சத்தம் மிகு ஏழு கடலைத் தேனை உற்று மது தோடு கணையைப் போர் கொள் சத்தி தனை மாவின் வடுவைக் காவி தனை மீறு
தக்க மணம் வீசு கமலப் பூவை மிக்க விளைவான கடுவைச் சீறு உதத்து உகளும் வாளை அடும் மை பாவு(ம்) விழி மாதர்
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே
வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை அடிமைக்காக வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே
சித்ர வடி வேல் ப(ன்)னிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார
திக்கினு(ம்) நடாவு புரவிக்கார குற மாது சித்த அநுராக கலவிக்கார
துட்ட அசுரேசர் கலகக்கார சிட்டர் பரிபால லளிதக்கார
அடியார்கள் முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார
முச் சகர் பராவு சரணக்கார இனிதான முத்தமிழை ஆயும் வரிசைக்கார
பச்சை முகில் தாவும் புரிசைக்கார முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே.
ஒலி மிக்க ஏழு கடலை, (தேன் ஈட்டும்) வண்டை, தேன் நிறைந்த மலரை, அம்பை, சண்டை செய்யும் சக்தி வேலை, மாவடுவை, கருங்குவளைப் பூவை மேம்பட்டனவாயும், தகுந்த நறு மணம் வீசும் தாமரைப் பூவை, மிக முதிர்ந்த விஷத்தை, சீறிக்கொண்டு நீரில் தாவிப் பாயும் வாளை மீனை ஒத்தனவாயும், கொல்லும் குணம் கொண்ட, மை தீட்டிய கண்களை உடைய விலைமாதர்களின் மதம் கொண்ட யானை போல விளங்கும், விரிவாக உள்ள முத்து மாலை அணிந்ததாய், அழகு மிகுந்த வைரக் கிரீடத்துக்கு ஒப்பானதாய், சிமிழ் போன்ற மார்பகத்தின் மீது நான் வைத்துள்ள கொடிய மயக்கத்தை விட்டு, மிகுந்த பக்தி செய்யும்படி ஏழை அடிமைாகிய எனக்காக உறுதியான மயிலில் ஏறி இனி நீ எப்போது வருவாய்? அழகிய கூரிய வேலை ஏந்திய பன்னிரண்டு திருக்கைகளை உடையவனே, பக்தி செய்பவர்களுடைய நூலில் விளங்குபவனே, திசை தோறும் செலுத்தப்படுகின்ற குதிரையாகிய (மயில்) வாகனனே, குறப் பெண்ணாகிய வள்ளி உள்ளன்போடு இணையும் இன்பம் கொண்டவனே, துஷ்டர்களான அசுரர்கள் தலைவரோடு போர் புரிபவனே, நல்லவர்களைக் காத்தளிக்கும் திருவிளையாடல்களைக் கொண்டவனே, அடியார்கள் முக்தி பெறும்படி உபதேசிக்கும் திருவார்த்தைகளை உடையவனே, கிளி போன்ற பரிசுத்தமான தேவயானைக்குக் கணவனே, மூவுலகத்தினரும் பரவிப் போற்றும் திருவடிகளை உடையவனே, இனிதான (இயல், இசை, நாடகம் என்னும்) முத்தமிழை ஆய்ந்த சிறப்பைக் கொண்டவனே, கரிய மேகங்கள் தாவிச் செல்லும் மதில்களைக் கொண்ட திருக்கோயிலை உடையவனே, முத்துக்கள் உலவுகின்ற கடல் சூழ்ந்த நகராகிய திருச்செந்தூரில் வாழ்பவனே, மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே.
சத்தம் மிகு ஏழு கடலைத் தேனை உற்று மது தோடு கணையைப் போர் கொள் சத்தி தனை மாவின் வடுவைக் காவி தனை மீறு ... ஒலி மிக்க ஏழு கடலை, (தேன் ஈட்டும்) வண்டை, தேன் நிறைந்த மலரை, அம்பை, சண்டை செய்யும் சக்தி வேலை, மாவடுவை, கருங்குவளைப் பூவை மேம்பட்டனவாயும், தக்க மணம் வீசு கமலப் பூவை மிக்க விளைவான கடுவைச் சீறு உதத்து உகளும் வாளை அடும் மை பாவு(ம்) விழி மாதர் ... தகுந்த நறு மணம் வீசும் தாமரைப் பூவை, மிக முதிர்ந்த விஷத்தை, சீறிக்கொண்டு நீரில் தாவிப் பாயும் வாளை மீனை ஒத்தனவாயும், கொல்லும் குணம் கொண்ட, மை தீட்டிய கண்களை உடைய விலைமாதர்களின் மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே ... மதம் கொண்ட யானை போல விளங்கும், விரிவாக உள்ள முத்து மாலை அணிந்ததாய், அழகு மிகுந்த வைரக் கிரீடத்துக்கு ஒப்பானதாய், சிமிழ் போன்ற மார்பகத்தின் மீது வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை அடிமைக்காக வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே ... நான் வைத்துள்ள கொடிய மயக்கத்தை விட்டு, மிகுந்த பக்தி செய்யும்படி ஏழை அடிமைாகிய எனக்காக உறுதியான மயிலில் ஏறி இனி நீ எப்போது வருவாய்? சித்ர வடி வேல் ப(ன்)னிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார ... அழகிய கூரிய வேலை ஏந்திய பன்னிரண்டு திருக்கைகளை உடையவனே, பக்தி செய்பவர்களுடைய நூலில் விளங்குபவனே, திக்கினு(ம்) நடாவு புரவிக்கார குற மாது சித்த அநுராக கலவிக்கார ... திசை தோறும் செலுத்தப்படுகின்ற குதிரையாகிய (மயில்) வாகனனே, குறப் பெண்ணாகிய வள்ளி உள்ளன்போடு இணையும் இன்பம் கொண்டவனே, துட்ட அசுரேசர் கலகக்கார சிட்டர் பரிபால லளிதக்கார ... துஷ்டர்களான அசுரர்கள் தலைவரோடு போர் புரிபவனே, நல்லவர்களைக் காத்தளிக்கும் திருவிளையாடல்களைக் கொண்டவனே, அடியார்கள் முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார ... அடியார்கள் முக்தி பெறும்படி உபதேசிக்கும் திருவார்த்தைகளை உடையவனே, கிளி போன்ற பரிசுத்தமான தேவயானைக்குக் கணவனே, முச் சகர் பராவு சரணக்கார இனிதான முத்தமிழை ஆயும் வரிசைக்கார ... மூவுலகத்தினரும் பரவிப் போற்றும் திருவடிகளை உடையவனே, இனிதான (இயல், இசை, நாடகம் என்னும்) முத்தமிழை ஆய்ந்த சிறப்பைக் கொண்டவனே, பச்சை முகில் தாவும் புரிசைக்கார முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே. ... கரிய மேகங்கள் தாவிச் செல்லும் மதில்களைக் கொண்ட திருக்கோயிலை உடையவனே, முத்துக்கள் உலவுகின்ற கடல் சூழ்ந்த நகராகிய திருச்செந்தூரில் வாழ்பவனே, மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே.