கதித்துப் பொங்கு அ(ல்)லுக்கு ஒத்துப் பணைத்துக் கொம்பு எனத் தெற்றிக் கவித்துச் செம் பொ(ன்)னைத் துற்றுக் குழலார்
பின் கழுத்தைப் பண்புறக் கட்டிச் சிரித்துத் தொங்கலைப் பற்றிக் கலைத்துச் செம் குணத்தில் பித்து இடு மாதர் பதித்து
தம் தனத்து ஒக்கப் பிணித்துப் பண்புறக் கட்டிப் பசப்பிப் பொன் தரப் பற்றிப் பொருள் மாளப் பறித்துப் பின் துரத்துச் சொல் கபட்டுப் பெண்களுக்கு இச்சைப் பலித்துப் பின் கசுத்திப் பட்டு உழல்வேனோ
கதித்துக் கொண்டு எதிர்த்துப் பின் கொதித்துச் சங்கரித்துப் பல் கடித்துச் சென்று உழக்கித் துக்க அசுரோரைக் கழித்து
பண்டு அமர்க்குச் செம் பதத்தைத் தந்து அளித்துக் கைக்கு அணிக் குச்சம் தரத்து ஐச் சுத்த ஒளிர் வேலா
சிதைத்திட்டு அம்புரத்தைச் சொல் கயத்தைச் சென்று உரித்துத் தன் சினத் தக்கன் சிரத்தைத் தள் சிவனார்தம்
செவிக்குச் செம் பொருள் கற்கப் புகட்டிச் செம் பரத்தில் செய்த் திருச்சிற்றம்பலச் சொக்கப் பெருமாளே.
நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமமாகிச் செழிப்புற்று, கொம்பு போல சடையாகப் பின்னப்பட்டு, பொன்னாலாகிய சடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் பின்சென்று, கழுத்தை நன்றாகக் கட்டியும், நகைத்தும், தொங்கும் ஆடையாகிய முந்தானையைப் பிடித்துக் கலைத்தும், நல்ல குணத்தைப் பித்து பிடிக்கும்படிச் செய்யும் விலைமாதர்களின் மீது மனத்தை அழுத்தப் பதித்து, தாம் பெற்ற பொருளுக்குத் தகுந்தவாறு வசப்படுத்தி, நன்றாகக் கட்டிப் பிடித்து இன்முகம் காட்டி ஏய்த்தும், பொன் தரப் பெற்று அடைந்து, வந்தவருடைய பொருள் வற்றிப் போகுமளவும் கைப்பற்றி, பின்னர் அவரை விரட்டித் துரத்தும் சொற்களை உடைய வஞ்சகம் கொண்ட வேசியர்களுக்கு ஆசைப்பட்டு, பின்னர் வருத்தத்தை அடைந்து திரிவேனோ? விரைந்து எழுந்து எதிர்த்து, பிறகு கோபம் கொண்டு அழித்து, பற்களைக் கடித்து சென்று சேனைக்கடலைக் கலக்கி, வேதனையடைந்த அசுரர்களை ஒழித்து, முன் ஒரு நாளில் தேவர்களுக்குச் செவ்விய பதவியைத் தந்தருளி, கையில் அலங்காரமாக அணிந்துள்ள குஞ்சம் கட்டிய, அச்சத்தைத் தரும், அழகிய, பரிசுத்தமாக ஒளி விடும் வேலை ஏந்தியவனே, அழகிய திரிபுரங்களை அழித்திட்டு, புகழ் பெற்ற கயாசுரனாய் வந்த யானையிடம் சென்று அதன் தோலை உரித்து, தான் என்னும் அகங்காரம் கொண்ட தக்ஷன் தலையை அறுத்துத் தள்ளிய சிவபெருமானுடைய திருச்செவிக்குள் பிரணவப் பொருளை அவர் கற்கும்படி புகட்டி, செவ்விய மேலான வகையில் அமைந்த திருச் சிற்றம்பலத்தில் (சிதம்பரத்தில்) எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமாளே.
