இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகை வகை கொத்து அலர்களின் தொடையல் வைத்து
வளர் கொண்டல் என அறல் என இசை அளி என நள் இருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும்
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலு(ம்) மதி முகமும் உற்பலமும்
வண்டு வடு வில் கணை யமன் படரு(ம்) முனை வாளும் இடர் படு(க்)கவு(ம்) நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன இக்கு சிலை கொண்ட மதன் மெய்த் தவநிறைந்த விழி
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என ஒப்பு அற நகங்கள் விரல் துப்பு என உறைந்து
கமுகு இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும்
விதரண(ம்) மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன
இமம் சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முக பட விகடின தனமும்
உயர் வட பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள மதியாத விபரிதம் உடை இடை இளைஞர் களை பட
அபகடம் அது புரி அரவ சுடிகைய ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய நு(ண்)ணிய தளிர் என உலவிய பரிபுர(ம்) அணி நடன பதமும் உடைய வடிவினர் பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி
அவர் விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர் பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... எனவேதான்
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத ச(ல்)லிகை தவில் முரசு கரடிகை மத்தளி தவண்டை அறவைத் தகுணி துந்துமிகள் மொகுமொகு மொகு என அலற
விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் விக்கிட நிணம் பருக பக்கி உவணம் கழுகு சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட
அப்புவின் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி மத கஜ துரக ரதமும் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் மிக்க ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட
இரவியும் மதியமும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல் அத்திறல் அணங்கு செய சத்தி விடு கந்த
திருவயலியில் அடிமைய குடிமை இ(ன்)னல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக
விராலி மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட மய நிருப விமல சுக சொருப பரசிவ குருபர
வெளி முகடு உருவ உயர் தரு சக்ர கிரியும் குலைய விக்ரம நடம் புரியு(ம்) மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ
அருமைய இளமை உருவொடு சொர்க்க தலமும் புலவர் வர்க்கமும் விளங்க வரு பெருமாளே.
இன்பத்தைத் தருகின்ற வாசனை கலந்த நீரில் மூழ்கி, அகிலின் நறு மணம் வீசும் புகையை ஊட்டி, விதவிதமான கொத்து மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை ஒழுங்கு பெற வைத்து, வளர்கின்ற மேகம் போன்றும், கரு மணல் போன்றும், இசை பாடும் வண்டுகளின் கூட்டம் போன்றும, நள்ளிரவின் இருள் போலவும் நிறமானது கறுத்து நீளமுள்ளதாய், நெருக்கம் உள்ளதாய், வாசனைத் தயிலம் தடவியதால் பளபளப்புள்ளதாய், கருங்குரங்கின் சுருளை