சகுடம் உந்தும் கடல் அடைந்து உங்கு உ(ள்)ள மகிழ்ந்தும்
தோய் சங்கம் கமுகு அடைந்து அண்டு அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம் சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர்
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் (இ)ரண்டு அம் தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும்
செம் பேர் வந்து அண் சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் புரம் உடன் கிண்கிணி சிலம்பும் பொலி அலம்பும் தாள் ரங்கம் புணர்வு அணைந்து அண்டுவர் ஒடும்
தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன்
புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண் பொடி அணிந்து அங்கு ஆநந்தம் புனல் படிந்துண்டு அவச(ம்) மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண் புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம் பொன் கழல் தாராய்
திகுட திந்திந் தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண் டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்றே சங்கம் பல பேரி
செக கணம் சஞ்ச(ல்)லிகை பஞ்சம் பறை முழங்கும் போர்
அண்டம் சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம் சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா
அகில அண்டம் சுழல எங்கும் பவுரி கொண்டு அங்கு ஆடும் கொ(கோ)ன் புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர் பால் அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணமும் கொண்டு ஓத
அந்தம் புனை குறம் பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே அம் பொன் அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே.
நீர்ப்பாசிகள் தோன்றிப் பின்னர் மேற்பட்டுக் கிடக்கும் கடல் போன்ற வாழ்க்கையைக் கண்டு அங்கு உள்ளம் மகிழ்ந்தும், சங்கம் போலவும் கமுகு போலவும் பொருந்தி நெருங்கி, அமுதம் பொதித்த கழுத்து, முத்து மாலை அணிந்துள்ள கழுத்தின் அடிப்பாகம், மலர்ந்த தாமரை, அம்பு இவைகளுக்கு ஒப்பான கண்கள், குமிழம் பூப் போன்ற மூக்கு, புருவம் என்கின்ற செவ்விய வில் ஆகிய பொலிவு விளங்கும் விலைமாதர்கள் அழகு கொண்டவர்களாய் விளங்க, தாமரை மொட்டுப் போன்றதும், நறு மணமுள்ள புனுகு சட்டத்துடன் சண்பகம் இவற்றின் நறு மணம் கொண்டு பொருந்தி, பொன் மலையாகிய மேருவையும் கீழ்ப்படியச் செய்ய வல்லதும் தேமல் பரந்ததுமான இரண்டு கனத்த மார்பகங்கள், பல பேர்வழிகள் வந்து நெருங்கும் அசைவு கொண்டுள்ள மின்னலுக்கு ஒப்பான இடை, பாம்பின் படம் போன்ற பெண்குறி கொண்டவர்கள். அழகிய பொற்காசு (சம்பாதிப்பதிலேயே) நாட்டம் செலுத்தும் பார்வை. சொல்லுவது போல் வெளிப்படுத்த அழகிய கையில் உள்ள பொன் வளையலும், காலில் கட்டப்பட்டுள்ள தோதிந்தம் என ஒலிப்பதுமான பாதசரத்துடன் கிண்கிணியும் சிலம்பும் விளங்கி ஒலிக்கின்ற அடியுடன் நடன மேடையில் சேர்ந்து பொருந்தி நெருங்குபவராகிய பொது மகளிர்க்கு அடிமைத்தொண்டு செய்யும் வேதனையில் பட்டுக் கிடந்து, (அந்த அழகில்) ஈடுபட்டுக் கொஞ்சுகின்ற கீழ்ப்பட்ட நாய் போன்ற நான், புகழ் பெற்று, உனது திருவடியைப் பணிந்து, ஒள்ளிய திரு நீற்றை அணிந்து, அந்தச் சமயத்தில் ஆனந்தக் கண்ணீரில் படிந்து, பரவசம் மேம்படும் தவசிகளுடைய