கதித்துப் பொங்கு அ(ல்)லுக்கு ஒத்துப் பணைத்துக் கொம்பு எனத் தெற்றிக் கவித்துச் செம் பொ(ன்)னைத் துற்றுக் குழலார் ... நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமமாகிச் செழிப்புற்று, கொம்பு போல சடையாகப் பின்னப்பட்டு, பொன்னாலாகிய சடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் பின் கழுத்தைப் பண்புறக் கட்டிச் சிரித்துத் தொங்கலைப் பற்றிக் கலைத்துச் செம் குணத்தில் பித்து இடு மாதர் பதித்து ... பின்சென்று, கழுத்தை நன்றாகக் கட்டியும், நகைத்தும், தொங்கும் ஆடையாகிய முந்தானையைப் பிடித்துக் கலைத்தும், நல்ல குணத்தைப் பித்து பிடிக்கும்படிச் செய்யும் விலைமாதர்களின் மீது மனத்தை அழுத்தப் பதித்து, தம் தனத்து ஒக்கப் பிணித்துப் பண்புறக் கட்டிப் பசப்பிப் பொன் தரப் பற்றிப் பொருள் மாளப் பறித்துப் பின் துரத்துச் சொல் கபட்டுப் பெண்களுக்கு இச்சைப் பலித்துப் பின் கசுத்திப் பட்டு உழல்வேனோ ... தாம் பெற்ற பொருளுக்குத் தகுந்தவாறு வசப்படுத்தி, நன்றாகக் கட்டிப் பிடித்து இன்முகம் காட்டி ஏய்த்தும், பொன் தரப் பெற்று அடைந்து, வந்தவருடைய பொருள் வற்றிப் போகுமளவும் கைப்பற்றி, பின்னர் அவரை விரட்டித் துரத்தும் சொற்களை உடைய வஞ்சகம் கொண்ட வேசியர்களுக்கு ஆசைப்பட்டு, பின்னர் வருத்தத்தை அடைந்து திரிவேனோ? கதித்துக் கொண்டு எதிர்த்துப் பின் கொதித்துச் சங்கரித்துப் பல் கடித்துச் சென்று உழக்கித் துக்க அசுரோரைக் கழித்து ... விரைந்து எழுந்து எதிர்த்து, பிறகு கோபம் கொண்டு அழித்து, பற்களைக் கடித்து சென்று சேனைக்கடலைக் கலக்கி, வேதனையடைந்த அசுரர்களை ஒழித்து, பண்டு அமர்க்குச் செம் பதத்தைத் தந்து அளித்துக் கைக்கு அணிக் குச்சம் தரத்து ஐச் சுத்த ஒளிர் வேலா ... முன் ஒரு நாளில் தேவர்களுக்குச் செவ்விய பதவியைத் தந்தருளி, கையில் அலங்காரமாக அணிந்துள்ள குஞ்சம் கட்டிய, அச்சத்தைத் தரும், அழகிய, பரிசுத்தமாக ஒளி விடும் வேலை ஏந்தியவனே, சிதைத்திட்டு அம்புரத்தைச் சொல் கயத்தைச் சென்று உரித்துத் தன் சினத் தக்கன் சிரத்தைத் தள் சிவனார்தம் ... அழகிய திரிபுரங்களை அழித்திட்டு, புகழ் பெற்ற கயாசுரனாய் வந்த யானையிடம் சென்று அதன் தோலை உரித்து, தான் என்னும் அகங்காரம் கொண்ட தக்ஷன் தலையை அறுத்துத் தள்ளிய சிவபெருமானுடைய செவிக்குச் செம் பொருள் கற்கப் புகட்டிச் செம் பரத்தில் செய்த் திருச்சிற்றம்பலச் சொக்கப் பெருமாளே. ... திருச்செவிக்குள் பிரணவப் பொருளை அவர் கற்கும்படி புகட்டி, செவ்விய மேலான வகையில் அமைந்த திருச் சிற்றம்பலத்தில் (சிதம்பரத்தில்) எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமாளே.