கட்டி
முண்டக அரபாலி அங்கிதனை முட்டி
அண்டமொடு தாவி
விந்து ஒலி கத்த
மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு
சுடர் பட்டி மண்டபம் ஊடாடி
இந்துவொடு கட்டி விந்து பிசகாமல்
வெண் பொடி கொடு அசையாமல்
சுட்டு வெம் புரம் நீறு ஆக விஞ்சை கொடு
தத்துவங்கள் விழச் சாடி
எண் குணவர் சொர்க்கம் வந்து கையுள் ஆக
எந்தை பதம் உற மேவி
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு
குடில் வச்சிரங்கள் என மேனி தங்கம் உற
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ
எட்டு இரண்டும் அறியாத என் செவியில்
எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி
எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல்
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே
செட்டி என்று சிவகாமி தன் பதியில்
கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்)
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே
செட்டி என்று வனம் மேவி
இன்பரசச் சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக
தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர் பெருமாளே.
பிராண வாயுவை (பாழில் ஓட விடாமல்) அதன் நிலையில் பிடித்துக் கட்டி 1, மூலாதார 2 கமலத்திலுள்ள அருள் பாலிக்கும் சிவாக்கினியை மூண்டு எழச் செய்து, அண்டமாகிய கபால பரியந்தம் (பிரமரந்திரம் வரை) தாவச் செய்து, விந்து நாதம் (சிவ - சக்தி ஐக்கியம்) தோன்றி முழங்க, சிறப்பாகக் கட்டப்பட்ட கூடத்தில் மந்திரமயமாக நிற்கும் வெண்மைக் குதிரையின் 3 மேல் ஏறி, கற்பகத் தருவைப் போல் விரும்பியதை அளிக்க வல்ல அழகிய மேலைச் சிவ வீதியில் அந்த மாயக் குதிரையை நேராக ஓடச் செலுத்தி, எல்லா தத்துவங்களும் ஒன்றுபடும் ஒளிமயமான லலாடமண்டபத்தில் 4 சென்றடைந்து, (தியானம், பிரத்யாகரணம், தாரணை முதலிய) யோகப் பயிற்சிகளைப் பழகி 5, சந்திர கலை சலியாமலும், விந்து கழலாமலும் உறுதி பெறக் கட்டி, அந்த வெண்ணீற்றை அணிந்துகொண்டு அசையாமல் நின்று, திரிபுரமாகிய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் வெந்து நீறாகும்படி சுட்டு, அஷ்டமாசித்து வித்தைகள் 6 எல்லாம் கைவரப் பெற்று, தத்துவ சேஷ்டைகள் எல்லாம் வேரற்று விழும்படி அழித்து, எண்குணவராகிய 7 சிவபெருமானுடைய பதவி கை கூடி வந்து சித்திக்க, அச்சிவபதவியில் நிலை பெற்றுப் பொருந்தி, பிறவித் துன்பம் வெந்து நீறாகி ஒழிய, ஞானாமிர்த பானம் குடித்து, தேகம் வஜ்ர காயமாகவும், நிறம் தங்கம் போலவும் மாற்றி, தூய முக்தி கூட, விசித்திரமான வேதச்சந்தத்துடன் உனது திருப்புகழைப் பாடுவேனோ? எட்டும் இரண்டும் பத்து என்பதையும் தெரியாத என் காதுகளில் இவையே சிவக் குறியாகிய இலிங்கம் 8 என்று அந்த அகார உகார மகார 9 இலக்கணங்களைத் தெளிவாக உபதேசித்த குருவான முருகோனே, எட்டுத் திசைகளிலும், இந்த அண்டத்தின் கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும் சிவப்பு நிற இரத்தம் ஓடும்படி பதினாறு வகை 10 உருவத் திருமேனி விளங்க (பாசறையில் இருந்து), வஞ்சகர்களாகிய அசுரர்களின் மீதும் பின்னும் பத்துத் திசை அண்டங்களில் இருந்த அசுரர்கள் மீதும் அவர்கள் அழிய வேலை விடுபவனே, வளையல் செட்டி வடிவெடுத்து, சிவகாமி அங்கயற் கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில், கைகள் சிவக்க, வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே, வளையல் செட்டியின் வேடத்துடன் நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று, அங்கே இச்சா சக்தி மயமான வள்ளி நாயகியை அன்பு கனிந்து அபகரித்து வந்து, சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில் விளங்கும் பெருமாளே.
