கள்ளக் குவால் பை தொள்ளைப் புலால் பை
துள் இக்கனார்க்கு அயவு கோப கள் வைத்த தோல் பை
பொள்ளுற்ற கால் பை கொள்ளைத் துரால் பை
பசு பாச அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீப் பை
வெள்ளிட்ட அசா
பிசிதம் ஈரல் அள்ளச் சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ
தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும் வெள் உத்தி மாற்கும் மருகோனே
சிள் இட்ட காட்டில் உள்ளக் கிரார் கொல் புள் அத்த மார்க்கம் வருவோனே
வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு
நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே
வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.
வஞ்சனை, பொய் இவைகளின் கூட்டம் நிறைந்த பை, ஓட்டைகளை உடைய மாமிசப்பை, துள்ளுகின்ற மன்மதனுடைய சேட்டைகளினால் தளர்வு, கோபம், களவு இவைகளுக்கு இருப்பிடமான தோல் பை, வேகமாக விரைந்து செல்லும் பலவித காற்றுகள் நிறைந்த பை, யமன் சூறையாடிக் கொண்டு போவதற்கு அமைந்த செத்தையாகிய பை, ஜீவாத்மா, பந்தம் இவைகளுக்கு இடமாகிய சேற்றுப் பை, ஆசை மயக்கத்துக்கு இடமாகிய பை, பாவங்களுக்கு இருப்பிடமாகிய பை, சீழ் சேருகின்ற பை, மிகுந்த தளர்ச்சி அடைந்த பை, இறைச்சி, ஈரல் முதலிய உறுப்புக்களை அள்ளி உண்பதற்கு நாய்கள் குலைத்தும், இழுத்தும் பற்களால் குதறப்படுகின்ற இந்த உடலை ஒழிக்க மாட்டேனோ? அறிவு நிறைந்த தேவயானையின் தலைவனே, (ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரனுக்கும், வெண்ணிறமான திருப்பாற் கடலில் உறையும் திருமாலுக்கும் மருகனே, வண்டுகள் நிறைந்த காட்டில் வசிக்கும் மலை வேடர்கள் கொல்லும் பறவைகள் உள்ள கடுமையான காட்டு வழியில் வள்ளியின் பொருட்டு வருகின்றவனே, வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்னும் உபதேசத்தை தமக்கும் சொல்லுக என்று கேட்ட தந்தையாகிய சிவபெருமானுக்கு கண்ணிமைக்கும் ஒரு க்ஷணப் பொழுதில் அவருடைய செவியில் ஏற்றிய இளையவனே, வள்ளிக் கொடிகள் கூட்டமாய் அடர்ந்த வள்ளி மலைத் தினைப்புனத்தில் காவல் புரிந்த வள்ளி அம்மைக்கு (மணாளனாக) வாய்த்த பெருமாளே.
கள்ளக் குவால் பை தொள்ளைப் புலால் பை ... வஞ்சனை, பொய் இவைகளின் கூட்டம் நிறைந்த பை, ஓட்டைகளை உடைய மாமிசப்பை, துள் இக்கனார்க்கு அயவு கோப கள் வைத்த தோல் பை ... துள்ளுகின்ற மன்மதனுடைய சேட்டைகளினால் தளர்வு, கோபம், களவு இவைகளுக்கு இருப்பிடமான தோல் பை, பொள்ளுற்ற கால் பை கொள்ளைத் துரால் பை ... வேகமாக விரைந்து செல்லும் பலவித காற்றுகள் நிறைந்த பை, யமன் சூறையாடிக் கொண்டு போவதற்கு அமைந்த செத்தையாகிய பை, பசு பாச அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீப் பை ... ஜீவாத்மா, பந்தம் இவைகளுக்கு இடமாகிய சேற்றுப் பை, ஆசை மயக்கத்துக்கு இடமாகிய பை, பாவங்களுக்கு இருப்பிடமாகிய பை, சீழ் சேருகின்ற பை, வெள்ளிட்ட அசா ... மிகுந்த தளர்ச்சி அடைந்த பை, பிசிதம் ஈரல் அள்ளச் சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ ... இறைச்சி, ஈரல் முதலிய உறுப்புக்களை அள்ளி உண்பதற்கு நாய்கள் குலைத்தும், இழுத்தும் பற்களால் குதறப்படுகின்ற இந்த உடலை ஒழிக்க மாட்டேனோ? தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும் வெள் உத்தி மாற்கும் மருகோனே ... அறிவு நிறைந்த தேவயானையின் தலைவனே, (ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரனுக்கும், வெண்ணிறமான திருப்பாற் கடலில் உறையும் திருமாலுக்கும் மருகனே, சிள் இட்ட காட்டில் உள்ளக் கிரார் கொல் புள் அத்த மார்க்கம் வருவோனே ... வண்டுகள் நிறைந்த காட்டில் வசிக்கும் மலை வேடர்கள் கொல்லும் பறவைகள் உள்ள கடுமையான காட்டு வழியில் வள்ளியின் பொருட்டு வருகின்றவனே, வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு ... வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்னும் உபதேசத்தை தமக்கும் சொல்லுக என்று கேட்ட தந்தையாகிய சிவபெருமானுக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே ... கண்ணிமைக்கும் ஒரு க்ஷணப் பொழுதில் அவருடைய செவியில் ஏற்றிய இளையவனே, வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. ... வள்ளிக் கொடிகள் கூட்டமாய் அடர்ந்த வள்ளி மலைத் தினைப்புனத்தில் காவல் புரிந்த வள்ளி அம்மைக்கு (மணாளனாக) வாய்த்த பெருமாளே.