மகரமொடு உறு குழை ஓலை காட்டியு(ம்) மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும்
வரவர வர இதழ் ஊறல் ஊட்டியும் வலை வீசும் மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் வழி வழி ஒழுகும் உபாய வாழ்க்கையில் வளமையில் இளமையில் மாடை வேட்கையில் மறுகாதே
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திரு நீறு சேர்த்திறம் இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக எழில் பட மழுவுடன் மானும் ஏற்றதும்
இசை பட இசை தரு ஆதி தோற்றமும் இவை இவை என உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய தவ முனி சகம் உளர் பாடு பாட்டு என மறை பாடி
தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ னாச்சில சபதமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள் அகு குகுகுகு என ஆளி வாய்ப் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும்
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே அரி துயில் சயன வியாள மூர்த்தனு(ம்) மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும்
அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே.
மகர மீன் போன்ற குண்டலங்களையும் காதோலையையும் காட்டியும், மழை போல் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில் உள்ள மாலையைக் காட்டியும், பழகப் பழக வாயிதழ் ஊறலைக் காட்டியும், (காம) வலையை வீசுகின்ற மகர மீன் போன்ற கண்ணை உடைய பெண்களின் பாடலிலும் பேச்சிலும் ஈடுபட்டு அந்த வழியே நடக்கின்ற தந்திரமான வாழ்க்கையிலும், அவர்களுடைய செல்வத்திலும், இளமையிலும், பொன்னைச் சேர்க்கும் ஆசையிலும் நான் சுழன்று மனம் கலங்காமல், மாறுபட்டுப் பொய் பேசிய பிரமனுடைய மண்டை ஓடாகிய பாத்திரத்தை (சிவபெருமான் ஏந்திய திறமும்), அழகு விளங்க இடப்படுகின்ற திரு நீறு அவர் உடலில் சேர்ந்துள்ள திறமும், கொன்றை மலரை அழகுள்ள சடையில் செருகிச் சேர்த்துள்ள திறமும், வெற்றிக்கு அடையாளமாக அழகு விளங்க மழுவாயுதத்தையும் மானையும் கையில் ஏற்ற தன்மையும், புகழ் விளங்க யாவராலும் சொல்லப்படும் ஆதியாகத் தோன்றிய தோற்றமும், இன்ன இன்ன காரணத்தால் என்று நீ உபதேசித்துப் புலப்படுவதும் ஆகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக் கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த (ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை (தேவாரமாக) அமைத்துப் பாடியவனே, தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாள வாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும், சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதிசேஷ மூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகு பொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும், நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே.
மகரமொடு உறு குழை ஓலை காட்டியு(ம்) மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும் ... மகர மீன் போன்ற குண்டலங்களையும் காதோலையையும் காட்டியும், மழை போல் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில் உள்ள மாலையைக் காட்டியும், வரவர வர இதழ் ஊறல் ஊட்டியும் வலை வீசும் மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் வழி வழி ஒழுகும் உபாய வாழ்க்கையில் வளமையில் இளமையில் மாடை வேட்கையில் மறுகாதே ... பழகப் பழக வாயிதழ் ஊறலைக் காட்டியும், (காம) வலையை வீசுகின்ற மகர மீன் போன்ற கண்ணை உடைய பெண்களின் பாடலிலும் பேச்சிலும் ஈடுபட்டு அந்த வழியே நடக்கின்ற தந்திரமான வாழ்க்கையிலும், அவர்களுடைய செல்வத்திலும், இளமையிலும், பொன்னைச் சேர்க்கும் ஆசையிலும் நான் சுழன்று மனம் கலங்காமல், இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திரு நீறு சேர்த்திறம் இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக எழில் பட மழுவுடன் மானும் ஏற்றதும் ... மாறுபட்டுப் பொய் பேசிய பிரமனுடைய மண்டை ஓடாகிய பாத்திரத்தை (சிவபெருமான் ஏந்திய திறமும்), அழகு விளங்க இடப்படுகின்ற திரு நீறு அவர் உடலில் சேர்ந்துள்ள திறமும், கொன்றை மலரை அழகுள்ள சடையில் செருகிச் சேர்த்துள்ள திறமும், வெற்றிக்கு அடையாளமாக அழகு விளங்க மழுவாயுதத்தையும் மானையும் கையில் ஏற்ற தன்மையும், இசை பட இசை தரு ஆதி தோற்றமும் இவை இவை என உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே ... புகழ் விளங்க யாவராலும் சொல்லப்படும் ஆதியாகத் தோன்றிய தோற்றமும், இன்ன இன்ன காரணத்தால் என்று நீ உபதேசித்துப் புலப்படுவதும் ஆகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய தவ முனி சகம் உளர் பாடு பாட்டு என மறை பாடி ... இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக் கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த (ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை (தேவாரமாக) அமைத்துப் பாடியவனே, தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ னாச்சில சபதமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள் அகு குகுகுகு என ஆளி வாய்ப் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும் ... தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாள வாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும், அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே அரி துயில் சயன வியாள மூர்த்தனு(ம்) மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் ... சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதிசேஷ மூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகு பொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும், அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே. ... நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே.