முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை
வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது
அம் மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார்
இதழ்ப் பூ எனும் போது முகம் முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை வல்ல குவடு
ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடைக் காம பண்டார அல்குல் வழ்ழை தொடையார்
மலர்க் கால் அணிந்து ஆடும் பரிபுர ஓசை மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட
மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொ(ண்)டு வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள் மயல் உறவாமோ
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ் அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே
அன்ன நடையாள் குறப் பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் அன்னை வலி சேர் தனக் கோடு இரண்டு ஆன வ(ள்)ளி மணவாளா
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டே மடிந்தே குருதி செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடிவேலா
தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர்கள் கொண்டாட இயல் தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு(ம்) பெருமாளே.
(முதல் 12 வரிகள் வேசையரின் அங்க நலத்தை வருணிப்பன). முல்லை மலர் போலவும், முத்துக்கள் உதிர்ந்தனவைகளால் அமைந்தன போலவும் உள்ள பற்களையும், வள்ளிக் கொடியைப் போல உள்ள நல்ல காதுகளில் விளங்கி அசைகின்ற குண்டலங்களையும், முல்லை மலர் மாலை சுற்றி உள்ளதும், அசைகின்ற பூங்கொத்துக்கள் நிறைந்துள்ளதும், அலை வீசுவது போலப் புரளும் அந்தக் கூந்தலையும், அழகாய் எடுக்கப்பட்ட வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றியையும், அம்பையும் கயல் மீனையும் போன்ற கண்களையும், கிளியின் குரல் போன்ற குரலையும் உடையவர்கள். இதழ்களையுடைய தாமரைப் பூ என்னும்படியான மலர் முகத்தையும், கமுக மரம் போன்றதும், நினைப்பதற்கு இடமானதும், தேமல் பரந்துள்ளதும், எதிர்த்து வரும் யானை போன்றதும், வன்மை வாய்ந்ததுமான குன்றைப் போன்றதுமான மார்பகங்களும், ஆலிலையைப் போன்றதும் பிள்ளைப் பேற்றுக்கு இடம் தருவதுமான வயிற்றையும், அந்த வயிற்றின் மேல் உள்ள ஆடையில் அமைந்துள்ள நூல் போல் நுண்ணிய இடையையும், காமத்துக்கு நிதி இடமாகிய பெண்குறியையும், வாழை போன்ற தொடைகளையும் உடையவர்கள். பூப் போன்ற காலில் அணியப்பட்டு அசைகின்ற சிலம்பின் ஒலி மல்லிட்டுக் கொண்டு வாதாடுவது போல் மாறுபட்டு பட்டாடை தன்மேல் படும்போதெல்லாம் அசைந்து ஒலிக்கவும், காம மயக்கத்தால் தள்ளுகின்ற நடையோடு, சிற்சில வார்த்தைகளே குழறிப் பேசி, ஆசை பூண்டு, சாமர்த்தியம் உள்ளவர்கள் போல பொற் காசுகளைத் தம்மிடம் வருவோரிடம் கொள்ளை கொள்ளும் விலைமாதர்கள் மேல் காம வெறி கொள்ளுவது நன்றோ? துன்பத்தைத் தரும் வினை தொலையவும், அசத்தான குற்றங்கள் நீங்கிடவும், இன்பமான உள்ளம் பொருந்தி அமையவும் அருள் வைத்து நம்மை ஆளுகின்ற தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி உற காதில் குளிர்ந்து பொருந்த, ஞானத்துக்கு விதை போன்ற மூலப்பொருளை, உபதேசம் செய்த கந்தனே, குமரனே, முருகனே, அன்னம் போன்ற நடையை உடைய குறப் பெண், பந்தாடுகின்ற விரல்களை உடைய என்னுடைய தாய், வெள்ளை முத்துக்கள் போன்ற கடப்ப மாலை விளங்கும் கூந்தலை உடைய அம்மை, வன்மை வாய்ந்த மலை போன்ற மார்பகங்கள் இரண்டினைக் கொண்டவள் (ஆகிய) வள்ளியின் கணவனே, மேகங்கள் படிவற்கு இடமான ஏழு கடல்களும் பிளவுண்டு போகுமாறு சிதறி ஒலி செய்ய, வலிய அசுரர்களின் சேனைகள் அழிவு பட்டு இறந்து அவர்களது ரத்தம் பரவி பல திக்குகளிலும் ஓடும்படிச் செய்து விளங்கும் அழகிய திருமுகத்தை உடைய சுடர் வேலனே, தெளிவான தமிழ்ப் பாடல்களால் (உன்னை) அடியார் புகழ்ந்து பாடவும், ஆடவும், இந்திராணியின் மகளான தேவயானையோடு சேர்ந்து, பல திக்குகளில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட, தகுதி மிக்க சிதம்பரத்துத் திருக்கோயில் கோபுரத்தே மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
