அகத்தினைக் கொண்டு இப்புவி மேல் சில தினத்து மற்று ஒன்று உற்று அறியாது
பின் அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே அசுத்த மைக் கண் கொட்பு உறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க(ண்)ணில் சென்றுத் தடுமாறியெ சில நாள் போய் இகத்தை மெய்க் கொண்டு இப்புவி பாலர் பொன் மயக்கில் உற்று
அம் பற்றை விடாது உடலில் இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வா(கி)யே எமக் கயிற்றின் சிக்கி நி(ல்)லா முன்
உன் மலர்ப் பதத்தின் பத்தி விடா மனது இருக்கு(ம்) நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள் தாராய்
புகழ்ச் சிலைக் கந்தர்ப்பனுமே பொடி படச் சிரித்து அண் முப்புர(ம்) நீறு செய் புகைக் கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்து(ம்) முற்றும் செற்றிடவே பகை புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன் மருகோனே
திகழ்க் கடப்பம் புட்பமது ஆர் புய(ம்) மறைத்து உருக் கொண்ட அற்புதமாகிய தினைப் புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா
செகத்தில் உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்று அழகே செறி திருக் கழுக் குன்றத்தினில் மேவிய பெருமாளே.
இல்லறத்தைத் தழுவி இந்தப் பூமியில் சில நாட்கள் வேறு ஒரு நல்ல மார்க்கத்தையும் தெரிந்து கொள்ளாமல், பின்பு பயனில்லாத (கேடு தரத்தக்க) மன்மதன் செலுத்தி வருத்தும் அம்பால், அசுத்தமானதும் மை பூசியதுமான கண்களைச் சுழற்றும் பெண்கள் சிரித்துப் பேசும் பொய் என்னும் கடலில் முழுகி, துக்கத்தில் பட்டு நிலை தடுமாறி இங்ஙனம் சில நாட்கள் போக, இம்மை வாழ்வை மெய் என்று எண்ணி, இந்தப் பூமி, குழந்தைகள், பொருள் ஆகிய மாயையில் அகப்பட்டு, அந்த ஆசையை விடாமல் உடலில் சோர்வு, மூச்சு வாங்குதல், பித்தம் முதலிய நோய்கள் மேலிட, தலை மயிர் நரைத்து கிழவனாகி, நமனுடைய பாசக் கயிற்றில் சிக்குண்டு நான் நிற்பதற்கு முன்னதாக, உன்னுடைய மலர் போன்ற திருவடிகளில் பக்தியை விடாதுள்ள மனதைப் பெற்ற நல்ல அடியார்களுக்கு நானும் சமமாகும்படி உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. யாவரும் புகழும் (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனும் எரிந்து போகவும் சிரித்து, தம்மை அணுகி வந்த திரிபுரத்தையும் சாம்பலாக்கிய புகை நெருப்பைக் கொண்ட நெற்றிக்கண்ணை உடையவரான சிவபெருமானுடய காதலியாகிய பார்வதி பெற்றருளின மகனே. பூமியில் போர் வரவும் (திருதராஷ்டிரனின்) பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள், இதர அரசர்கள் யாவரும் முழுப் பகையாகவும், (மகாபாரதப்) போரைத் துவக்கி வைத்த, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய, திருமாலின் மருகனே, விளங்கும் கடப்ப மலர் மாலை நிறைந்த தோள்களை மறைத்து வேறு கோலத்தைப் பூண்டு, அற்புதம் நிறைந்த வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்தில் இன்பமாக வாழ்ந்த வள்ளியைத் தழுவும் குணவானே, பூமியில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரன் தலைநகராகிய அமராவதிக்கு ஒப்பாகும் என்று விளங்கும்படி அழகு நிறைந்த திருக்கழுக் குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
அகத்தினைக் கொண்டு இப்புவி மேல் சில தினத்து மற்று ஒன்று உற்று அறியாது ... இல்லறத்தைத் தழுவி இந்தப் பூமியில் சில நாட்கள் வேறு ஒரு நல்ல மார்க்கத்தையும் தெரிந்து கொள்ளாமல், பின் அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே அசுத்த மைக் கண் கொட்பு உறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ ... பின்பு பயனில்லாத (கேடு தரத்தக்க) மன்மதன் செலுத்தி வருத்தும் அம்பால், அசுத்தமானதும் மை பூசியதுமான கண்களைச் சுழற்றும் பெண்கள் சிரித்துப் பேசும் பொய் என்னும் கடலில் முழுகி, அலக்க(ண்)ணில் சென்றுத் தடுமாறியெ சில நாள் போய் இகத்தை மெய்க் கொண்டு இப்புவி பாலர் பொன் மயக்கில் உற்று ... துக்கத்தில் பட்டு நிலை தடுமாறி இங்ஙனம் சில நாட்கள் போக, இம்மை வாழ்வை மெய் என்று எண்ணி, இந்தப் பூமி, குழந்தைகள், பொருள் ஆகிய மாயையில் அகப்பட்டு, அம் பற்றை விடாது உடலில் இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வா(கி)யே எமக் கயிற்றின் சிக்கி நி(ல்)லா முன் ... அந்த ஆசையை விடாமல் உடலில் சோர்வு, மூச்சு வாங்குதல், பித்தம் முதலிய நோய்கள் மேலிட, தலை மயிர் நரைத்து கிழவனாகி, நமனுடைய பாசக் கயிற்றில் சிக்குண்டு நான் நிற்பதற்கு முன்னதாக, உன் மலர்ப் பதத்தின் பத்தி விடா மனது இருக்கு(ம்) நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள் தாராய் ... உன்னுடைய மலர் போன்ற திருவடிகளில் பக்தியை விடாதுள்ள மனதைப் பெற்ற நல்ல அடியார்களுக்கு நானும் சமமாகும்படி உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. புகழ்ச் சிலைக் கந்தர்ப்பனுமே பொடி படச் சிரித்து அண் முப்புர(ம்) நீறு செய் புகைக் கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா ... யாவரும் புகழும் (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனும் எரிந்து போகவும் சிரித்து, தம்மை அணுகி வந்த திரிபுரத்தையும் சாம்பலாக்கிய புகை நெருப்பைக் கொண்ட நெற்றிக்கண்ணை உடையவரான சிவபெருமானுடய காதலியாகிய பார்வதி பெற்றருளின மகனே. புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்து(ம்) முற்றும் செற்றிடவே பகை புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன் மருகோனே ... பூமியில் போர் வரவும் (திருதராஷ்டிரனின்) பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள், இதர அரசர்கள் யாவரும் முழுப் பகையாகவும், (மகாபாரதப்) போரைத் துவக்கி வைத்த, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய, திருமாலின் மருகனே, திகழ்க் கடப்பம் புட்பமது ஆர் புய(ம்) மறைத்து உருக் கொண்ட அற்புதமாகிய தினைப் புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா ... விளங்கும் கடப்ப மலர் மாலை நிறைந்த தோள்களை மறைத்து வேறு கோலத்தைப் பூண்டு, அற்புதம் நிறைந்த வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்தில் இன்பமாக வாழ்ந்த வள்ளியைத் தழுவும் குணவானே, செகத்தில் உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்று அழகே செறி திருக் கழுக் குன்றத்தினில் மேவிய பெருமாளே. ... பூமியில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரன் தலைநகராகிய அமராவதிக்கு ஒப்பாகும் என்று விளங்கும்படி அழகு நிறைந்த திருக்கழுக் குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.