ஒத்த வளைவுள்ள கூந்தலும், விளங்கும் பிறைச் சந்திரன் போன்றும், வேடர்களின் வில்லைப் போன்றும், விசாலமான, திலகம் அணிந்த நெற்றியும, திங்களைப் போன்ற முகமும், நீலோற்ப மலரும், வண்டும், மாவடுவும், வில்லம்பும், யம தூதர்களும், கூரிய வாளும் என நின்று துன்பத்தை உண்டாக்கவும், யமனும், மிக்க வலிமை பொருந்திய கொடிய விஷமும் போன்று நீண்ட நேரம் வருத்துவனவாய், பொல்லாதவனவாய், கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதனது உண்மைத் தவவலிமை முற்றும் நிறைந்துள்ளதாய் விளங்கும் கண்களும், முல்லை அரும்பை ஒத்த பற்களும், அமுதம் போன்றதாய் குமுத மலர் ஒத்த வாயினின்று வரும் தேன் போல் இனிக்கும் சொற்களும், இதற்குத் தான் நிகர் என்று சொல்ல ஒண்ணாத நகங்களோடு கூடிய விரல்கள் பவளம் போல் விளங்கவும், கமுகு இதற்கு நிகராகாது இடி பட்டு ஒடிந்துவிழ, காதல் வினையைத் தூண்டும் கரும்பு வில் ஏந்திய மன்மத நூலுக்குப் பொருந்த அமைந்த பெரிய கெளடி என்ற பண் வகையை இசைத்து ஒலிக்கின்ற சங்குக்கு ஒப்பான கழுத்தும், வெண்மை நிற முத்துக்கள் விளைகின்ற மூங்கில் போன்ற அழகிய தோள்களும், விவேகம் உள்ள மனத்தில் வேதனைத் துயரைத் தருவனவாய், நூற்றிதழ்த் தாமரை மொட்டை ஒப்பனவாய், புதிய அமிர்த வாசனைக் குடம், மலை போல பூரித்து இருப்பவனவாய், பன்னீர், கஸ்தூரி, கலவைச் சந்தனம் இவைகளைக் கொண்டனவாய், நறு மணம் உள்ளனவாய், பொன் ஒளி மிகுந்தனவாய், இளமை கொண்டனவாய், மகிழ்ச்சி தருவனவாய, அழகு, சிறப்பு, பொலிவு, அதிசயம் இவை யாவும் கொண்டனவாய், நவ ரத்ன மாலையையும், மூடும் அலங்காரத் துணியையும் கொண்டவனவாய், திரட்சி உள்ள மார்பகங்களும், உயர்ந்த ஆலிலை போன்ற அடி வயிற்றில் பொருந்திய சுழிவுற்ற கொப்பூழும், உள்ளத்தில் ஆராயாத மாறு பாடான எண்ணத்தை உடையவராய் அத்தகைய எண்ணத்தின் இடையே அகப்பட்ட இளைஞர்கள் சோர்வு அடைய, வஞ்சகம் செய்கின்ற பாம்பின் தலை உச்சியில் உள்ள ரத்ன படம் என்று சொல்லத் தக்க அழகு வாய்ந்த பெண்குறியும், புதிய நுண்ணிய தளிர் போன்று உலவுகின்ற, சிலம்பு அணிந்த, நடனத்துக்கு உற்ற பாதங்களை உடைய உருவத்தினராகிய விலைமாதர்களுடைய அழகிய சேர்க்கை இன்பமானது அதிக துக்கத்தைத் தருவது என்று உணர்தலோடு கூட, அவ்வேசிகளின் தந்திரச் செயல்களில் என்னுடைய மனமானது உருகிடும் மயக்கமும் ஒழிய, உனது திருவருள் கைகூட உயர்ந்த பக்தி வழியும் மேலான முக்தி நெறியும் எனக்குப் புலப்படுவதாகிய ஒரு நாள் உண்டாகுமா? மேற்கூறிய தாள மெட்டுக்கு ஏற்ப தபேலா என்ற ஒரு மத்தள வகை, குடவடிவுள்ள முழவு வாத்திய வகை, திமிலை என்ற ஒருவகைப் பறை, சிறு பறை வகை, முன் இல்லாததான புது வகையான சல்லென்ற ஓசை உடைய சல்லிகை என்னும் பெரும் பறை, தவில் வகை. முரசு, கரடி கத்தினாற் போல் ஓசை உடைய பறை வகை, மத்தள வாத்திய வகை, பேருடுக்கை, நிரம்ப இருந்த தகுணிச்சம் என்ற துந்துமிகள் பேரொலி எழுப்ப, வெற்றிச் சின்னங்கள் திகு திகு என்று எங்கும் விளங்க, பேய்களும், மாய வித்தைக் குறளிப் பிசாசுகளும் விக்கல் வரும் அளவு கொழுப்பை உண்ண, பறவைகளான கருடனும், கழுகும் பேறு பெற்றோம் என்று ஆரவாரிக்க, கடல் வற்றிப் போக, சண்டை