தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டும் உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர்
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல தைச் சரசமோடு உறவெ ஆடி அகமே கொடு போய்
எத்தி அணை மீதில் இது காலம் என் நி(நீ)ர் போவது என தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக
குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர மச்ச விழி பூசலிட வாய் பு(ல்)லி உ(ல்)லாசமுடன் ஒப்பி இருவோரு(ம்) மயல் மூழ்கிய பின்
ஆபரணம் வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி செயலாமோ
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடம் இடுவோனே
துத்தி தனபார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வ(ள்)ளி நாயகியை சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா
சுத்த மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறு முக
சுப்ரமணியா புலியூர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே.
கிளி போல் (இனிமையாகப்) பேசி மயில் போல நடித்தும், பலவிதமான காமத்தை எழுப்ப வல்ல சிரிப்பைச் சிரித்தும், அப்போதே வெட்கப்படுவது போல நாணத்தைக் காட்டியும், மார்பகங்களை ஆடையால் மூடியும் நின்ற அந்தப் பொது மகளிர் எங்கள் வீடு கொஞ்ச தூரத்தில் தான் இருக்கின்றது, இனி நீங்கள் வர வேண்டும் என்று ஓடி, மடியைப் பிடித்து இழுத்துச் செல்வது போல அழைத்து, தைக்கும்படியான காம இன்ப லீலைகளைச் செய்து உறவு முறையில் விளையாடி, வீட்டுக்குக் கொண்டு போய் வஞ்சனை எண்ணத்துடன் படுக்கையின் மேல் இருத்தி, இது தக்க சமயம் அன்றோ? ஏன் நீர் போகின்றீர்? என்று கூறி, தட்டில் புனுகு சட்டத்துடன், பன்னீர் முதலிய பலவிதமான வாசனைத் திரவியங்களை வந்தவருடைய உடலில் பூசி, முகத்தோடு முகம் வைத்து, இன்ப ரசமான வாயிதழ் ஊறல் பெருக, கூந்தல் கலைய, ஒளி வீசும் கண்கள் சுழன்று துடிக்க, வட்டமான தனங்கள் மார்பில் புதைந்து திகழ, வேர்வை உண்டாக, தோளை இறுக அணைத்து, உடை நெகிழ, மீன் போன்ற விழிகள் காமப் போரை விளைவிக்க, கட்டித் தழுவி ஆனந்தமாக மனம் ஒப்பி, இருவரும் காம மயக்கில் முழுகிய பின்னர், வந்தவர் நகைகளை அடமானம் வைத்து, தேடிய பொருளை எல்லாம் சூறைக் காற்று அடித்துக் கொண்டு போகின்ற விலைமகளிருடன் கலவி இன்பம் பெறும் தொழில் நல்லதாகுமா? சக்தி, தனித்து விளங்கும் ஜோதி, அழகிய பார்வதி, பலவித உருவத்தை உடையவள், சுக நிலையிலேயே இருக்கின்ற நித்திய கல்யாணி, என்னைப் பெற்ற தாயாகிய, இமவான் மடந்தை, சிவை, பரமசிவனுடன் நடனம் இடும் அபிராமி, சிவகாமி ஆகிய உமாதேவி அருளிய பாலனே, சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு ரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி அசுரர்கள் அழியுமாறு சக்தி வேலைச் செலுத்தி தேவர்களைச் சிறையினின்று மீட்டு நடனம் செய்பவனே, தேமல் பரந்த தன பாரங்கள் உள்ளவளும், மோகம் தர வல்லவளும், சுகக் கடல் போன்றவளும், மிக்க அழகிய முக வடிவத்தைக் கொண்டவளும், எனது தாய் ஆனவளும் ஆகிய வள்ளி அம்மையை பரிசுத்தமான படுக்கையில், மாலை அணிந்த பெரிய மார்பகங்களை விட்டுப் பிரியாத அழகிய கரத்துடன் விளங்கும் மணிமார்பனே, பரிசுத்தமான, அழகிய, சிறந்த தவ சிகாமணியே என்று ஓதுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் குடியாக உறைகின்ற ஆறுமுகனே, சுப்ரமணியனே, புலியூரில் பொருந்தி வீற்றிருப்பவனே, தேவர்கள் போற்றும் பெருமாளே.
