கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ குறை கொண்டு உலாவிய மீனோ மானோ எனு(ம்) மானார்
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே
மீது ஊர் குளிர் கொங்கை மேருவினாலே நானா விதமாகி
உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா
உடல் பஞ்ச பாதகமாய் ஆ(ய்) நோயால் அழிவேனோ
உறு தண்ட(ம்) பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர் உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள் அருள்வாயே
அலை கொண்ட வாரிதி கோகோ கோகோ என நின்று வாய் விடவே
நீள் மா சூர் அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே
தான்அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா
வேறு ஓர் வடிவாகி மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே
மயல் கொண்டு உலாய் அவள் தாள் மீதே வீழ் குமரேசா
மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா
மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே.
கொலைத் தொழிலைத் தன்னிடத்தே அடக்கி உள்ள, சண்டை செய்ய வல்ல கண்கள் அம்போ, வாளோ, விஷம் நிறைந்து பாவத் தொழிலைச் செய்யவல்ல வேலாயுதமோ, சேல் மீனோ, குண்டலத்தைத் தொடும் அளவு பாயக்கூடிய மீனோ அல்லது மானோ என்று சொல்லக் கூடிய மாதர்களின் குயிலின் குரல் போல் அமைந்த இனிய பேச்சுக்களாலே, கண் எதிரே தோன்றும் நூலின் இழை போன்ற மெல்லிய இடையாலே, மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த மார்பகம் ஆகும் மேரு மலையாலே, பல விதமாக மனம் கலங்கி, நெருப்பு உலையில் பட்ட நல்ல மெழுகு போல உருகி, காம மோகம் என்னும் அலை வீசும் கடலினுள் முழுகி, உடல் பஞ்ச பாதகத்துக்கும் ஈடாகி, பிணியால் அழிவேனோ? கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு இவைகளுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதுவர்கள் என் உயிரைக் கொண்டு போய் விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருளுக. அலை வீசும் கடல் கோகோ என்று வாய் விட்டு ஒலித்து ஓலமிட, பெரிய மாமரமாய் நின்ற சூரன் வைத்திருந்த அழகிய வில்லும் அம்புகளும் வேறுபட்டுத் தூளாகவே, சுயம் பிரகாசமான ஜோதியைத் தன்னிடம் கொண்ட, நேர்மை நிறைந்த, பெரிய, பெருமை வாய்ந்த நெருப்பு உருவத்தில் திருக் கையில் உள்ள வேலைச் செலுத்திய வீரனே, தீரனே, அருமை வாய்ந்த அழகுள்ள உருவத்தவனே, ஒப்பற்ற ஒருவனே, வேற்று வடிவமான (வேட) உருவத்துடன் வள்ளிமலையில் வாழும் வேடர்கள் வசிக்கும் காட்டுக்குள் சென்று, குறப் பெண்ணாகிய வள்ளியின் மேல் ஆசை கொண்டு, மோக மயக்கத்துடன் உலாவி, அவளுடைய பாதங்களில் மீது வீழ்ந்து வணங்கிய குமரேசா. அறிவு நிறைந்த ஞான வேலனே, மாணவனாக உபதேசத்தைப் பெற்று மகிழ்ந்த சிவபிரான் வணங்கும் திருவடியை உடைய நாதனே, மயிலம் என்னும் குளிர்ந்த மலையில் வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.
கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ குறை கொண்டு உலாவிய மீனோ மானோ எனு(ம்) மானார் ... கொலைத் தொழிலைத் தன்னிடத்தே அடக்கி உள்ள, சண்டை செய்ய வல்ல கண்கள் அம்போ, வாளோ, விஷம் நிறைந்து பாவத் தொழிலைச் செய்யவல்ல வேலாயுதமோ, சேல் மீனோ, குண்டலத்தைத் தொடும் அளவு பாயக்கூடிய மீனோ அல்லது மானோ என்று சொல்லக் கூடிய மாதர்களின் குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே ... குயிலின் குரல் போல் அமைந்த இனிய பேச்சுக்களாலே, கண் எதிரே தோன்றும் நூலின் இழை போன்ற மெல்லிய இடையாலே, மீது ஊர் குளிர் கொங்கை மேருவினாலே நானா விதமாகி ... மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த மார்பகம் ஆகும் மேரு மலையாலே, பல விதமாக மனம் கலங்கி, உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா ... நெருப்பு உலையில் பட்ட நல்ல மெழுகு போல உருகி, காம மோகம் என்னும் அலை வீசும் கடலினுள் முழுகி, உடல் பஞ்ச பாதகமாய் ஆ(ய்) நோயால் அழிவேனோ ... உடல் பஞ்ச பாதகத்துக்கும் ஈடாகி, பிணியால் அழிவேனோ? உறு தண்ட(ம்) பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர் உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள் அருள்வாயே ... கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு இவைகளுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதுவர்கள் என் உயிரைக் கொண்டு போய் விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருளுக. அலை கொண்ட வாரிதி கோகோ கோகோ என நின்று வாய் விடவே ... அலை வீசும் கடல் கோகோ என்று வாய் விட்டு ஒலித்து ஓலமிட, நீள் மா சூர் அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே ... பெரிய மாமரமாய் நின்ற சூரன் வைத்திருந்த அழகிய வில்லும் அம்புகளும் வேறுபட்டுத் தூளாகவே, தான்அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா ... சுயம் பிரகாசமான ஜோதியைத் தன்னிடம் கொண்ட, நேர்மை நிறைந்த, பெரிய, பெருமை வாய்ந்த நெருப்பு உருவத்தில் திருக் கையில் உள்ள வேலைச் செலுத்திய வீரனே, தீரனே, அருமை வாய்ந்த அழகுள்ள உருவத்தவனே, ஒப்பற்ற ஒருவனே, வேறு ஓர் வடிவாகி மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே ... வேற்று வடிவமான (வேட) உருவத்துடன் வள்ளிமலையில் வாழும் வேடர்கள் வசிக்கும் காட்டுக்குள் சென்று, குறப் பெண்ணாகிய வள்ளியின் மேல் ஆசை கொண்டு, மயல் கொண்டு உலாய் அவள் தாள் மீதே வீழ் குமரேசா ... மோக மயக்கத்துடன் உலாவி, அவளுடைய பாதங்களில் மீது வீழ்ந்து வணங்கிய குமரேசா. மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா ... அறிவு நிறைந்த ஞான வேலனே, மாணவனாக உபதேசத்தைப் பெற்று மகிழ்ந்த சிவபிரான் வணங்கும் திருவடியை உடைய நாதனே, மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே. ... மயிலம் என்னும் குளிர்ந்த மலையில் வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.