வெல்லிக் கு(வீ)க்கும் முல்லைக் கை வீக்கு வில் இக்கு அதாக் கருதும் வேளால்
வில் அற்ற அவாக் கொள் சொல் அற்று உகாப் பொய் இல்லத்து உறாக் கவலை மேவு
பல் அத்தி வாய்க்க அல்லல் படு ஆக்கை
நல்லில் பொறாச் சமயம் ஆறின் பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்விக் கலாத்து அலையலாமோ
அல்லைக் கொல் வார்த்தை சொல்லிக்கு இத(ம்) ஒத்து சொல் குக்குட(ம்) ஆர்த்த இளையோனே
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லைப் படாக் கருணை வேளே
வல் ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் அருள்வோனே
வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.
இந்த உலகத்தையே வென்று குவிக்கத் தக்க, முல்லை மலர்ப் பாணம் தரித்த கையை உடைய, நாண் பூட்டிய வில்லாக கரும்பு அமைய, வேண்டுமென்றே செய்யும் மன்மதனது லீலையால் (நான்) ஒளி மங்கிப் போய், ஆசை கொண்டு, உரைக்கும் சொல்லும் போய், மனம் நெகிழ்ந்து, பொய் வாழ்வு உடைய (பரத்தையர்) வீட்டுக்குப் போய், கவலை மிகுந்து, அங்கே பல துன்பங்கள் நேர, அவற்றில் மூழ்கி அல்லல் படுகின்ற இந்த உடலை உடையவன் நான். நன் மார்க்கத்தில் சேராத ஆறு சமயங்களின் பல பொருள் மார்க்கத்தை உடைய வல்லரக்கர் ஆகிய முரட்டுப் பிடிவாதக்காரர்களின் குதர்க்க வாதக் கல்விப் போரில் புகுந்து நான் அலைபடலாமோ? (விரக வேதனையால்) இந்த இராக் காலம் ஒழியாதா என்னும் சொல்லை உடைய (ஒரு தலைக் காமம் உற்ற) தலைவிக்கு இதமாக, அவளோடு ஒத்து (விடியலை உணர்த்தும்) குரல் கொடுத்து கொக்கரிக்கும் சேவலைக் கொடியாகக் கொண்ட இளையோனே, இருண்ட இரவையும், சிறிது வழி தெரிவிக்கும் பகலையும் கடந்த மேலிடத்தில் எழுந்தருளி இருக்கின்ற, அளவு கடந்த கருணை வள்ளலே, வலிய அழகிய (நந்தியாம்) ரிஷப வாகனத்தை உடையவரும், தில்லைப்பதிக்கு ஏற்றவரும், (பார்வதியாம்) சிவகாம வல்லிக்கு உகந்தவருமாகிய சிவபெருமான் அருளிய புதல்வனே, வள்ளிக் கொடிகளின் கூட்டம் நெருங்கிய வள்ளி மலையின் மேல் சென்று தினைப்புனத்தைக் காத்த வள்ளி அம்மைக்கு கணவனாக வாய்த்த பெருமாளே.
வெல்லிக் கு(வீ)க்கும் முல்லைக் கை வீக்கு வில் இக்கு அதாக் கருதும் வேளால் ... இந்த உலகத்தையே வென்று குவிக்கத் தக்க, முல்லை மலர்ப் பாணம் தரித்த கையை உடைய, நாண் பூட்டிய வில்லாக கரும்பு அமைய, வேண்டுமென்றே செய்யும் மன்மதனது லீலையால் வில் அற்ற அவாக் கொள் சொல் அற்று உகாப் பொய் இல்லத்து உறாக் கவலை மேவு ... (நான்) ஒளி மங்கிப் போய், ஆசை கொண்டு, உரைக்கும் சொல்லும் போய், மனம் நெகிழ்ந்து, பொய் வாழ்வு உடைய (பரத்தையர்) வீட்டுக்குப் போய், கவலை மிகுந்து, பல் அத்தி வாய்க்க அல்லல் படு ஆக்கை ... அங்கே பல துன்பங்கள் நேர, அவற்றில் மூழ்கி அல்லல் படுகின்ற இந்த உடலை உடையவன் நான். நல்லில் பொறாச் சமயம் ஆறின் பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்விக் கலாத்து அலையலாமோ ... நன் மார்க்கத்தில் சேராத ஆறு சமயங்களின் பல பொருள் மார்க்கத்தை உடைய வல்லரக்கர் ஆகிய முரட்டுப் பிடிவாதக்காரர்களின் குதர்க்க வாதக் கல்விப் போரில் புகுந்து நான் அலைபடலாமோ? அல்லைக் கொல் வார்த்தை சொல்லிக்கு இத(ம்) ஒத்து சொல் குக்குட(ம்) ஆர்த்த இளையோனே ... (விரக வேதனையால்) இந்த இராக் காலம் ஒழியாதா என்னும் சொல்லை உடைய (ஒரு தலைக் காமம் உற்ற) தலைவிக்கு இதமாக, அவளோடு ஒத்து (விடியலை உணர்த்தும்) குரல் கொடுத்து கொக்கரிக்கும் சேவலைக் கொடியாகக் கொண்ட இளையோனே, அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லைப் படாக் கருணை வேளே ... இருண்ட இரவையும், சிறிது வழி தெரிவிக்கும் பகலையும் கடந்த மேலிடத்தில் எழுந்தருளி இருக்கின்ற, அளவு கடந்த கருணை வள்ளலே, வல் ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் அருள்வோனே ... வலிய அழகிய (நந்தியாம்) ரிஷப வாகனத்தை உடையவரும், தில்லைப்பதிக்கு ஏற்றவரும், (பார்வதியாம்) சிவகாம வல்லிக்கு உகந்தவருமாகிய சிவபெருமான் அருளிய புதல்வனே, வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. ... வள்ளிக் கொடிகளின் கூட்டம் நெருங்கிய வள்ளி மலையின் மேல் சென்று தினைப்புனத்தைக் காத்த வள்ளி அம்மைக்கு கணவனாக வாய்த்த பெருமாளே.