திருடிகள் இணக்கிச் சம்பளம் பறி நடுவிகள் மயக்கிச் சங்க(ம்) உண்கிகள்
சிதடிகள் முலைக் கச்சு உம்பல் கண்டிகள் சதி காரர் செவிடிகள் மதப்பட்டு உங்கு(ம்) குண்டிகள்
அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள் செழுமிகள் அழைத்து இச்சம் கொ(ள்)ளும் செ(ய்)யர் வெகு மோகக் குருடிகள்
நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள் குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே கொளுவிகள்
மினுக்குச் சங்கு இரங்கிகள் நடனமு(ம்) நடித்திட்டு ஒங்கு சண்டிகள் குணம் அதில் முழுச் சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ
இருடியர் இனத்து உற்று உம் பதம் கொ(ள்)ளும் மறையவன் நிலத் தொக்கும் சுகம் பெறும் இமையவர் இனக் கட்டும் குலைந்திட வரு சூரர்
இபமொடு வெதித்தச் சிங்கமும் பல இரதமொடு எ(ந்)தத் திக்கும் பிளந்திட இவுளி இரதத்து உற்று அங்க(ம்) மங்கிட விடும் வேலா
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்துப் பங்கயன் சிரம் அளவொடும் அறுத்துப் பண்டு அணிந்தவர் அருள் கோவே
அமரர் த(ம்) மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் த(ம்) மகள் பக்கம் சிறந்து உற அழகிய திருச் சிற்றம்பலம் புகு பெருமாளே.
(வந்தவர்கள் பணத்தைத்) திருடுவோர். தம் விருப்பப்படி கைப்பொருளைப் பறிக்கும் நீதி பூண்டவர்கள். மயங்க வைத்துக் கலவி செய்பவர்கள். அறிவிலர். கச்சு அணிந்த மலை போன்ற மார்பகங்களைக் கொண்டவர்கள். கண்டித்துப் பேசுபவர்கள். எப்போதும் சதி செய்பவர்கள். (வேண்டுமென) காது கேளாதவர்கள் போல் நடிப்பவர்கள். அகங்காரம் கொண்டு உங்கார ஒலியை எழுப்பும் இழிந்தவர். முட்டாள்கள். ஊடல் செய்துகொண்டு ஒழுக்கத்துக்குப் புறம்பானவர்கள். செழிப்பான அழகு கொண்டவர்கள். வருபவர்களை அழைத்து தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் செயல் திறத்தைக் கொண்டவர்கள். மிக்க காமம் பூண்ட குருடிகள். சிரித்துக் கொண்டே தமது விருப்பத்தை வெளியிடும், கள்ளுண்ட உதட்டினர். (பெற்ற பொருளைக்) கணக்குப் பார்த்துப் பார்த்து பிணக்கம் கொள்ளுபவர்கள். தந்திரவாதிகள். (வருபவரின் உணவில்) மருந்து வைத்து மயக்கும் கொடிய குணம் படைத்தவர்கள். கண்களால் (தம் பக்கம்) இழுத்துக் கொள்ளுபவர்கள். நடனம் செய்து விளங்கும் பிடிவாத குணம் படைத்தவர்கள். குணத்தைப் பற்றிக் கூறுங்கால், முழுமையும் கணக்கற்ற பேர்களுடன் சம்பந்தம் உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) இணக்கம் நல்லதோ? ரிஷிகள் இனத்தோர் கூட்டமும், உமது பதவியில் இருக்கும் பிரமன் படைத்த மண்ணுள்ளோர் கூட்டமும், சுகம் பெற்றிருந்த தேவர் கூட்ட மிகுதியும் நிலை குலையும்படி வந்த சூரர்கள், அவர்களுடைய யானைக் கூட்டங்களோடு, வேறுபட்ட சிங்கங்களும், பல தேர்களும் எந்தத் திக்கும் பிளவு உண்டு அழிய, குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உள்ள உடல்கள் நாசம் அடைய வேலைச் செலுத்தியவனே, சிங்கத்தையும் யானையையும் தோலை உரித்து, மன்மதனையும் திரி புரங்களையும் எரிபட்டு அழியச் சிரித்து, பிரமனுடைய (ஐந்து) தலைகளில் ஒன்றை ஒரு கணக்காக அறுத்து முன்பு பிரம கபாலத்தை அணிந்தவராகிய சிவபெருமான் தந்தருளிய தலைவனே, தேவர்களின் மகளான தேவயானையிடம் விருப்பத்தைக் காட்டி, குறப் பெண்ணாகிய வள்ளி (உனது) வலப் புறத்தில் சிறப்புற்று வீற்றிருக்க, அழகிய சிதம்பரத்தில் புக்கு விளங்கும் பெருமாளே.