சுரும்பு உற்ற பொழில் தோறும் விரும்பு உற்ற குயில் கூவ துரந்து உற்ற குளிர் வாடை.....அதனாலும் துலங்கு உற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர்.....வசையாலும் அரும்பு உற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும் அடைந்திட்ட விடை மேவு.....மணியாலும் அழிந்து உற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்து உற்ற மது மாலை.....தர வேணும் கரும் கொற்ற மத வேழம் முனிந்து உற்ற க(கா)லை மேவி கரந்து உள்ள மட மானின்.....உடனே சார் கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும்.....அரன் வாழ்வே இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி.....வரு கோவே இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொ(ண்)டு எறிந்திட்டு விளையாடு(ம்).....பெருமாளே.
வண்டுகள் உள்ள சோலைகள் யாவிலும் விரும்பி அங்கே அடைந்துள்ள குயில்கள் கூவுதலாலும், வெளிப்பட்டு வீசும் குளிர்ந்த வாடைக் காற்றாலும், (மன்மதனுடைய) வாசனை பொருந்திய பாணங்களாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும், (இவளைப்) பின் தொடர்ந்து வருகின்ற பெண்களின் வசைப் பேச்சுக்களாலும், மலர்ந்தும் மலராத அரும்பு நிலையில் உள்ள மலர்கள் தூவப்பட்டதும், வலிமை வாய்ந்த (காமன் தன்) வீரத்தைக் காட்டும் இடமுமான படுக்கையாலும், (மேய்ந்த பின்பு) தத்தம் வீடுகளைச் சேர்ந்தடைய வரும் மாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணியின் ஓசையாலும், (மனம்) அழிந்துள்ள இள மானாகிய இப் பெண்ணின் விரக வேதனையை அறிந்து, சமயம் பார்த்து விரும்பி, உன் மார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும். கரிய, வீரம் வாய்ந்த (கணபதியாகிய) மத யானை கோபத்துடன் வந்து எதிர்த்த அந்த சமயத்தில், தன்னை நாடி, தன் பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த இள மானாகிய வள்ளியுடன் சார்ந்தவனே, கரும்புகள் வளர்ந்த வயல்கள் சூழ்ந்த பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் மேடையாக பொன்னம்பலத்தைத் தேர்ந்தெடுத்து நடனம் செய்கின்ற சிவபெருமானுடைய செல்வமே. இருந்து பொருந்தி மலர்களை விரும்பி இட்டுப் பூஜிக்கும் அடியார்களின் துயரம் தீர, இன்பம் தரும் மயிலின் மீது ஏறி வருகின்ற அரசனே, சுற்றத்தாருடன் நெருங்கி வந்த சூரன் தரையில் உருண்டு புரண்டு விழ, வேல் கொண்டு வீசி எறிந்து விளையாடும் பெருமாளே.
சுரும்பு உற்ற பொழில் தோறும் விரும்பு உற்ற குயில் கூவ ... வண்டுகள் உள்ள சோலைகள் யாவிலும் விரும்பி அங்கே அடைந்துள்ள குயில்கள் கூவுதலாலும், துரந்து உற்ற குளிர் வாடை அதனாலும் ... வெளிப்பட்டு வீசும் குளிர்ந்த வாடைக் காற்றாலும், துலங்கு உற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல ... (மன்மதனுடைய) வாசனை பொருந்திய பாணங்களாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும், தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் ... (இவளைப்) பின் தொடர்ந்து வருகின்ற பெண்களின் வசைப் பேச்சுக்களாலும், அரும்பு உற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும் ... மலர்ந்தும் மலராத அரும்பு நிலையில் உள்ள மலர்கள் தூவப்பட்டதும், வலிமை வாய்ந்த (காமன் தன்) வீரத்தைக் காட்டும் இடமுமான படுக்கையாலும், அடைந்திட்ட விடை மேவு மணியாலும் ... (மேய்ந்த பின்பு) தத்தம் வீடுகளைச் சேர்ந்தடைய வரும் மாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணியின் ஓசையாலும், அழிந்து உற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி ... (மனம்) அழிந்துள்ள இள மானாகிய இப் பெண்ணின் விரக வேதனையை அறிந்து, சமயம் பார்த்து விரும்பி, அசைந்து உற்ற மது மாலை தர வேணும் ... உன் மார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும். கரும் கொற்ற மத வேழம் முனிந்து உற்ற க(கா)லை ... கரிய, வீரம் வாய்ந்த (கணபதியாகிய) மத யானை கோபத்துடன் வந்து எதிர்த்த அந்த சமயத்தில், மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் ... தன்னை நாடி, தன் பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த இள மானாகிய வள்ளியுடன் சார்ந்தவனே, கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே ... கரும்புகள் வளர்ந்த வயல்கள் சூழ்ந்த பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் மேடையாக பொன்னம்பலத்தைத் தேர்ந்தெடுத்து நடனம் செய்கின்ற சிவபெருமானுடைய செல்வமே. இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர ... இருந்து பொருந்தி மலர்களை விரும்பி இட்டுப் பூஜிக்கும் அடியார்களின் துயரம் தீர, இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே ... இன்பம் தரும் மயிலின் மீது ஏறி வருகின்ற அரசனே, இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொ(ண்)டு எறிந்திட்டு விளையாடு(ம்) பெருமாளே. ... சுற்றத்தாருடன் நெருங்கி வந்த சூரன் தரையில் உருண்டு புரண்டு விழ, வேல் கொண்டு வீசி எறிந்து விளையாடும் பெருமாளே.