மேகம் ஒத்த குழலார் சிலைப் புருவ வாளி ஒத்த விழியார் முகக் கமல மீது பொட்டு இடு அழகார் களத்தில் அணி வடம் ஆட மேரு ஒத்த முலையார்
பளப்பள என மார்பு துத்தி புயவார் வளைக் கடகம் வீறிடத் துவளு(ம்) நூலொடு ஒத்த இடை உடை மாதர் தோகை பக்ஷி நடையார்
பதத்தில் இடு நூபுரக் குரல்கள் பாட ஆ(அ)கத் துகில்கள் சோர நல் தெரு உடே நடித்து முலை விலை கூறிச் சூதகச் சரசம் ஓடே எத்தி
வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல் தூள் மருத்து இ(ட்)டு உயிரே பறிப்பவர்கள் உறவாமோ
சேகணச் செகண தோதிமித் திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீத கத்திமித தோவு டுக்கை மணி முரசு ஓதை
தேசம் உட்க அர ஆயிரச் சிரமும் மூளி பட்டு மக(கா) மேரு உக்க அவுணர் தீவு கெட்டு முறையோ எனக் கதற விடும் வேலா
ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன் ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வ(ள்)ளி ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே.
மேகம் போல் கரிய கூந்தல் உடையவர்கள். வில்லைப் போல வளைந்த புருவம் உடையவர்கள். அம்பு போன்ற கண்கள் உடையவர். தாமரை போன்ற முகத்தில் பொட்டு அணிந்த அழகை உடையவர். கழுத்தில் அணிகின்ற மாலை அசைந்தாட மேரு மலை போன்ற மார்பகத்தை உடையவர்கள். பளபள என்று ஒளி தரும் மார்பில் தேமலும், கையில் வரிசையாயுள்ள வளையல்களும் கங்கணமும் விளங்க, துவள்கின்ற நூல் போன்ற நுண்ணிய இடை உடைய மாதர்கள். கலாபப் பட்சியாகிய மயிலை ஒத்த நடையினர். கால்களில் அணிந்த சிலம்புகளின் ஓசைகள் ஒலிக்க, உடல் மீதுள்ள ஆடைகள் நெகிழ, நல்ல வீதியின் வழியே நடனமாடி வந்து, தம் மார்பகங்களை விலைக்கு விற்று, வஞ்சகத்தோடு காமச் சேட்டைகளைக் காட்டி (ஆடவரை) மோசம் செய்து, தேடி வருபவர்களை விரும்பி, கண்களால் மயக்கி காம மயக்கம் தரும் தூள் மருந்தை உண்ணச் செய்து உயிரைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு எனக்கு நல்லதாகுமோ? (சேகணச் - - தோ) இவ்வாறான ஒலிகளை எழுப்பும் உடுக்கை, மணி, முரசு இவைகளின் ஆரவாரம் ஓயாமல் ஒலிக்க, நாடெல்லாம் அஞ்ச ஆதிசேஷனுடைய ஆயிரம் தலைகளும் மூளியாகி, பெரிய மேரு மலையும் சிதறுண்டு, அசுரர்கள் வாழும் தீவுகள் அழிந்து (யாவரும்) முறையோ என்று கதறும்படி செலுத்திய வேலனே, வேத ஆகமங்களுக்கு உரியவள், பல காரணங்களுக்கு மூலப் பொருளானவள், என்னைப் பெற்றெடுத்த சக்தி, சிம்மாசனம் கொண்டவள், சிவபெருமானுடைய உடலில் இடம் கொண்டுள்ள சிவகாமி (என்னும்) பத்தினி பெற்ற முருகனே, பிரமனுக்கு வேதத்தைத் தேடித் தந்த திருமாலின் மகளாகிய சிறுமி, (உன் மீது) மோகம் கொண்ட அழகிய வள்ளி நாயகியின் ஆசை பூண்டு திருவண்ணாமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.