செய்யும் அசுரர்களின் இரத்தம் பெருகிட, அந்தச் செந்நீரில் மிதந்து எழுபது கணக்கான அற்புதமான தலையற்ற உடல்கள் (கவந்தங்கள்) எழ, பல கோடிக் கணக்கானமத யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும உடைய பூமியும், அதலம் முதலான கீழேழ் உலகமும் அதிர்ச்சி உற்று கலங்க, நீண்ட பெருத்த ஒலி முழங்கி எழ, உலகின் துயர் அந்தக் கணத்திலேயே விலகி ஒழிய, சூரியனும் சந்திரனும் பழைய நிலை பெற்று விளங்க, திருவடியைப் போற்றிய தேவர்கள் மேன்மையை அடைய, பொருந்திய அந்த வீர லட்சுமி விளங்கும் வெற்றி வேலைச் செலுத்திய கந்தனே, திரு வயலூரில் (அடியேனுடைய) குடிப் பிறப்பின் துன்பங்கள் நீங்க, மயக்கமும் மும்மலங்களும் அகல, அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் கண்களின் முன்னே அற்புதக் காட்சியுடன் எழுந்தருளிய குகனே, விராலி மலையில் வீற்றிருக்கும் பெரியோனே, பெருமை பொருந்திய இறைவனே, உள்ள கலைகள் பலவும் தெரிந்த கருணை வாய்ந்த முருகனே, சரவணப் பொய்கையில் தோன்றினவனே, கிரெளஞ்ச மலையை அழித்தவனே, எங்கும் பூரணமாய் நிறைந்த அரசே, மாசற்றவனே, ஆனந்த வடிவானவனே, பரமசிவனுக்கு குரு மூர்த்தியே, அண்டத்தின் புற எல்லையைத் தாண்டி உயர்ந்து செல்லும், சக்ரவாள கிரியும் நடுக்கம் உற வல்லமை பொருந்திய நடனத்தைச் செய்யும், பச்சை நிறமான தோகைகள் ஒளி வீசும் மயில் மேல் பொருந்தியவனே, அருமை வாய்ந்த இளமை உருவத்தோடு, விண்ணுலகும் புலவர்கள் கூட்டமும சுற்றிலும் விளங்க எழுந்தருளும் பெருமாளே.
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகை வகை கொத்து அலர்களின் தொடையல் வைத்து ... இன்பத்தைத் தருகின்ற வாசனை கலந்த நீரில் மூழ்கி, அகிலின் நறு மணம் வீசும் புகையை ஊட்டி, விதவிதமான கொத்து மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை ஒழுங்கு பெற வைத்து, வளர் கொண்டல் என அறல் என இசை அளி என நள் இருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும் ... வளர்கின்ற மேகம் போன்றும், கரு மணல் போன்றும், இசை பாடும் வண்டுகளின் கூட்டம் போன்றும, நள்ளிரவின் இருள் போலவும் நிறமானது கறுத்து நீளமுள்ளதாய், நெருக்கம் உள்ளதாய், வாசனைத் தயிலம் தடவியதால் பளபளப்புள்ளதாய், கருங்குரங்கின் சுருளை ஒத்த வளைவுள்ள கூந்தலும், இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலு(ம்) மதி முகமும் உற்பலமும் ... விளங்கும் பிறைச் சந்திரன் போன்றும், வேடர்களின் வில்லைப் போன்றும், விசாலமான, திலகம் அணிந்த நெற்றியும, திங்களைப் போன்ற முகமும், வண்டு வடு வில் கணை யமன் படரு(ம்) முனை வாளும் இடர் படு(க்)கவு(ம்) நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன இக்கு சிலை கொண்ட மதன் மெய்த் தவநிறைந்த விழி ... நீலோற்ப மலரும், வண்டும், மாவடுவும், வில்லம்பும், யம தூதர்களும், கூரிய வாளும் என நின்று துன்பத்தை உண்டாக்கவும், யமனும், மிக்க வலிமை பொருந்திய கொடிய விஷமும் போன்று நீண்ட நேரம் வருத்துவனவாய், பொல்லாதவனவாய், கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதனது உண்மைத் தவவலிமை முற்றும் நிறைந்துள்ளதாய் விளங்கும் கண்களும், தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என