகல் முழைகூடும்
விண்டு மேல்மயி லாட
இனியகள் உண்டு காரளி பாட
இதழிபொன் விஞ்ச வீசு
விராலி மலையுறை பெருமாளே.
மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும், சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம் என்ற ஆறு சமயங்களும், மந்திரங்களும், வேதங்களும், புராணங்களும், கலைகளும், ஐம்பத்தொரு விதமான எழுத்துக்களும், அனேக உருவங்களுடன் கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும், உயர்ந்த பிரமனும், கார்மேக நிறத்துத் திருமாலும், அந்தி வானம் போன்ற செம்மேனியை உடைய ருத்திரனும், நிலவோடு வெயிலை வீசுகின்ற சந்திரனும், சூரியனும், அம்ச மந்திரமும் சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும், இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும். வேறு வேறாகப் பிரிக்காமல் அதன் ஸ்வரூபமாகவே அகண்டாகாரமாக இருக்கும் சிவத்தை அறிந்து அதில் நிலையாக நிற்பதுவே சிவ யோகம் ஆகும். அவரவர்களுக்கு உரிய ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களும் நீங்கப் பெற்று, பரம்பரையாக குருமூர்த்தியிடம் உபதேசம் பெறுகிற வழியில் நின்று, அந்த மரபின் நியமத்துடன் உபதேச நெறியை யானும் பெறக் கடவேனோ? போருக்காக எதிர்த்து வந்த அசுரர் சேனைகள் அச்சம் அடைய, தேவர்கள் இந்திர லோகத்துக்குச் சென்று மீண்டும் குடியேற, நெருங்கி வந்த பூதங்களும் பைசாசங்களும் பசி ஆற, மகிஷாசுரனை அழித்த, கொடுமையும் வீரமும் உடையவளுமான துர்க்கை ஹரஹரா சங்கரா என்று துதி செய்ய, மேரு மலையின் உச்சிச் சிகரத்தில் மிகுந்த புழுதி உண்டாக, வேலாயுதத்தை விடுத்து அருளிய வயலூரனே, நெருப்பில் வெந்த திருநீற்றை அணியும், ஜடாமுடி உடைய ரிஷிகள் பந்தம், பாசம் என்ற கலக்கங்களை நீக்கின வெற்றி நிலையான சமாதி நிலையை திண்ணிய கற்குகையாகும் விராலிமலையில் அடைய, அந்த மலையின் மீது மயில் ஆட, இனிப்பான கள்ளை உண்டு கரிய வண்டுகள் பாட, கொன்றை மரங்கள் (பூவுக்குப் பதிலாக) பொன்னை மிகுதியாகச் சொரியும் விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
ஐந்து பூதமும் ... மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும், ஆறு சமயமு ... சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம் என்ற ஆறு சமயங்களும், மந்த்ர வேத புராண கலைகளும் ... மந்திரங்களும், வேதங்களும், புராணங்களும், கலைகளும், ஐம்பதோர்விதமான லிபிகளும் ... ஐம்பத்தொரு விதமான எழுத்துக்களும், வெகுரூப அண்டர் ஆதி சராசரமும் ... அனேக உருவங்களுடன் கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும், உயர் புண்டரீகனு மேக நிறவனும் ... உயர்ந்த பிரமனும், கார்மேக நிறத்துத் திருமாலும், அந்தி போலுருவானு ... அந்தி வானம் போன்ற செம்மேனியை உடைய ருத்திரனும், நிலவொடு வெயில்காலும் ... நிலவோடு வெயிலை வீசுகின்ற சந்த்ர சூரியர் தாமும் ... சந்திரனும், சூரியனும், அசபையும் ... அம்ச மந்திரமும் விந்து நாதமும் ... சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும், ஏக வடிவம் ... இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும். அதன்சொரூபம் அதாக வுறைவது சிவயோகம் ... வேறு வேறாகப் பிரிக்காமல் அதன் ஸ்வரூபமாகவே அகண்டாகாரமாக இருக்கும் சிவத்தை அறிந்து அதில் நிலையாக நிற்பதுவே சிவ யோகம் ஆகும். தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் ... அவரவர்களுக்கு உரிய ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களும் நீங்கப் பெற்று, உப தேச குருபர சம்ப்ரதாயமொடு ... பரம்பரையாக குருமூர்த்தியிடம் உபதேசம் பெறுகிற வழியில் நின்று, ஏயு நெறியது பெறுவேனோ ... அந்த மரபின் நியமத்துடன் உபதேச நெறியை யானும் பெறக் கடவேனோ? வந்த தானவர் சேனை கெடிபுக ... போருக்காக எதிர்த்து வந்த அசுரர் சேனைகள் அச்சம் அடைய, இந்த்ர லோகம் விபூதர் குடிபுக ... தேவர்கள் இந்திர லோகத்துக்குச் சென்று மீண்டும் குடியேற, மண்டு பூத பசாசு பசிகெட ... நெருங்கி வந்த பூதங்களும் பைசாசங்களும் பசி ஆற, மயிடாரி வன்கண் வீரி பிடாரி ... மகிஷாசுரனை அழித்த, கொடுமையும் வீரமும் உடையவளுமான துர்க்கை ஹரஹர சங்கராஎன ... ஹரஹரா சங்கரா என்று துதி செய்ய, மேரு கிரிதலை மண்டு தூளெழ ... மேரு மலையின் உச்சிச் சிகரத்தில் மிகுந்த புழுதி உண்டாக, வேலை யுருவிய வயலூரா ... வேலாயுதத்தை விடுத்து அருளிய வயலூரனே, வெந்த நீறணி வேணி யிருடிகள் ... நெருப்பில் வெந்த திருநீற்றை அணியும், ஜடாமுடி உடைய ரிஷிகள் பந்த பாச விகார பரவச வென்றியான ... பந்தம், பாசம் என்ற கலக்கங்களை நீக்கின வெற்றி நிலையான ச மாதி முறுகுகல் முழைகூடும் ... சமாதி நிலையை திண்ணிய கற்குகையாகும் விராலிமலையில் அடைய, விண்டு மேல்மயி லாட ... அந்த மலையின் மீது மயில் ஆட, இனியகள் உண்டு காரளி பாட ... இனிப்பான கள்ளை உண்டு கரிய வண்டுகள் பாட, இதழிபொன் விஞ்ச வீசு ... கொன்றை மரங்கள் (பூவுக்குப் பதிலாக) பொன்னை மிகுதியாகச் சொரியும் விராலி மலையுறை பெருமாளே. ... விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.