சுகம் போன்று, வலிய இப்பூமியின் நிலையாமையை அறிந்து, இப்பொழுதே உனது திருவடியை வணங்கும் பணியை மேற் கொள்ள அழகிய செவ்விய சீரான செம் பொன்னாலாகிய கழல்கள் அணிந்த திருவடியைத் தந்து அருளுக. (இதே ஒலியில்) ஒலிக்கும் சங்கமும் பல பேரிகைகளும், செககணம்சம் என்று ஒலித் திரளை எழுப்பும் சல்லிகை என்ற பெரும் பறையும், ஐந்து வகையான இசைக் கருவிகளும் பறைகளும் முழங்குகின்ற போர்க் களத்தில், பூமியும் மலைகளும் பொடிபடவும், கடல் வற்றவும், தூள் பறக்கவும், அங்கு இருந்த (அசுரர்கள்) கூட்டத்தின் தலைகள் உடையவும், நெருங்கி வந்த அசுரர்களின் உடல் பிணமாகும்படி எதிர்த்துப் பொருதும், அன்று போர் புரிந்த செவ்விய ஒளி வேலை ஏந்தியவனே, எல்லா உலகங்களும் சுழலும்படி எங்கும் வலம்கொண்டு அங்கு நடனம் செய்கின்ற தலைவனே, புகழ் விளங்குகின்ற உமா தேவியைப் பக்கத்தில் கொண்ட சிவபெருமானுக்கு குரு மூர்த்தி என்கின்ற அழகிய பெருமையைப் படைத்து, ஆறு முகங்களையும், தாள ஒத்துக்களை விளக்கும் அழகிய திருவடிகளையும் உடைய கந்தனே என்று தேவர்கள் உன் மீது மலர்களைச் சொரிந்து அழகிய திருக் கைகளைக் கூப்பித் தொழுது ஒள்ளிய திருவடிகளை மனத்தில் கொண்டு புகழ்ந்து நிற்க, அழகினைக் கொண்ட குறச் சிறுமியாகிய வள்ளியின் அங்கங்களை அணைந்து, வெற்றியைக் கொண்ட அழகிய பொன்னம்பலம் விளங்கும் புலீச்சுரம் என்னும் சிதம்பரத்தில் அழகிய திரு நடம் புரியும் சிவபெருமானுக்கு உரியவனும், நிறைந்து பொலிபவனுமான அழகிய கந்தப் பெருமாளே.
சகுடம் உந்தும் கடல் அடைந்து உங்கு உ(ள்)ள மகிழ்ந்தும் ... நீர்ப்பாசிகள் தோன்றிப் பின்னர் மேற்பட்டுக் கிடக்கும் கடல் போன்ற வாழ்க்கையைக் கண்டு அங்கு உள்ளம் மகிழ்ந்தும், தோய் சங்கம் கமுகு அடைந்து அண்டு அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம் சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் ... சங்கம் போலவும் கமுகு போலவும் பொருந்தி நெருங்கி, அமுதம் பொதித்த கழுத்து, முத்து மாலை அணிந்துள்ள கழுத்தின் அடிப்பாகம், மலர்ந்த தாமரை, அம்பு இவைகளுக்கு ஒப்பான கண்கள், குமிழம் பூப் போன்ற மூக்கு, புருவம் என்கின்ற செவ்விய வில் ஆகிய பொலிவு விளங்கும் விலைமாதர்கள் அழகு கொண்டவர்களாய் விளங்க, சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் (இ)ரண்டு அம் தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் ... தாமரை மொட்டுப் போன்றதும், நறு மணமுள்ள புனுகு சட்டத்துடன் சண்பகம் இவற்றின் நறு மணம் கொண்டு பொருந்தி, பொன் மலையாகிய மேருவையும் கீழ்ப்படியச் செய்ய வல்லதும் தேமல் பரந்ததுமான இரண்டு கனத்த மார்பகங்கள், செம் பேர் வந்து அண் சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை ... பல பேர்வழிகள் வந்து நெருங்கும் அசைவு கொண்டுள்ள மின்னலுக்கு ஒப்பான இடை, பாம்பின் படம் போன்ற பெண்குறி கொண்டவர்கள். அழகிய பொற்காசு (சம்பாதிப்பதிலேயே) நாட்டம் செலுத்தும் பார்வை. புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் புரம் உடன் கிண்கிணி சிலம்பும் பொலி அலம்பும் தாள் ரங்கம் புணர்வு அணைந்து அண்டுவர் ஒடும் ... சொல்லுவது போல் வெளிப்படுத்த அழகிய கையில் உள்ள பொன் வளையலும், காலில் கட்டப்பட்டுள்ள