கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள்
கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள்
கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும்
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல்
விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய்
வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது
மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய்
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்ப வளை
தந்தன தனந்த என வந்த சூரர்
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ
தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி
தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெ(ண்)ணொடு
சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே.
மார்பகங்கள் குலுங்க, சிவந்த கைகளில் உள்ள வளையல்கள் விளங்க, இருண்ட மேகம் போன்ற கூந்தலில் வண்டுகள் (மலர்களைச் சுற்றி) ரீங்காரம் செய்ய, கொஞ்சுகின்ற சோலையில் வசிக்கும் அழகிய குயில்களும், நல்ல பஞ்ச வர்ணக் கிளிகளும் கொஞ்சுகின்றனவோ என்னும்படியான இனிய குரல்களும், தத்தித் தத்திப் பாயும், விரும்பத் தக்க கயல் மீன் போல மிரளும் கண், பிறை போன்ற நெற்றி (இவைகளைக் கொண்ட) மாய வித்தை வல்லவரான பொது மகளிரின் மேல் மோகம் கொண்டு மேன்மேலும் பித்தாகி கொடிய நோயில் வேதனைப்பட்ட பிறவிக் கடலில் அலைபடுகின்ற என்னை நீ குறிக் கொண்டு உன்னுடைய ஒளி வீசும் பசுமையான திருவடியில் சேரும்படி ஆண்டருள்க. கூட்டமான முரசு வாத்தியம், திமிலை என்னும் பறை, பேரிகை முதலியவை ஒலிக்க, சங்குகள் தந்தன தனந்த என்று ஒலிக்க, வந்த சூரர்களின் தொகை அழியும்படி நெருங்கி எல்லா திசைகளிலும் இறந்து விழ, எப்போதும் குளிர்ந்திருக்கும் கடல் தீப்பிடிக்க கோப நகைப்பைக் கொண்ட வேலனே, சங்கரனார் மகிழ்ந்து அன்புடன் கொண்ட குரு மூர்த்தி (நீ) என்று உன்னைச் சொல்லும் வேதங்கள் தம்முள்ளே மகிழ்ந்து மனம் குழையும் எங்கள் தலைவனே, சந்திரன் போன்ற திரு முகத்தையும், பக்திச் செயலையும் கொண்ட அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியோடு, ஈசனும் புகழும்படியாக விளங்கும் திருச் செந்தூரில் வீற்றிருக்கும் தம்பிரானே.
கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட ... மார்பகங்கள் குலுங்க, சிவந்த கைகளில் உள்ள வளையல்கள் விளங்க, இருண்ட மேகம் போன்ற கூந்தலில் வண்டுகள் (மலர்களைச் சுற்றி) ரீங்காரம் செய்ய, கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் ... கொஞ்சுகின்ற சோலையில் வசிக்கும் அழகிய குயில்களும், நல்ல பஞ்ச வர்ணக் கிளிகளும் கொஞ்சுகின்றனவோ என்னும்படியான இனிய குரல்களும், கெந்து பாயும் வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் ... தத்தித் தத்திப் பாயும், விரும்பத் தக்க கயல் மீன் போல மிரளும் கண், பிறை போன்ற நெற்றி (இவைகளைக் கொண்ட) விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய் வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய் ... மாய வித்தை வல்லவரான பொது மகளிரின் மேல் மோகம் கொண்டு மேன்மேலும் பித்தாகி கொடிய நோயில் வேதனைப்பட்ட பிறவிக் கடலில் அலைபடுகின்ற என்னை நீ குறிக் கொண்டு உன்னுடைய ஒளி வீசும் பசுமையான திருவடியில் சேரும்படி ஆண்டருள்க. சங்க முரசம் திமிலை துந்துமி ததும்ப வளை தந்தன தனந்த என வந்த சூரர் சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ ... கூட்டமான முரசு வாத்தியம், திமிலை என்னும் பறை, பேரிகை முதலியவை ஒலிக்க, சங்குகள் தந்தன தனந்த என்று ஒலிக்க, வந்த சூரர்களின் தொகை அழியும்படி நெருங்கி எல்லா திசைகளிலும் இறந்து விழ, தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா ... எப்போதும் குளிர்ந்திருக்கும் கடல் தீப்பிடிக்க கோப நகைப்பைக் கொண்ட வேலனே, சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே ... சங்கரனார் மகிழ்ந்து அன்புடன் கொண்ட குரு மூர்த்தி (நீ) என்று உன்னைச் சொல்லும் வேதங்கள் தம்முள்ளே மகிழ்ந்து மனம் குழையும் எங்கள் தலைவனே, சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெ(ண்)ணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே. ... சந்திரன் போன்ற திரு முகத்தையும், பக்திச் செயலையும் கொண்ட அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியோடு, ஈசனும் புகழும்படியாக விளங்கும் திருச் செந்தூரில் வீற்றிருக்கும் தம்பிரானே.