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டும் உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் ... கிளி போல் (இனிமையாகப்) பேசி மயில் போல நடித்தும், பலவிதமான காமத்தை எழுப்ப வல்ல சிரிப்பைச் சிரித்தும், அப்போதே வெட்கப்படுவது போல நாணத்தைக் காட்டியும், மார்பகங்களை ஆடையால் மூடியும் நின்ற அந்தப் பொது மகளிர் சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல தைச் சரசமோடு உறவெ ஆடி அகமே கொடு போய் ... எங்கள் வீடு கொஞ்ச தூரத்தில் தான் இருக்கின்றது, இனி நீங்கள் வர வேண்டும் என்று ஓடி, மடியைப் பிடித்து இழுத்துச் செல்வது போல அழைத்து, தைக்கும்படியான காம இன்ப லீலைகளைச் செய்து உறவு முறையில் விளையாடி, வீட்டுக்குக் கொண்டு போய் எத்தி அணை மீதில் இது காலம் என் நி(நீ)ர் போவது என தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக ... வஞ்சனை எண்ணத்துடன் படுக்கையின் மேல் இருத்தி, இது தக்க சமயம் அன்றோ? ஏன் நீர் போகின்றீர்? என்று கூறி, தட்டில் புனுகு சட்டத்துடன், பன்னீர் முதலிய பலவிதமான வாசனைத் திரவியங்களை வந்தவருடைய உடலில் பூசி, முகத்தோடு முகம் வைத்து, இன்ப ரசமான வாயிதழ் ஊறல் பெருக, குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர மச்ச விழி பூசலிட வாய் பு(ல்)லி உ(ல்)லாசமுடன் ஒப்பி இருவோரு(ம்) மயல் மூழ்கிய பின் ... கூந்தல் கலைய, ஒளி வீசும் கண்கள் சுழன்று துடிக்க, வட்டமான தனங்கள் மார்பில் புதைந்து திகழ, வேர்வை உண்டாக, தோளை இறுக அணைத்து, உடை நெகிழ, மீன் போன்ற விழிகள் காமப் போரை விளைவிக்க, கட்டித் தழுவி ஆனந்தமாக மனம் ஒப்பி, இருவரும் காம மயக்கில் முழுகிய பின்னர், ஆபரணம் வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி செயலாமோ ... வந்தவர் நகைகளை அடமானம் வைத்து, தேடிய பொருளை எல்லாம் சூறைக் காற்று அடித்துக் கொண்டு போகின்ற விலைமகளிருடன் கலவி இன்பம் பெறும் தொழில் நல்லதாகுமா? சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா ... சக்தி, தனித்து விளங்கும் ஜோதி, அழகிய பார்வதி, பலவித உருவத்தை உடையவள், சுக நிலையிலேயே இருக்கின்ற நித்திய கல்யாணி, என்னைப் பெற்ற தாயாகிய, இமவான் மடந்தை, சிவை, பரமசிவனுடன் நடனம் இடும் அபிராமி, சிவகாமி ஆகிய உமாதேவி அருளிய பாலனே, சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடம் இடுவோனே ... சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு ரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி அசுரர்கள் அழியுமாறு சக்தி வேலைச் செலுத்தி தேவர்களைச் சிறையினின்று மீட்டு நடனம் செய்பவனே, துத்தி தனபார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வ(ள்)ளி நாயகியை சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா ... தேமல் பரந்த தன பாரங்கள் உள்ளவளும், மோகம் தர வல்லவளும், சுகக் கடல் போன்றவளும், மிக்க அழகிய முக வடிவத்தைக் கொண்டவளும், எனது தாய் ஆனவளும் ஆகிய வள்ளி அம்மையை பரிசுத்தமான படுக்கையில், மாலை அணிந்த பெரிய மார்பகங்களை விட்டுப் பிரியாத அழகிய கரத்துடன் விளங்கும் மணிமார்பனே, சுத்த மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறு முக ... பரிசுத்தமான, அழகிய, சிறந்த தவ சிகாமணியே என்று ஓதுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் குடியாக உறைகின்ற ஆறுமுகனே, சுப்ரமணியா புலியூர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே. ... சுப்ரமணியனே, புலியூரில் பொருந்தி வீற்றிருப்பவனே, தேவர்கள் போற்றும் பெருமாளே.