ஒப்பு அற நகங்கள் விரல் துப்பு என உறைந்து ... முல்லை அரும்பை ஒத்த பற்களும், அமுதம் போன்றதாய் குமுத மலர் ஒத்த வாயினின்று வரும் தேன் போல் இனிக்கும் சொற்களும், இதற்குத் தான் நிகர் என்று சொல்ல ஒண்ணாத நகங்களோடு கூடிய விரல்கள் பவளம் போல் விளங்கவும், கமுகு இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும் ... கமுகு இதற்கு நிகராகாது இடி பட்டு ஒடிந்துவிழ, காதல் வினையைத் தூண்டும் கரும்பு வில் ஏந்திய மன்மத நூலுக்குப் பொருந்த அமைந்த பெரிய கெளடி என்ற பண் வகையை இசைத்து ஒலிக்கின்ற சங்குக்கு ஒப்பான கழுத்தும், வெண்மை நிற முத்துக்கள் விளைகின்ற மூங்கில் போன்ற அழகிய தோள்களும், விதரண(ம்) மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன ... விவேகம் உள்ள மனத்தில் வேதனைத் துயரைத் தருவனவாய், நூற்றிதழ்த் தாமரை மொட்டை ஒப்பனவாய், புதிய அமிர்த வாசனைக் குடம், மலை போல பூரித்து இருப்பவனவாய், இமம் சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முக பட விகடின தனமும் ... பன்னீர், கஸ்தூரி, கலவைச் சந்தனம் இவைகளைக் கொண்டனவாய், நறு மணம் உள்ளனவாய், பொன் ஒளி மிகுந்தனவாய், இளமை கொண்டனவாய், மகிழ்ச்சி தருவனவாய, அழகு, சிறப்பு, பொலிவு, அதிசயம் இவை யாவும் கொண்டனவாய், நவ ரத்ன மாலையையும், மூடும் அலங்காரத் துணியையும் கொண்டவனவாய், திரட்சி உள்ள மார்பகங்களும், உயர் வட பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள மதியாத விபரிதம் உடை இடை இளைஞர் களை பட ... உயர்ந்த ஆலிலை போன்ற அடி வயிற்றில் பொருந்திய சுழிவுற்ற கொப்பூழும், உள்ளத்தில் ஆராயாத மாறு பாடான எண்ணத்தை உடையவராய் அத்தகைய எண்ணத்தின் இடையே அகப்பட்ட இளைஞர்கள் சோர்வு அடைய, அபகடம் அது புரி அரவ சுடிகைய ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய நு(ண்)ணிய தளிர் என உலவிய பரிபுர(ம்) அணி நடன பதமும் உடைய வடிவினர் பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி ... வஞ்சகம் செய்கின்ற பாம்பின் தலை உச்சியில் உள்ள ரத்ன படம் என்று சொல்லத் தக்க அழகு வாய்ந்த பெண்குறியும், புதிய நுண்ணிய தளிர் போன்று உலவுகின்ற, சிலம்பு அணிந்த, நடனத்துக்கு உற்ற பாதங்களை உடைய உருவத்தினராகிய விலைமாதர்களுடைய அழகிய சேர்க்கை இன்பமானது அதிக துக்கத்தைத் தருவது என்று உணர்தலோடு கூட, அவர் விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர் பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே ... அவ்வேசிகளின் தந்திரச் செயல்களில் என்னுடைய மனமானது உருகிடும் மயக்கமும் ஒழிய, உனது திருவருள் கைகூட உயர்ந்த பக்தி வழியும் மேலான முக்தி நெறியும் எனக்குப் புலப்படுவதாகிய ஒரு நாள் உண்டாகுமா? தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... எனவேதான் ... மேற்கூறிய தாள மெட்டுக்கு ஏற்ப தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத ச(ல்)லிகை தவில் முரசு கரடிகை மத்தளி தவண்டை அறவைத் தகுணி துந்துமிகள் மொகுமொகு மொகு என அலற ... தபேலா என்ற ஒரு மத்தள வகை, குடவடிவுள்ள முழவு வாத்திய வகை, திமிலை