காலனார் வெங்கொடுந் தூதர்
பாசங்கொடு என்காலின்ஆர்தந்து
உடன்கொடுபோக
காதலார் மைந்தருந் தாயராரும்
சுடுங் கானமே பின்தொடர்ந்து
அலறாமுன்
சூலம் வாள் தண்டு
செஞ் சேவல் கோதண்டமும்
சூடுதோளும் தடந்திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காண
ஆர்வஞ்செயுந் தோகைமேல் கொண்டு முன்வரவேணும்
ஆலகாலம் பரன் பாலது ஆக
அஞ்சிடுந் தேவர் வாழ
அன்று உகந்து அமுது ஈயும்
ஆரவாரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்து
ஆதிமாயன்றன் நன் மருகோனே
சாலிசேர் சங்கினம்
வாவிசூழ் பங்கயம்
சாரலார் செந்திலம்பதிவாழ்வே
தாவுசூர் அஞ்சிமுன் சாய
வேகம்பெறுந் தாரை வேலுந்திடும் பெருமாளே.
யமனின் மிகக் கொடிய தூதர்கள் பாசக்கயிற்றால் என் மூச்சுக்காற்றுடன் சேர்த்துக் கட்டி எனது உயிரைத் தங்களுடன் கொண்டுபோக, அன்பு நிறைந்த பிள்ளைகளும், தாயார் முதலிய அனைவரும் சுடுகாடு வரை என்னுடலைப் பின்தொடர்ந்து வாய்விட்டுக் கதறி அழும் மரண அவஸ்தையை நான் அடையும் முன்பே, சூலாயுதம், வாளாயுதம், தண்டாயுதம், அழகிய சேவற்கொடி, வில் இவைகளை சூடியுள்ள புயங்களையும், அகன்ற திரு மார்பையும், புனிதமான பாதங்களையும், அவைகளில் அணிந்த தண்டையும் காண அன்புநிறை மயிலின் மீது ஏறி என்முன் வரவேண்டும். ஆலகால விஷமானது பரமசிவன்வசம் போய்ச் சேர்ந்தபின்பு, அவ்விஷத்தைக் கண்டு பயந்தோடிய தேவர்கள் உய்யும்படியாக அன்று மகிழ்ச்சியுடன் (மோகினி அவதாரம் செய்து) அமுதைத் தந்தவரும், பெரும் ஒலி உடையதான திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவருமான, ஆதி மூர்த்தியாகிய திருமாலின் சிறந்த மருமகனே, நெல்வயல்களில் சேர்ந்துள்ள சங்கினங்களும், தாமரைகள் சூழ்ந்து நிறைந்துள்ள தடாகங்களும் அருகே அமைந்த திருச்செந்தூர்ப் பதியில் வாழ்கின்றவனே, போர்க்களத்தில் தாவி வந்த சூரன் முன்னாளில் பயந்து வீழுமாறு வேகமாக கூரிய வேலைச் செலுத்திய பெருமாளே.
காலனார் வெங்கொடுந் தூதர் ... யமனின் மிகக் கொடிய தூதர்கள் பாசங்கொடு என்காலின்ஆர்தந்து ... பாசக்கயிற்றால் என் மூச்சுக்காற்றுடன் சேர்த்துக் கட்டி உடன்கொடுபோக ... எனது உயிரைத் தங்களுடன் கொண்டுபோக, காதலார் மைந்தருந் தாயராரும் ... அன்பு நிறைந்த பிள்ளைகளும், தாயார் முதலிய அனைவரும் சுடுங் கானமே பின்தொடர்ந்து ... சுடுகாடு வரை என்னுடலைப் பின்தொடர்ந்து அலறாமுன் ... வாய்விட்டுக் கதறி அழும் மரண அவஸ்தையை நான் அடையும் முன்பே, சூலம் வாள் தண்டு ... சூலாயுதம், வாளாயுதம், தண்டாயுதம், செஞ் சேவல் கோதண்டமும் ... அழகிய சேவற்கொடி, வில் இவைகளை சூடுதோளும் தடந்திருமார்பும் ... சூடியுள்ள புயங்களையும், அகன்ற திரு மார்பையும், தூயதாள் தண்டையுங் காண ... புனிதமான பாதங்களையும், அவைகளில் அணிந்த தண்டையும் காண ஆர்வஞ்செயுந் தோகைமேல் கொண்டு முன்வரவேணும் ... அன்புநிறை மயிலின் மீது ஏறி என்முன் வரவேண்டும். ஆலகாலம் பரன் பாலது ஆக ... ஆலகால விஷமானது பரமசிவன்வசம் போய்ச் சேர்ந்தபின்பு, அஞ்சிடுந் தேவர் வாழ ... அவ்விஷத்தைக் கண்டு பயந்தோடிய தேவர்கள் உய்யும்படியாக அன்று உகந்து அமுது ஈயும் ... அன்று மகிழ்ச்சியுடன் (மோகினி அவதாரம் செய்து) அமுதைத் தந்தவரும், ஆரவாரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்து ... பெரும் ஒலி உடையதான திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவருமான, ஆதிமாயன்றன் நன் மருகோனே ... ஆதி மூர்த்தியாகிய திருமாலின் சிறந்த மருமகனே, சாலிசேர் சங்கினம் ... நெல்வயல்களில் சேர்ந்துள்ள சங்கினங்களும், வாவிசூழ் பங்கயம் ... தாமரைகள் சூழ்ந்து நிறைந்துள்ள தடாகங்களும் சாரலார் செந்திலம்பதிவாழ்வே ... அருகே அமைந்த திருச்செந்தூர்ப் பதியில் வாழ்கின்றவனே, தாவுசூர் அஞ்சிமுன் சாய ... போர்க்களத்தில் தாவி வந்த சூரன் முன்னாளில் பயந்து வீழுமாறு வேகம்பெறுந் தாரை வேலுந்திடும் பெருமாளே. ... வேகமாக கூரிய வேலைச் செலுத்திய பெருமாளே.