கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர்
கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம் கனி கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும் தந்த(ம்) அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப
பைங் கழை தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம் தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர் தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ
மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும் வந்த அரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கை பங்கினன்
வண்டர் லங்கை உளன் சிரம் பொடி கண்ட மாயோன் உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ்
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே.
அழகிய பூங் கொத்துக்கள் கொண்ட கூந்தல், பிறைச் சந்திரன் போன்ற வளப்பமுள்ள புருவங்கள், கயல் மீன் போலவும் அம்பு போலவும் அம்பின் அலகு போலவும் உள்ள கண்கள் ஆகியவற்றைக் கொண்ட விலைமாதர் தெய்வ மகளிர் போன்ற அழகும் சந்திரன் போன்ற முகமும் உடையவர்கள். இத்தகையோரின் கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து, சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாக இருந்த வாயிதழ் ஊறலின் இன்பம், கிளி, குயில் இவைகளின் மொழி போன்ற இனிய சொல், விரும்பும்படியான அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல எழுச்சியுள்ள கமுகு போன்ற கழுத்து, பசிய மூங்கில் போன்ற குளிர்ந்த புயங்கள், தளிர் போல மென்மையான உள்ளங்கையை உடையவர்கள், அழகிய பொன் மாலையை அணிந்துள்ள, யானை போலவும் மலை போலவும் பெரிதாக உள்ள இரண்டு மார்பகங்களும் நிலை கெட்டு வெளியே காட்டுபவர்கள். இத்தகைய பொது மகளிருடைய உடலில் தோய்கின்ற, கவண்கல் போல வேகமாய்ப் பாய்கின்ற கெட்ட சிந்தை எனக்கு ஆகுமோ? மந்தர மலையைக் கடலில் சுழல வைத்து அமுதத்தைக் கடைந்து எடுத்தவன், அச்சம் கொண்ட இந்திரன் இருப்பிடத்தையும் பொருளையும் சுகத்தையும் எல்லா வாழ்வையும் பெற, அந்தக் கடலில் தோன்றிய அரம்பை முதலான நடன மாதர்களையும் பங்கிட்டு அளித்து நடனம் புரிந்த லக்ஷ்மியின் நாயகன், மங்கல பாடகர் பாடி நின்ற இலங்கை வேந்தனான ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடியாகும்படி வென்ற மாயவன், தனது வயிற்றில் அண்டங்கள் யாவும் அடங்க உண்ட உள்ளங்கையை உடைய திருமால் புகழ, ஒளி வீசிய திரி புரங்களை பொடி செய்த எமது தந்தையாகிய சிவபெருமானின் பாகத்தில் இருப்பவளும், எழுச்சி கொண்ட எல்லா கலைகளுக்கும் தலைவியுமாகிய மங்கை என்னும் சங்கரியின் மகனே என்று பிரமனும் புகழ, ஒள்ளிய மேலான சிதம்பரத்தின் திரு அம்பலத்தில் விளங்கும் தம்பிரானே.
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர் ... அழகிய பூங் கொத்துக்கள் கொண்ட கூந்தல், பிறைச் சந்திரன் போன்ற வளப்பமுள்ள புருவங்கள், கயல் மீன் போலவும் அம்பு போலவும் அம்பின் அலகு போலவும் உள்ள கண்கள் ஆகியவற்றைக் கொண்ட விலைமாதர் தெய்வ மகளிர் போன்ற அழகும் சந்திரன் போன்ற முகமும் உடையவர்கள். கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம் கனி கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும் தந்த(ம்) அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப ... இத்தகையோரின் கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து, சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாக இருந்த வாயிதழ் ஊறலின் இன்பம், கிளி, குயில் இவைகளின் மொழி போன்ற இனிய சொல், விரும்பும்படியான அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல எழுச்சியுள்ள கமுகு போன்ற கழுத்து, பைங் கழை தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம் தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர் தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ ... பசிய மூங்கில் போன்ற குளிர்ந்த புயங்கள், தளிர் போல மென்மையான உள்ளங்கையை உடையவர்கள், அழகிய பொன் மாலையை அணிந்துள்ள, யானை போலவும் மலை போலவும் பெரிதாக உள்ள இரண்டு மார்பகங்களும் நிலை கெட்டு வெளியே காட்டுபவர்கள். இத்தகைய பொது மகளிருடைய உடலில் தோய்கின்ற, கவண்கல் போல வேகமாய்ப் பாய்கின்ற கெட்ட சிந்தை எனக்கு ஆகுமோ? மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும் வந்த அரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கை பங்கினன் ... மந்தர மலையைக் கடலில் சுழல வைத்து அமுதத்தைக் கடைந்து எடுத்தவன், அச்சம் கொண்ட இந்திரன் இருப்பிடத்தையும் பொருளையும் சுகத்தையும் எல்லா வாழ்வையும் பெற, அந்தக் கடலில் தோன்றிய அரம்பை முதலான நடன மாதர்களையும் பங்கிட்டு அளித்து நடனம் புரிந்த லக்ஷ்மியின் நாயகன், வண்டர் லங்கை உளன் சிரம் பொடி கண்ட மாயோன் உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ் ... மங்கல பாடகர் பாடி நின்ற இலங்கை வேந்தனான ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடியாகும்படி வென்ற மாயவன், தனது வயிற்றில் அண்டங்கள் யாவும் அடங்க உண்ட உள்ளங்கையை உடைய திருமால் புகழ, ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே. ... ஒளி வீசிய திரி புரங்களை பொடி செய்த எமது தந்தையாகிய சிவபெருமானின் பாகத்தில் இருப்பவளும், எழுச்சி கொண்ட எல்லா கலைகளுக்கும் தலைவியுமாகிய மங்கை என்னும் சங்கரியின் மகனே என்று பிரமனும் புகழ, ஒள்ளிய மேலான சிதம்பரத்தின் திரு அம்பலத்தில் விளங்கும் தம்பிரானே.