சரக்கு ஏறி இத்தப் பதி வாழ் தொந்தப் பரிக் காயத்தில்
பரிவோடு ஐந்து சதி காரர் புக்கு
உலை மேவு இந்தச் செயல் மேவி
சலித்தே மெத்தச் சமுசாரம் பொன் சுகித்தே
சுற்றத்தவரோடு இன்ப(ம்) தழைத்தே மெச்ச
தயவோடு இந்தக் குடி பேணி
குரக்கோணத்தில் கழு நாய் உண்ப
குழிக்கே வைத்துச் சவமாய் நந்து
இக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனை
குறித்தே முத்திக்கு ம(மா)றா இன்பத் தடத்தே பற்றி
சக மாயம் பொய்க் குலம் கால் வற்ற
சிவ ஞானம் பொன் கழல் தாராய்
புரக் காடு அற்றுப் பொடியாய் மங்க
கழைச் சாபத்து ஐச் சடலான் உங்க
புகைத் தீ பற்ற அப்புகலோர் அன்புற்று அருள்வோனே
புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்ச
தனிக்கோலத்துப் புகு சூர் மங்க
புகழ்ப் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே
திருக் கானத்தில் பரிவோடு
அந்தக் குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச
திகழ்ச்சீர் அத்திக்கு அழல் வா என்பப் புணர்வோனே
சிவப் பேறுக்குக் கடையேன் வந்து உள் புக
சீர் வைத்துக் கொ(ள்)ளு
ஞானம் பொன் திருக் காளத்திப் பதி வாழ் கந்தப் பெருமாளே.
பொருள் மிகுந்த இந்தப் பூமியில் வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இவ்வுடலில் அன்பு பூண்டவர் போன்று உள்ள ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புகுந்து, அழிவுக்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு, சஞ்சலப்பட்டு, மிகவும் குடும்பம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன் அனுபவித்து, சுற்றத்தாருடன் மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்) பிளவுபட்ட கூர்மையான மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி குழியில் வைத்துப் பிணமாய்க் கெடுகின்ற இந்தக் குடிசையாகிய உடலையே விரும்பி, பயனற்று அழிதல் உறுகின்ற என்னை, குறிக் கொண்டு, முக்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி, உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக் கோடுகள் வற்றிப்போக, சிவ ஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும், கரும்பு வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும், புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு அருளப்பட்டவனே, அடித்து வீழ்த்தியே எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் பயப்படும்படி, தனிப்பட்ட உருவத்துடன் புகுந்த சூரன் அழியும்படி அவனை போரில் புகழ் கொண்ட சக்தி வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன் அருளியவனே, அழகிய வள்ளி மலைக் காட்டில் நீஅன்பு பூண்டு செல்ல, அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த இலக்குமி போன்ற வள்ளி (யானையைக் கண்டு) பயப்பட்டதும் விளங்கும் சீர் பெற்ற (இந்த) யானைக்கு பயந்து அழ வேண்டாம், வா என்று சொல்லி, அவளை அணைந்தவனே, சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய நான் வந்து உட்சேருவதற்கு வேண்டிய சிறப்பினைத் தந்து என்னை ஏற்றுக் கொள்வாயாக. ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த திருக் காளத்தி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
சரக்கு ஏறி இத்தப் பதி வாழ் தொந்தப் பரிக் காயத்தில் ... பொருள் மிகுந்த இந்தப் பூமியில் வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இவ்வுடலில் பரிவோடு ஐந்து சதி காரர் புக்கு ... அன்பு பூண்டவர் போன்று உள்ள ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புகுந்து, உலை மேவு இந்தச் செயல் மேவி ... அழிவுக்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு, சலித்தே மெத்தச் சமுசாரம் பொன் சுகித்தே ... சஞ்சலப்பட்டு, மிகவும் குடும்பம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன் அனுபவித்து, சுற்றத்தவரோடு இன்ப(ம்) தழைத்தே மெச்ச ... சுற்றத்தாருடன் மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி தயவோடு இந்தக் குடி பேணி ... அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்) குரக்கோணத்தில் கழு நாய் உண்ப ... பிளவுபட்ட கூர்மையான மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி குழிக்கே வைத்துச் சவமாய் நந்து ... குழியில் வைத்துப் பிணமாய்க் கெடுகின்ற இக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனை ... இந்தக் குடிசையாகிய உடலையே விரும்பி, பயனற்று அழிதல் உறுகின்ற என்னை, குறித்தே முத்திக்கு ம(மா)றா இன்பத் தடத்தே பற்றி ... குறிக் கொண்டு, முக்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி, சக மாயம் பொய்க் குலம் கால் வற்ற ... உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக் கோடுகள் வற்றிப்போக, சிவ ஞானம் பொன் கழல் தாராய் ... சிவ ஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. புரக் காடு அற்றுப் பொடியாய் மங்க ... திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும், கழைச் சாபத்து ஐச் சடலான் உங்க ... கரும்பு வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும், புகைத் தீ பற்ற அப்புகலோர் அன்புற்று அருள்வோனே ... புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு அருளப்பட்டவனே, புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்ச ... அடித்து வீழ்த்தியே எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் பயப்படும்படி, தனிக்கோலத்துப் புகு சூர் மங்க ... தனிப்பட்ட உருவத்துடன் புகுந்த சூரன் அழியும்படி அவனை புகழ்ப் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே ... போரில் புகழ் கொண்ட சக்தி வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன் அருளியவனே, திருக் கானத்தில் பரிவோடு ... அழகிய வள்ளி மலைக் காட்டில் நீஅன்பு பூண்டு செல்ல, அந்தக் குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச ... அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த இலக்குமி போன்ற வள்ளி (யானையைக் கண்டு) பயப்பட்டதும் திகழ்ச்சீர் அத்திக்கு அழல் வா என்பப் புணர்வோனே ... விளங்கும் சீர் பெற்ற (இந்த) யானைக்கு பயந்து அழ வேண்டாம், வா என்று சொல்லி, அவளை அணைந்தவனே, சிவப் பேறுக்குக் கடையேன் வந்து உள் புக ... சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய நான் வந்து உட்சேருவதற்கு சீர் வைத்துக் கொ(ள்)ளு ... வேண்டிய சிறப்பினைத் தந்து என்னை ஏற்றுக் கொள்வாயாக. ஞானம் பொன் திருக் காளத்திப் பதி வாழ் கந்தப் பெருமாளே. ... ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த திருக் காளத்தி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.