மேகம் ஒத்த குழலார் சிலைப் புருவ வாளி ஒத்த விழியார் முகக் கமல மீது பொட்டு இடு அழகார் களத்தில் அணி வடம் ஆட மேரு ஒத்த முலையார் ... மேகம் போல் கரிய கூந்தல் உடையவர்கள். வில்லைப் போல வளைந்த புருவம் உடையவர்கள். அம்பு போன்ற கண்கள் உடையவர். தாமரை போன்ற முகத்தில் பொட்டு அணிந்த அழகை உடையவர். கழுத்தில் அணிகின்ற மாலை அசைந்தாட மேரு மலை போன்ற மார்பகத்தை உடையவர்கள். பளப்பள என மார்பு துத்தி புயவார் வளைக் கடகம் வீறிடத் துவளு(ம்) நூலொடு ஒத்த இடை உடை மாதர் தோகை பக்ஷி நடையார் ... பளபள என்று ஒளி தரும் மார்பில் தேமலும், கையில் வரிசையாயுள்ள வளையல்களும் கங்கணமும் விளங்க, துவள்கின்ற நூல் போன்ற நுண்ணிய இடை உடைய மாதர்கள். கலாபப் பட்சியாகிய மயிலை ஒத்த நடையினர். பதத்தில் இடு நூபுரக் குரல்கள் பாட ஆ(அ)கத் துகில்கள் சோர நல் தெரு உடே நடித்து முலை விலை கூறிச் சூதகச் சரசம் ஓடே எத்தி ... கால்களில் அணிந்த சிலம்புகளின் ஓசைகள் ஒலிக்க, உடல் மீதுள்ள ஆடைகள் நெகிழ, நல்ல வீதியின் வழியே நடனமாடி வந்து, தம் மார்பகங்களை விலைக்கு விற்று, வஞ்சகத்தோடு காமச் சேட்டைகளைக் காட்டி (ஆடவரை) மோசம் செய்து, வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல் தூள் மருத்து இ(ட்)டு உயிரே பறிப்பவர்கள் உறவாமோ ... தேடி வருபவர்களை விரும்பி, கண்களால் மயக்கி காம மயக்கம் தரும் தூள் மருந்தை உண்ணச் செய்து உயிரைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு எனக்கு நல்லதாகுமோ? சேகணச் செகண தோதிமித் திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீத கத்திமித தோவு டுக்கை மணி முரசு ஓதை ... (சேகணச் - - தோ) இவ்வாறான ஒலிகளை எழுப்பும் உடுக்கை, மணி, முரசு இவைகளின் ஆரவாரம் ஓயாமல் ஒலிக்க, தேசம் உட்க அர ஆயிரச் சிரமும் மூளி பட்டு மக(கா) மேரு உக்க அவுணர் தீவு கெட்டு முறையோ எனக் கதற விடும் வேலா ... நாடெல்லாம் அஞ்ச ஆதிசேஷனுடைய ஆயிரம் தலைகளும் மூளியாகி, பெரிய மேரு மலையும் சிதறுண்டு, அசுரர்கள் வாழும் தீவுகள் அழிந்து (யாவரும்) முறையோ என்று கதறும்படி செலுத்திய வேலனே, ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன் ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே ... வேத ஆகமங்களுக்கு உரியவள், பல காரணங்களுக்கு மூலப் பொருளானவள், என்னைப் பெற்றெடுத்த சக்தி, சிம்மாசனம் கொண்டவள், சிவபெருமானுடைய உடலில் இடம் கொண்டுள்ள சிவகாமி (என்னும்) பத்தினி பெற்ற முருகனே, ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வ(ள்)ளி ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே. ... பிரமனுக்கு வேதத்தைத் தேடித் தந்த திருமாலின் மகளாகிய சிறுமி, (உன் மீது) மோகம் கொண்ட அழகிய வள்ளி நாயகியின் ஆசை பூண்டு திருவண்ணாமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.