சிரித்துச் சங்கு ஒளியாம் மி(ன்)னலாம் என உருக்கிக் கொங்கையினால் உற மேல் விழு செணத்தில் சம்பளமே பறி காரிகள்
சில பேரைச் சிமிட்டிக் கண்களினால் உறவே மயல் புகட்டிச் செம் துகிலால் வெளியாய் இடை திருத்திப் பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே அருக்கி
பண்பு உறவே கலையால் முலை மறைத்துச் செம் துவர் வாய் அமுது ஊறல்கள் அளித்துப் பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை அசைத்து
கொந்தள ஓலைகள் ஆர் பணி மினுக்கிச் சந்தன வாசனை சேறுடன் அமைத்துப் பஞ்சு அணை மீது அணை மாதர்கள் உறவாமோ
இரைத்துப் பண்டு அமராவதி வானவர் ஒளித்துக் கந்த சுவாமி பராபரம் எனப் பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள் பட அசுரார்கள் இறக்க
சிங்கம் தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு இரத்தச் சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா
சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்துக் கண்ட கபாலியர் பால் உறை திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி நல்கிய சேயே
திருச் சித்தம் தனிலே குற மான் அதை இருத்திக் கண் களி கூர் திகழ் ஆடக திருச் சிற்றம்பலம் மேவி உலாவிய பெருமாளே.
சிரித்து, (பற்களின் ஒளியை) சங்கின் ஒளி எனவும், மின்னலின் ஒளி எனவும் சொல்லும்படி வெளிக் காட்டி, (அதனால் காண்போருடைய மனத்தை) உருக்கி மார்பகங்களைக் கொண்டு பொருந்த, மேலே விழுகின்ற அந்த நேரத்தில் பொருளைப் பறிப்பவர்கள். சில பேர்வழிகளை கண்களால் சிமிட்டி, அழுத்தமாகக் காமத்தை ஊட்டி, செவ்விய ஆடையால் வெளித் தோன்றவே (பகிரங்கமாக) இடையைச் சீர்படுத்தி, இசைப் பாட்டுக்களைக் குழல் போல இனிமை பொருந்தப் பாடி, மேகத்தைக் கண்ட அழகிய மயிலைப் போல தமது நடன அருமையைக் காட்டி, ஒழுங்காக ஆடையால் மார்பை மறைப்பது போல ஜாலம் காட்டி, செவ்விய பவழம் போன்ற வாயிதழின் அமுதம் போன்ற நீரூற்றைக் குடிக்கச் செய்து, அழகிய குயில் என்னும்படி குரல் எழக் கண்டத்தில் ஓசையை அசையச் செய்து, காதோலைகளையும் நிறைந்து, அணி கலன்களையும் மினுக்கி ஒளி பெறச் செய்து, சந்தன நறு மணக் கலவையுடன் அலங்கரித்து, பஞ்சு மெத்தையின் மீது சேர்கின்ற பொது மகளிரின் உறவு எனக்குத் தகுமோ? பெரும் இரைச்சலுடன் முன்பு பொன்னுலகத்தில் இருந்த தேவர்கள் (மேரு மலையில்) ஒளித்திருந்து, கந்த சுவாமியே, மேலாம் பொருளே என்று முறையிட, அஷ்ட திக்குகளிலும் உள்ள மலைகளும் பொடிபடவும், ஏழு கடல்களும் தூள்படவும், அசுரர்கள் இறந்துபடவும், சிங்கங்கள் பூட்டப்பட்ட தேர்கள், குதிரைகளும், யானைகளும் போர்க்களத்தில் உறுப்புக்கள் சிதறுண்டு வீழ, செந்நிறக் கழுகுகள், நரிகள், பேய்களோடு ரத்த வெள்ளத்தில் விளையாட வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே, சிரித்து அழகிய திரி புரத்தையும் மன்மதனுடைய உடலையும் எரி செய்த, கபாலத்தை ஏந்தும் சிவபெருமானுடைய பக்கத்தில் இருக்கின்ற பொலிவு நிறைந்த அழகு மிக்க சிவகாமி பெற்ற செல்வக் குழந்தையே, உனது அழகிய உள்ளத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியை இருத்தி கண்ணால் மகிழ்ச்சி அடைந்து, புகழ் மிக்க பொன்கூரை வேய்ந்த பொன்னம்பலத்தே விரும்பி உலவும் பெருமாளே.
