நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும்
நீடும் அதிரேக(ம்) இன்பமாகிய ச(ல்)லாப சந்த்ரன் நேர் தரு(ம்) முக அரவிந்தம் அதனாலும்
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும்
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி
மயல் நானும் உழன்று திரிவேனோ
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன்
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நார சிங்கன் மருகோனே
பீலி மயில் மீது உறைந்து சூரர் தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற
பேறை நகர் வாழ வந்த பெருமாளே.
நீல நிறமான மயில்கள் சேர்ந்து விளையாடும் மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பேரிருள் மிக்கு நிறைந்துள்ள கூந்தலாலும், நீடித்துள்ள மிக்க இன்பம் தருவதாகி இன்பமாய்ப் பேசத் தக்க, சந்திரனுக்கு ஒப்பான முகத் தாமரையாலும், ஆலிலைக்கு ஒப்பான வயிற்றாலும், பெண்களின் மோக வலையை வீசுகின்ற கெண்டை மீன் போன்ற கண்களாலும், கடைந்து எடுத்த குடம் போன்ற, கச்சு அணிந்த மார்பகங்களினாலும் கண்கள் மங்கி அறிவும் மயங்கியவனாகி, காம மயக்கத்தில் நானும் கலங்கித் திரிவேனோ? பன்றியின் உருவோடு அவதரித்து, மண்ணைத் தோண்டிச் சென்று பூமியை மீட்டு வந்தவனும், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனுமான முராரியாகிய திருமால், லக்ஷ்மியை மார்பில் வைத்தவன், கூடத்தில் இருந்த பெரிய செம் பொன்னாலாகிய உயர்ந்த தூணில் தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த, நரசிங்க மூர்த்தியின் மருகனே, தோகை நிறைந்த மயில் மீது வீற்றிருந்து, சூரர்களை வென்ற, புகழ் மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருக்கையை உடைய முருகனே, இளம் பெண் அன்னங்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் பேறை நகர் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.
நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும் ... நீல நிறமான மயில்கள் சேர்ந்து விளையாடும் மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பேரிருள் மிக்கு நிறைந்துள்ள கூந்தலாலும், நீடும் அதிரேக(ம்) இன்பமாகிய ச(ல்)லாப சந்த்ரன் நேர் தரு(ம்) முக அரவிந்தம் அதனாலும் ... நீடித்துள்ள மிக்க இன்பம் தருவதாகி இன்பமாய்ப் பேசத் தக்க, சந்திரனுக்கு ஒப்பான முகத் தாமரையாலும், ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும் ... ஆலிலைக்கு ஒப்பான வயிற்றாலும், பெண்களின் மோக வலையை வீசுகின்ற கெண்டை மீன் போன்ற கண்களாலும், ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி ... கடைந்து எடுத்த குடம் போன்ற, கச்சு அணிந்த மார்பகங்களினாலும் கண்கள் மங்கி அறிவும் மயங்கியவனாகி, மயல் நானும் உழன்று திரிவேனோ ... காம மயக்கத்தில் நானும் கலங்கித் திரிவேனோ? கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் ... பன்றியின் உருவோடு அவதரித்து, மண்ணைத் தோண்டிச் சென்று பூமியை மீட்டு வந்தவனும், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனுமான முராரியாகிய திருமால், லக்ஷ்மியை மார்பில் வைத்தவன், கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நார சிங்கன் மருகோனே ... கூடத்தில் இருந்த பெரிய செம் பொன்னாலாகிய உயர்ந்த தூணில் தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த, நரசிங்க மூர்த்தியின் மருகனே, பீலி மயில் மீது உறைந்து சூரர் தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே ... தோகை நிறைந்த மயில் மீது வீற்றிருந்து, சூரர்களை வென்ற, புகழ் மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருக்கையை உடைய முருகனே, பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற ... இளம் பெண் அன்னங்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் பேறை நகர் வாழ வந்த பெருமாளே. ... பேறை நகர் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.