மச்சம் மெச்சு(ம்) சூத்ரம் ரத்த பித்த மூத்(தி)ரம் வைச்சு இறைச்ச பாத்திரம்
அநுபோகம் மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை
மண் குல பதார்த்தம் இடி பாறை
எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும்
இக் கடத்தை நீக்கி அக் கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே
பொய்ச் சி(ன்)னத்தை மாற்றி மெய்ச் சி(ன்)னத்தை ஏற்றி
பொன் பதத்துள் ஆக்கு(ம்) புலியூரா
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு
புத்தி மெத்த காட்டு(ம்) புன வேடன்
பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும்
வீக்கு பைச் சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட
பத்தருக்கு வாய்த்த பெருமாளே.
(இந்த உடலானது) அலங்கரித்த கட்டில். மெச்சத் தக்க ஓர் இயந்திரம். பித்தம், மூத்திரம் (இவைகள்) வைத்து பாய்ச்சப்பட்ட ஒரு பாத்திரம். வலிவு குன்றி அழியும் ஒரு கூடு. உட்புறத்தில் புழுத்துப் போயுள்ள வாழ்க்கை. மண் இனத்தால் ஆக்கப்பட்ட ஒரு பொருள். இடிந்து விழுகின்ற பாறை. இளைத்து மெலிந்த பேய்க்கும், மெலிந்து இளைத்த நாய்க்கும், இளைத்து மெலிந்த ஈக்களுக்கும் இறுதியில் உணவாகின்ற ஒரு பொருள். இத்தகைய உடம்பை ஒழித்து, அந்த சுத்த, அழியாத தேகத்தில் என்னைப் புகுத்தி, இவ்வாறு வீட்டின்பத்தைத் தந்து அருள்வாயாக. (உன் மீது அன்பு வைத்தவர்களுக்கு) பொய்யாகிய அடையாளங்களை ஒழித்து, மெய்யான அடையாளங்களைத் தந்து, உனது அழகிய பாதங்களில் ஏற்றுக் கொள்ளும் புலியூரானே (சிதம்பரநாதனே), விபூதிப் பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு உண்மை அறிவை நன்கு காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும், (அவன்) தோளில் கட்டியிருந்த வலிய வில்லுக்கும் வெகுவாக உகந்து அவனை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய செல்வக் குமரனே, முறைமையுடன் வீட்டின்பத்தை உபதேசித்து தந்தையாகிய சிவபெருமானுடைய உள்ளத்தை வசப்படுத்தியவனே, பக்தர்களுக்கு அருமையாகக் கிட்டியுள்ள பெருமாளே.
மச்சம் மெச்சு(ம்) சூத்ரம் ரத்த பித்த மூத்(தி)ரம் வைச்சு இறைச்ச பாத்திரம் ... (இந்த உடலானது) அலங்கரித்த கட்டில். மெச்சத் தக்க ஓர் இயந்திரம். பித்தம், மூத்திரம் (இவைகள்) வைத்து பாய்ச்சப்பட்ட ஒரு பாத்திரம். அநுபோகம் மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை ... வலிவு குன்றி அழியும் ஒரு கூடு. உட்புறத்தில் புழுத்துப் போயுள்ள வாழ்க்கை. மண் குல பதார்த்தம் இடி பாறை ... மண் இனத்தால் ஆக்கப்பட்ட ஒரு பொருள். இடிந்து விழுகின்ற பாறை. எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும் ... இளைத்து மெலிந்த பேய்க்கும், மெலிந்து இளைத்த நாய்க்கும், இளைத்து மெலிந்த ஈக்களுக்கும் இறுதியில் உணவாகின்ற ஒரு பொருள். இக் கடத்தை நீக்கி அக் கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே ... இத்தகைய உடம்பை ஒழித்து, அந்த சுத்த, அழியாத தேகத்தில் என்னைப் புகுத்தி, இவ்வாறு வீட்டின்பத்தைத் தந்து அருள்வாயாக. பொய்ச் சி(ன்)னத்தை மாற்றி மெய்ச் சி(ன்)னத்தை ஏற்றி ... (உன் மீது அன்பு வைத்தவர்களுக்கு) பொய்யாகிய அடையாளங்களை ஒழித்து, மெய்யான அடையாளங்களைத் தந்து, பொன் பதத்துள் ஆக்கு(ம்) புலியூரா ... உனது அழகிய பாதங்களில் ஏற்றுக் கொள்ளும் புலியூரானே (சிதம்பரநாதனே), பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு ... விபூதிப் பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு புத்தி மெத்த காட்டு(ம்) புன வேடன் ... உண்மை அறிவை நன்கு காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் ... பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும், வீக்கு பைச் சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே ... (அவன்) தோளில் கட்டியிருந்த வலிய வில்லுக்கும் வெகுவாக உகந்து அவனை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய செல்வக் குமரனே, பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட ... முறைமையுடன் வீட்டின்பத்தை உபதேசித்து தந்தையாகிய சிவபெருமானுடைய உள்ளத்தை வசப்படுத்தியவனே, பத்தருக்கு வாய்த்த பெருமாளே. ... பக்தர்களுக்கு அருமையாகக் கிட்டியுள்ள பெருமாளே.