சிரித்துச் சங்கு ஒளியாம் மி(ன்)னலாம் என உருக்கிக் கொங்கையினால் உற மேல் விழு செணத்தில் சம்பளமே பறி காரிகள் ... சிரித்து, (பற்களின் ஒளியை) சங்கின் ஒளி எனவும், மின்னலின் ஒளி எனவும் சொல்லும்படி வெளிக் காட்டி, (அதனால் காண்போருடைய மனத்தை) உருக்கி மார்பகங்களைக் கொண்டு பொருந்த, மேலே விழுகின்ற அந்த நேரத்தில் பொருளைப் பறிப்பவர்கள். சில பேரைச் சிமிட்டிக் கண்களினால் உறவே மயல் புகட்டிச் செம் துகிலால் வெளியாய் இடை திருத்திப் பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே அருக்கி ... சில பேர்வழிகளை கண்களால் சிமிட்டி, அழுத்தமாகக் காமத்தை ஊட்டி, செவ்விய ஆடையால் வெளித் தோன்றவே (பகிரங்கமாக) இடையைச் சீர்படுத்தி, இசைப் பாட்டுக்களைக் குழல் போல இனிமை பொருந்தப் பாடி, மேகத்தைக் கண்ட அழகிய மயிலைப் போல தமது நடன அருமையைக் காட்டி, பண்பு உறவே கலையால் முலை மறைத்துச் செம் துவர் வாய் அமுது ஊறல்கள் அளித்துப் பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை அசைத்து ... ஒழுங்காக ஆடையால் மார்பை மறைப்பது போல ஜாலம் காட்டி, செவ்விய பவழம் போன்ற வாயிதழின் அமுதம் போன்ற நீரூற்றைக் குடிக்கச் செய்து, அழகிய குயில் என்னும்படி குரல் எழக் கண்டத்தில் ஓசையை அசையச் செய்து, கொந்தள ஓலைகள் ஆர் பணி மினுக்கிச் சந்தன வாசனை சேறுடன் அமைத்துப் பஞ்சு அணை மீது அணை மாதர்கள் உறவாமோ ... காதோலைகளையும் நிறைந்து, அணி கலன்களையும் மினுக்கி ஒளி பெறச் செய்து, சந்தன நறு மணக் கலவையுடன் அலங்கரித்து, பஞ்சு மெத்தையின் மீது சேர்கின்ற பொது மகளிரின் உறவு எனக்குத் தகுமோ? இரைத்துப் பண்டு அமராவதி வானவர் ஒளித்துக் கந்த சுவாமி பராபரம் எனப் பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள் பட அசுரார்கள் இறக்க ... பெரும் இரைச்சலுடன் முன்பு பொன்னுலகத்தில் இருந்த தேவர்கள் (மேரு மலையில்) ஒளித்திருந்து, கந்த சுவாமியே, மேலாம் பொருளே என்று முறையிட, அஷ்ட திக்குகளிலும் உள்ள மலைகளும் பொடிபடவும், ஏழு கடல்களும் தூள்படவும், அசுரர்கள் இறந்துபடவும், சிங்கம் தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு இரத்தச் சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா ... சிங்கங்கள் பூட்டப்பட்ட தேர்கள், குதிரைகளும், யானைகளும் போர்க்களத்தில் உறுப்புக்கள் சிதறுண்டு வீழ, செந்நிறக் கழுகுகள், நரிகள், பேய்களோடு ரத்த வெள்ளத்தில் விளையாட வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே, சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்துக் கண்ட கபாலியர் பால் உறை திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி நல்கிய சேயே ... சிரித்து அழகிய திரி புரத்தையும் மன்மதனுடைய உடலையும் எரி செய்த, கபாலத்தை ஏந்தும் சிவபெருமானுடைய பக்கத்தில் இருக்கின்ற பொலிவு நிறைந்த அழகு மிக்க சிவகாமி பெற்ற செல்வக் குழந்தையே, திருச் சித்தம் தனிலே குற மான் அதை இருத்திக் கண் களி கூர் திகழ் ஆடக திருச் சிற்றம்பலம் மேவி உலாவிய பெருமாளே. ... உனது அழகிய உள்ளத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியை இருத்தி கண்ணால் மகிழ்ச்சி அடைந்து, புகழ் மிக்க பொன்கூரை வேய்ந்த பொன்னம்பலத்தே விரும்பி உலவும் பெருமாளே.