தோதிந்தம் என ஒலிப்பதுமான பாதசரத்துடன் கிண்கிணியும் சிலம்பும் விளங்கி ஒலிக்கின்ற அடியுடன் நடன மேடையில் சேர்ந்து பொருந்தி நெருங்குபவராகிய பொது மகளிர்க்கு தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன் ... அடிமைத்தொண்டு செய்யும் வேதனையில் பட்டுக் கிடந்து, (அந்த அழகில்) ஈடுபட்டுக் கொஞ்சுகின்ற கீழ்ப்பட்ட நாய் போன்ற நான், புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண் பொடி அணிந்து அங்கு ஆநந்தம் புனல் படிந்துண்டு அவச(ம்) மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண் புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம் பொன் கழல் தாராய் ... புகழ் பெற்று, உனது திருவடியைப் பணிந்து, ஒள்ளிய திரு நீற்றை அணிந்து, அந்தச் சமயத்தில் ஆனந்தக் கண்ணீரில் படிந்து, பரவசம் மேம்படும் தவசிகளுடைய சுகம் போன்று, வலிய இப்பூமியின் நிலையாமையை அறிந்து, இப்பொழுதே உனது திருவடியை வணங்கும் பணியை மேற் கொள்ள அழகிய செவ்விய சீரான செம் பொன்னாலாகிய கழல்கள் அணிந்த திருவடியைத் தந்து அருளுக. திகுட திந்திந் தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண் டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்றே சங்கம் பல பேரி ... (இதே ஒலியில்) ஒலிக்கும் சங்கமும் பல பேரிகைகளும், செக கணம் சஞ்ச(ல்)லிகை பஞ்சம் பறை முழங்கும் போர் ... செககணம்சம் என்று ஒலித் திரளை எழுப்பும் சல்லிகை என்ற பெரும் பறையும், ஐந்து வகையான இசைக் கருவிகளும் பறைகளும் முழங்குகின்ற போர்க் களத்தில், அண்டம் சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம் சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா ... பூமியும் மலைகளும் பொடிபடவும், கடல் வற்றவும், தூள் பறக்கவும், அங்கு இருந்த (அசுரர்கள்) கூட்டத்தின் தலைகள் உடையவும், நெருங்கி வந்த அசுரர்களின் உடல் பிணமாகும்படி எதிர்த்துப் பொருதும், அன்று போர் புரிந்த செவ்விய ஒளி வேலை ஏந்தியவனே, அகில அண்டம் சுழல எங்கும் பவுரி கொண்டு அங்கு ஆடும் கொ(கோ)ன் புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு ... எல்லா உலகங்களும் சுழலும்படி எங்கும் வலம்கொண்டு அங்கு நடனம் செய்கின்ற தலைவனே, புகழ் விளங்குகின்ற உமா தேவியைப் பக்கத்தில் கொண்ட சிவபெருமானுக்கு குரு மூர்த்தி என்கின்ற அழகிய பெருமையைப் படைத்து, அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர் பால் அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணமும் கொண்டு ஓத ... ஆறு முகங்களையும், தாள ஒத்துக்களை விளக்கும் அழகிய திருவடிகளையும் உடைய கந்தனே என்று தேவர்கள் உன் மீது மலர்களைச் சொரிந்து அழகிய திருக் கைகளைக் கூப்பித் தொழுது ஒள்ளிய திருவடிகளை மனத்தில் கொண்டு புகழ்ந்து நிற்க, அந்தம் புனை குறம் பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே அம் பொன் அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே. ... அழகினைக் கொண்ட குறச் சிறுமியாகிய வள்ளியின் அங்கங்களை அணைந்து, வெற்றியைக் கொண்ட அழகிய பொன்னம்பலம் விளங்கும் புலீச்சுரம் என்னும் சிதம்பரத்தில் அழகிய திரு நடம் புரியும் சிவபெருமானுக்கு உரியவனும், நிறைந்து பொலிபவனுமான அழகிய கந்தப் பெருமாளே.