என்ற ஒருவகைப் பறை, சிறு பறை வகை, முன் இல்லாததான புது வகையான சல்லென்ற ஓசை உடைய சல்லிகை என்னும் பெரும் பறை, தவில் வகை. முரசு, கரடி கத்தினாற் போல் ஓசை உடைய பறை வகை, மத்தள வாத்திய வகை, பேருடுக்கை, நிரம்ப இருந்த தகுணிச்சம் என்ற துந்துமிகள் பேரொலி எழுப்ப, விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் விக்கிட நிணம் பருக பக்கி உவணம் கழுகு சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட ... வெற்றிச் சின்னங்கள் திகு திகு என்று எங்கும் விளங்க, பேய்களும், மாய வித்தைக் குறளிப் பிசாசுகளும் விக்கல் வரும் அளவு கொழுப்பை உண்ண, பறவைகளான கருடனும், கழுகும் பேறு பெற்றோம் என்று ஆரவாரிக்க, கடல் வற்றிப் போக, சண்டை செய்யும் அசுரர்களின் இரத்தம் பெருகிட, அப்புவின் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி மத கஜ துரக ரதமும் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் மிக்க ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட ... அந்தச் செந்நீரில் மிதந்து எழுபது கணக்கான அற்புதமான தலையற்ற உடல்கள் (கவந்தங்கள்) எழ, பல கோடிக் கணக்கானமத யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும உடைய பூமியும், அதலம் முதலான கீழேழ் உலகமும் அதிர்ச்சி உற்று கலங்க, நீண்ட பெருத்த ஒலி முழங்கி எழ, உலகின் துயர் அந்தக் கணத்திலேயே விலகி ஒழிய, இரவியும் மதியமும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல் அத்திறல் அணங்கு செய சத்தி விடு கந்த ... சூரியனும் சந்திரனும் பழைய நிலை பெற்று விளங்க, திருவடியைப் போற்றிய தேவர்கள் மேன்மையை அடைய, பொருந்திய அந்த வீர லட்சுமி விளங்கும் வெற்றி வேலைச் செலுத்திய கந்தனே, திருவயலியில் அடிமைய குடிமை இ(ன்)னல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக ... திரு வயலூரில் (அடியேனுடைய) குடிப் பிறப்பின் துன்பங்கள் நீங்க, மயக்கமும் மும்மலங்களும் அகல, அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் கண்களின் முன்னே அற்புதக் காட்சியுடன் எழுந்தருளிய குகனே, விராலி மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட மய நிருப விமல சுக சொருப பரசிவ குருபர ... விராலி மலையில் வீற்றிருக்கும் பெரியோனே, பெருமை பொருந்திய இறைவனே, உள்ள கலைகள் பலவும் தெரிந்த கருணை வாய்ந்த முருகனே, சரவணப் பொய்கையில் தோன்றினவனே, கிரெளஞ்ச மலையை அழித்தவனே, எங்கும் பூரணமாய் நிறைந்த அரசே, மாசற்றவனே, ஆனந்த வடிவானவனே, பரமசிவனுக்கு குரு மூர்த்தியே, வெளி முகடு உருவ உயர் தரு சக்ர கிரியும் குலைய விக்ரம நடம் புரியு(ம்) மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ ... அண்டத்தின் புற எல்லையைத் தாண்டி உயர்ந்து செல்லும், சக்ரவாள கிரியும் நடுக்கம் உற வல்லமை பொருந்திய நடனத்தைச் செய்யும், பச்சை நிறமான தோகைகள் ஒளி வீசும் மயில் மேல் பொருந்தியவனே, அருமைய இளமை உருவொடு சொர்க்க தலமும் புலவர் வர்க்கமும் விளங்க வரு பெருமாளே. ... அருமை வாய்ந்த இளமை உருவத்தோடு, விண்ணுலகும் புலவர்கள் கூட்டமும சுற்றிலும் விளங்க எழுந்தருளும் பெருமாளே.