ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செம் கை உறவாடி
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு இரண்டும் உரையாரை
மருவ மிக அன்பு பெருக உளது என்று மனம் நினையும் இந்த மருள் தீர
வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ
அரவம் எதிர் கண்டு நடு நடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசை முகன் மகிழ்ந்த பெருமானார்
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரி சிர கிரி வந்த பெருமாளே.
ஒருவரோடு கண்களைக் கொண்டும், ஒருவரோடு மார்பகங்களாலும், ஒருவரோடு கைகளைக் கொண்டும் உறவாடி, ஒருவரை மனத்தில் வைத்து விரும்பியும், ஒருவரை இகழ்ந்து பேசி வெறுத்தும், ஒருவரோடு விருப்பு, வெறுப்பு இரண்டும் காட்டாமல் மெளனம் சாதித்தும் இருக்கின்ற விலைமாதரை அணைவதற்கு மிக்க காதல் பெருக உள்ளது என்று மனத்தில் நினைக்கின்ற இத்தகைய மோக மயக்கம் நீங்க, தாமரை என்று நினைத்து வண்டுகள் தனதனன என்ற ஒலியுடன் சுற்றி வருகின்ற உன்னுடைய திருவடிகளை அருளமாட்டாயா? பாம்பு தன்னை எதிரில் கண்டதும் மிகவும் நடுநடுங்கும்படி தனது வலிமையைக் காட்டும் கடுமை வாய்ந்த மயில்மீது ஏறும் வீரனே, தேவர்கள் முதல் அடியார்களும், முனிவர்களும் உன்னை வணங்கி உனது திருவடியைத் தொழ விளங்குகின்ற வயலூரில் வாழ்பவனே, லக்ஷ்மியை ஒரு பாகத்தில் உடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும் மகிழும்படியாக சிவபெருமான் திகுதகுதி என்று நடனமிட, முழவு வாத்தியங்கள் முழங்குகின்ற திரிசிராப்பள்ளியில் எழுந்தருளிய பெருமாளே.
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செம் கை உறவாடி ... ஒருவரோடு கண்களைக் கொண்டும், ஒருவரோடு மார்பகங்களாலும், ஒருவரோடு கைகளைக் கொண்டும் உறவாடி, ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு இரண்டும் உரையாரை ... ஒருவரை மனத்தில் வைத்து விரும்பியும், ஒருவரை இகழ்ந்து பேசி வெறுத்தும், ஒருவரோடு விருப்பு, வெறுப்பு இரண்டும் காட்டாமல் மெளனம் சாதித்தும் இருக்கின்ற விலைமாதரை மருவ மிக அன்பு பெருக உளது என்று மனம் நினையும் இந்த மருள் தீர ... அணைவதற்கு மிக்க காதல் பெருக உள்ளது என்று மனத்தில் நினைக்கின்ற இத்தகைய மோக மயக்கம் நீங்க, வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ ... தாமரை என்று நினைத்து வண்டுகள் தனதனன என்ற ஒலியுடன் சுற்றி வருகின்ற உன்னுடைய திருவடிகளை அருளமாட்டாயா? அரவம் எதிர் கண்டு நடு நடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா ... பாம்பு தன்னை எதிரில் கண்டதும் மிகவும் நடுநடுங்கும்படி தனது வலிமையைக் காட்டும் கடுமை வாய்ந்த மயில்மீது ஏறும் வீரனே, அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா ... தேவர்கள் முதல் அடியார்களும், முனிவர்களும் உன்னை வணங்கி உனது திருவடியைத் தொழ விளங்குகின்ற வயலூரில் வாழ்பவனே, திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசை முகன் மகிழ்ந்த பெருமானார் ... லக்ஷ்மியை ஒரு பாகத்தில் உடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும் மகிழும்படியாக சிவபெருமான் திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரி சிர கிரி வந்த பெருமாளே. ... திகுதகுதி என்று நடனமிட, முழவு வாத்தியங்கள் முழங்குகின்ற திரிசிராப்பள்ளியில் எழுந்தருளிய பெருமாளே.