(முதல் 12 வரிகள் வேசையரின் அங்க நலத்தை வருணிப்பன). முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை ... முல்லை மலர் போலவும், முத்துக்கள் உதிர்ந்தனவைகளால் அமைந்தன போலவும் உள்ள பற்களையும், வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை ... வள்ளிக் கொடியைப் போல உள்ள நல்ல காதுகளில் விளங்கி அசைகின்ற குண்டலங்களையும், முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது ... முல்லை மலர் மாலை சுற்றி உள்ளதும், அசைகின்ற பூங்கொத்துக்கள் நிறைந்துள்ளதும், அலை வீசுவது போலப் புரளும் அந்தக் கூந்தலையும், அம் மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் ... அழகாய் எடுக்கப்பட்ட வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றியையும், அம்பையும் கயல் மீனையும் போன்ற கண்களையும், கிளியின் குரல் போன்ற குரலையும் உடையவர்கள். இதழ்ப் பூ எனும் போது முகம் முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை வல்ல குவடு ... இதழ்களையுடைய தாமரைப் பூ என்னும்படியான மலர் முகத்தையும், கமுக மரம் போன்றதும், நினைப்பதற்கு இடமானதும், தேமல் பரந்துள்ளதும், எதிர்த்து வரும் யானை போன்றதும், வன்மை வாய்ந்ததுமான குன்றைப் போன்றதுமான மார்பகங்களும், ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடைக் காம பண்டார அல்குல் வழ்ழை தொடையார் ... ஆலிலையைப் போன்றதும் பிள்ளைப் பேற்றுக்கு இடம் தருவதுமான வயிற்றையும், அந்த வயிற்றின் மேல் உள்ள ஆடையில் அமைந்துள்ள நூல் போல் நுண்ணிய இடையையும், காமத்துக்கு நிதி இடமாகிய பெண்குறியையும், வாழை போன்ற தொடைகளையும் உடையவர்கள். மலர்க் கால் அணிந்து ஆடும் பரிபுர ஓசை மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட ... பூப் போன்ற காலில் அணியப்பட்டு அசைகின்ற சிலம்பின் ஒலி மல்லிட்டுக் கொண்டு வாதாடுவது போல் மாறுபட்டு பட்டாடை தன்மேல் படும்போதெல்லாம் அசைந்து ஒலிக்கவும், மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொ(ண்)டு வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள் மயல் உறவாமோ ... காம மயக்கத்தால் தள்ளுகின்ற நடையோடு, சிற்சில வார்த்தைகளே குழறிப் பேசி, ஆசை பூண்டு, சாமர்த்தியம் உள்ளவர்கள் போல பொற் காசுகளைத் தம்மிடம் வருவோரிடம் கொள்ளை கொள்ளும் விலைமாதர்கள் மேல் காம வெறி கொள்ளுவது நன்றோ? அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ் அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே ... துன்பத்தைத் தரும் வினை தொலையவும், அசத்தான குற்றங்கள் நீங்கிடவும், இன்பமான உள்ளம் பொருந்தி அமையவும் அருள் வைத்து நம்மை ஆளுகின்ற தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி உற காதில் குளிர்ந்து பொருந்த, ஞானத்துக்கு விதை போன்ற மூலப்பொருளை, உபதேசம் செய்த கந்தனே, குமரனே, முருகனே, அன்ன நடையாள் குறப் பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் அன்னை வலி சேர் தனக் கோடு இரண்டு ஆன வ(ள்)ளி மணவாளா ... அன்னம் போன்ற நடையை உடைய குறப் பெண், பந்தாடுகின்ற விரல்களை உடைய என்னுடைய தாய், வெள்ளை முத்துக்கள் போன்ற கடப்ப மாலை விளங்கும் கூந்தலை உடைய அம்மை, வன்மை வாய்ந்த மலை போன்ற மார்பகங்கள் இரண்டினைக் கொண்டவள் (ஆகிய) வள்ளியின் கணவனே, செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டே மடிந்தே குருதி செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடிவேலா ... மேகங்கள் படிவற்கு இடமான ஏழு கடல்களும் பிளவுண்டு போகுமாறு சிதறி ஒலி செய்ய, வலிய அசுரர்களின் சேனைகள் அழிவு பட்டு இறந்து அவர்களது ரத்தம் பரவி பல திக்குகளிலும் ஓடும்படிச் செய்து விளங்கும் அழகிய திருமுகத்தை உடைய சுடர் வேலனே, தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர்கள் கொண்டாட இயல் தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு(ம்) பெருமாளே. ... தெளிவான தமிழ்ப் பாடல்களால் (உன்னை) அடியார் புகழ்ந்து பாடவும், ஆடவும், இந்திராணியின் மகளான தேவயானையோடு சேர்ந்து, பல திக்குகளில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட, தகுதி மிக்க சிதம்பரத்துத் திருக்கோயில் கோபுரத்தே மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.