சக சம்பக் குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி பட்டு உடையோடு
தனிதம் இகல் முரசு ஒலி வீணை தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி
சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர
இசை வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும் விருமம் சித்திரமாம் இது நொடி மறையும்
பொய்ப் பவுஷோடு உழல்வது விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண ...... என பேரி திமிர்தம்
கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா
அகரம் பச் (சை) உருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளொடும் அருள் செம் பொன் புலியூர் மருவிய பெருமாளே.
உலகத்தோர் மெச்சும்படி விருதாகப் பிடிக்கும் குடை சூழும் பல்லக்கின் மேல் மகிழ்ச்சி மிக்க இன்பத்துடனே, பல வேறு ஆபரணங்களுடன் பட்டாடையோடு, மேக கர்ச்சனை போன்ற முரசு வாத்தியம், ஒலி செய்யும் வீணை, வெண் சங்கு, தப்பட்டைப் பறையுடன், கிடுகிடு என்னும் பறையுடன் மக்கள் ஊர்வலம் வரும் ஓசை, தம்பட்டம் என்ற ஒரு வகையான பறை, டோல் என்னும் வாத்தியம் இவை பலவற்றின் ஒலி எழ, மக்கள் கூட்டம், பொன்னாலாகிய தடியை ஏந்திய சேவகர்கள் இவை எல்லாம் பக்கங்களில் சூழ்ந்து வர, நிறைந்த பூரண கும்பங்களுடன் பலவிதமான படைகளும் கரகங்களும் சுற்றியும் வர, கீத வாத்தியங்கள், மிக்க செல்வத்துடனும் அழகுடனும் தினந்தோறும் பொருந்தி வரும் (இந்த ஆடம்பரங்கள்) வெறும் மயக்கமாகும். வெறும் கோலமாம் இது ஒரு நொடிப் பொழுதில் மறைந்து போகும். இத்தகைய பொய்யான ஆடம்பர வாழ்வுடன் அலைச்சல் படுவதை விடுவதற்கு, தேவர்களுக்கும் காண்பதற்கு அரிதான திருவடிகளைத் தந்து அருளுக. (இதே ஒலியில்) பேரி வாத்தியங்கள் பேரொலி செய்ய, மலைத் திரட்சிகளும் ஏழு கடல்களும் ஒலி எழுப்பி குலைந்து போய் அச்சத்துடன் அலற, கூட்டமாய் கொடுமையுடன் வந்த அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அகர எழுத்தைப் போல் முதல்வியாய், பச்சை நிறத்தினளாய், ஒளி பொருந்திய படிகத்தையும் பொன்னையும் போன்றவளாய், (உலகை ஈன்று போகம் அளிக்கும் அருமைச்) செயலினளாய், சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், பிரமனுக்கும், தேவர்களுக்கும் கிட்டாத அருமை வாய்ந்தவளாயும் உள்ள பார்வதி அருளிய முருகனே, அமுதம் பொதிந்த அழகிய மலை போன்ற இரு மார்பகங்களையும், சந்திரனைப் போன்ற முகத்தையும் கொண்டவளும், புகழ் பெற்ற மான் ஈன்ற மகளுமாகிய வள்ளியுடன் அருள் பாலிக்கும் பொன் அம்பலம் உள்ள சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
சக சம்பக் குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி பட்டு உடையோடு ... உலகத்தோர் மெச்சும்படி விருதாகப் பிடிக்கும் குடை சூழும் பல்லக்கின் மேல் மகிழ்ச்சி மிக்க இன்பத்துடனே, பல வேறு ஆபரணங்களுடன் பட்டாடையோடு, தனிதம் இகல் முரசு ஒலி வீணை தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி ... மேக கர்ச்சனை போன்ற முரசு வாத்தியம், ஒலி செய்யும் வீணை, வெண் சங்கு, தப்பட்டைப் பறையுடன், கிடுகிடு என்னும் பறையுடன் மக்கள் ஊர்வலம் வரும் ஓசை, தம்பட்டம் என்ற ஒரு வகையான பறை, டோல் என்னும் வாத்தியம் இவை பலவற்றின் ஒலி எழ, சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர ... மக்கள் கூட்டம், பொன்னாலாகிய தடியை ஏந்திய சேவகர்கள் இவை எல்லாம் பக்கங்களில் சூழ்ந்து வர, நிறைந்த பூரண கும்பங்களுடன் பலவிதமான படைகளும் கரகங்களும் சுற்றியும் வர, இசை வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும் விருமம் சித்திரமாம் இது நொடி மறையும் ... கீத வாத்தியங்கள், மிக்க செல்வத்துடனும் அழகுடனும் தினந்தோறும் பொருந்தி வரும் (இந்த ஆடம்பரங்கள்) வெறும் மயக்கமாகும். வெறும் கோலமாம் இது ஒரு நொடிப் பொழுதில் மறைந்து போகும். பொய்ப் பவுஷோடு உழல்வது விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி தருவாயே ... இத்தகைய பொய்யான ஆடம்பர வாழ்வுடன் அலைச்சல் படுவதை விடுவதற்கு, தேவர்களுக்கும் காண்பதற்கு அரிதான திருவடிகளைத் தந்து அருளுக. திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண ...... என பேரி திமிர்தம் ... (இதே ஒலியில்) பேரி வாத்தியங்கள் பேரொலி செய்ய, கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா ... மலைத் திரட்சிகளும் ஏழு கடல்களும் ஒலி எழுப்பி குலைந்து போய் அச்சத்துடன் அலற, கூட்டமாய் கொடுமையுடன் வந்த அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அகரம் பச் (சை) உருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே ... அகர எழுத்தைப் போல் முதல்வியாய், பச்சை நிறத்தினளாய், ஒளி பொருந்திய படிகத்தையும் பொன்னையும் போன்றவளாய், (உலகை ஈன்று போகம் அளிக்கும் அருமைச்) செயலினளாய், சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், பிரமனுக்கும், தேவர்களுக்கும் கிட்டாத அருமை வாய்ந்தவளாயும் உள்ள பார்வதி அருளிய முருகனே, அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளொடும் அருள் செம் பொன் புலியூர் மருவிய பெருமாளே. ... அமுதம் பொதிந்த அழகிய மலை போன்ற இரு மார்பகங்களையும், சந்திரனைப் போன்ற முகத்தையும் கொண்டவளும், புகழ் பெற்ற மான் ஈன்ற மகளுமாகிய வள்ளியுடன் அருள் பாலிக்கும் பொன் அம்பலம் உள்ள சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.