கட்டி ... பிராண வாயுவை (பாழில் ஓட விடாமல்) அதன் நிலையில் பிடித்துக் கட்டி 1, முண்டக அரபாலி அங்கிதனை முட்டி ... மூலாதார 2 கமலத்திலுள்ள அருள் பாலிக்கும் சிவாக்கினியை மூண்டு எழச் செய்து, அண்டமொடு தாவி ... அண்டமாகிய கபால பரியந்தம் (பிரமரந்திரம் வரை) தாவச் செய்து, விந்து ஒலி கத்த ... விந்து நாதம் (சிவ - சக்தி ஐக்கியம்) தோன்றி முழங்க, மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி ... சிறப்பாகக் கட்டப்பட்ட கூடத்தில் மந்திரமயமாக நிற்கும் வெண்மைக் குதிரையின் 3 மேல் ஏறி, கற்பக அம் தெருவில் வீதி கொண்டு ... கற்பகத் தருவைப் போல் விரும்பியதை அளிக்க வல்ல அழகிய மேலைச் சிவ வீதியில் அந்த மாயக் குதிரையை நேராக ஓடச் செலுத்தி, சுடர் பட்டி மண்டபம் ஊடாடி ... எல்லா தத்துவங்களும் ஒன்றுபடும் ஒளிமயமான லலாடமண்டபத்தில் 4 சென்றடைந்து, (தியானம், பிரத்யாகரணம், தாரணை முதலிய) யோகப் பயிற்சிகளைப் பழகி 5, இந்துவொடு கட்டி விந்து பிசகாமல் ... சந்திர கலை சலியாமலும், விந்து கழலாமலும் உறுதி பெறக் கட்டி, வெண் பொடி கொடு அசையாமல் ... அந்த வெண்ணீற்றை அணிந்துகொண்டு அசையாமல் நின்று, சுட்டு வெம் புரம் நீறு ஆக விஞ்சை கொடு ... திரிபுரமாகிய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் வெந்து நீறாகும்படி சுட்டு, அஷ்டமாசித்து வித்தைகள் 6 எல்லாம் கைவரப் பெற்று, தத்துவங்கள் விழச் சாடி ... தத்துவ சேஷ்டைகள் எல்லாம் வேரற்று விழும்படி அழித்து, எண் குணவர் சொர்க்கம் வந்து கையுள் ஆக ... எண்குணவராகிய 7 சிவபெருமானுடைய பதவி கை கூடி வந்து சித்திக்க, எந்தை பதம் உற மேவி ... அச்சிவபதவியில் நிலை பெற்றுப் பொருந்தி, துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு ... பிறவித் துன்பம் வெந்து நீறாகி ஒழிய, ஞானாமிர்த பானம் குடித்து, குடில் வச்சிரங்கள் என மேனி தங்கம் உற ... தேகம் வஜ்ர காயமாகவும், நிறம் தங்கம் போலவும் மாற்றி, சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ ... தூய முக்தி கூட, விசித்திரமான வேதச்சந்தத்துடன் உனது திருப்புகழைப் பாடுவேனோ? எட்டு இரண்டும் அறியாத என் செவியில் ... எட்டும் இரண்டும் பத்து என்பதையும் தெரியாத என் காதுகளில் எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என ... இவையே சிவக் குறியாகிய இலிங்கம் 8 என்று எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே ... அந்த அகார உகார மகார 9 இலக்கணங்களைத் தெளிவாக உபதேசித்த குருவான முருகோனே, எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி ... எட்டுத் திசைகளிலும், இந்த அண்டத்தின் கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும் சிவப்பு நிற இரத்தம் ஓடும்படி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் ... பதினாறு வகை 10 உருவத் திருமேனி விளங்க (பாசறையில் இருந்து), வஞ்சகர்களாகிய அசுரர்களின் மீதும் எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே ... பின்னும் பத்துத் திசை அண்டங்களில் இருந்த அசுரர்கள் மீதும் அவர்கள் அழிய வேலை விடுபவனே, செட்டி என்று சிவகாமி தன் பதியில் ... வளையல் செட்டி வடிவெடுத்து, சிவகாமி அங்கயற் கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில், கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்) ... கைகள் சிவக்க, வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே ... மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே, செட்டி என்று வனம் மேவி ... வளையல் செட்டியின் வேடத்துடன் நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று, இன்பரசச் சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக ... அங்கே இச்சா சக்தி மயமான வள்ளி நாயகியை அன்பு கனிந்து தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர் பெருமாளே. ... அபகரித்து வந்து, சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில் விளங்கும் பெருமாளே.