தமிழ் ஓதிய குயிலோ மதில் ஆண்டலை ஆம் புறவம் கிளி காடை இன் அணில் ஏர் அளி ஆம்
குரல் வாய்ந்த அதி செம் தகு மா மிடறு ஒலியார் இதழ் ஆம் சுளை தேன் கனியின் சுவை சேரும்
தன பாரமும் மலையாம் என ஓங்கிட மாம் பொறி சிந்திட வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின் சரீ(ர) ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம்
சரி தோடு இணை செவி ஆடு உ(ஊ)சலாம் கள(ம்) பூ கமுகம் கொடி நூல் இடை உடையார் அ(ன்)னமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர்
குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூங்கமலம் சரண் நூபுர குரல் ஓசையும் ஏந்திடு மா அண்டலையின் கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன் தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தக என்று இயல் பேரி திசை மூடுக கடல் ஏழ் பொடியாம்படி
ஓங்கிய வெம் கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட அரவின் சிர(ம்) மீள் படக் குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா
கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண் தழல் மா பொடி அருள்வோர் அடல் மான் துடி தாங்கிய வண் கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் அருள் ஈன்ற மென் குரவோனே
கடையேன் இரு வினை நோய் மல(ம்) மாண்டிட தீண்டிய ஒண் சுக மோகினி வ(ள்)ளி நாயகி பாங்கன் எனாம் பகர்மின் கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே.
தமிழின் இனிமைக் குரலைக் காட்டும் குயிலோ, மயிலோ, கோழி தானோ, புறாவோ, கிளியோ, காடையோ, இனிமையான அன்றில் பறவையோ, அழகிய வண்டோ என்னும்படி குரலை உடைய, மிக்க செம்மையான, தக்கதான, சிறந்த கண்டத்து ஒலியை (புட்குரலை) உடைய விலைமாதர்களின் வாயிதழ் பலாச் சுளை, தேன், பழம் இவைகளின் சுவை சேர்ந்ததாகும். மார்பகப் பாரங்களும் மலை என்னும்படி பருத்து ஓங்க, அழகிய தேமல் அங்கும் இங்கும் சிதறிட, விழி வேல் தானோ, நெற்றி வில்லோ, சிறந்த பிறையோ, சரீரம் மாந்துளிர் போன்றதோ, கூந்தல் இருளோ? பற்கள் விளங்கும் சிறந்த சூரியனின் பாயும் ஒளியோ? மூக்கு குமிழம்பூவோ? முகம் சந்திரனோ? குளிர்ந்த செந்தாமரையோ? பொருத்தமாக உள்ள தோடு விளங்கும் காதுகள் ஆடுகின்ற ஊஞ்சலோ? கழுத்து மென்மையான கமுகோ? இடுப்பு கொடியோ, நூலோ? எனக் கொண்டுள்ளவர்கள் அன்னம் போல்பவர். அன்பு காட்டுபவர்கள். பெருமை வாய்ந்த மின்னல் கொடி போன்றவர் (ஆகிய) பொது மகளிர். அவர்களது குணத்திலும் ஈடுபட்டு படுக்கையில் கலவி புரிந்தாலும், விளங்குகின்ற அழகிய தாமரை போன்ற உனது திருவடியில் உள்ள சிலம்பின் ஒலியும், உன் கையில் ஏந்திய கோழிக் கொடியையும், எழுதுவதற்கு அரிதான ஒளி நிறைந்த அழகும் மிகுந்த அளவுக்கு என் நினைவில் வருவதை நான் சிறிதேனும் தடை செய்யேன். திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தக இவ்வாறு ஒலிக்கும் பேரி முரசின் ஓசை திசைகள் எல்லாம் மூடும் படியும், ஏழு கடல்களும் பொடியாகும்படியும், பேரொலியுடன் வந்த கொடிய யானைகளும், தேர்களும், குதிரைகளும், அசுரர்களும் இறந்துபட, பெரிய ஆதிசேஷனாகிய பாம்பின் தலை பூ பாரத்திலிருந்து மீட்சி பெற, மலைகளின் பொடி ஆகாயத்தை அளாவும்படி செலுத்திய வளமும் ஒளியும் வாய்ந்த வேலாயுதனே, மணம் வீசும் அழகிய கொன்றையைச் சூடிய சடையை உடைய சிவபெருமான், அடியேனுடைய துயரங்கள் நீங்க வெண்ணிறமான நெருப்பால் தோன்றிய பெருமை வாய்ந்த பொடியாகிய திருநீற்றை அருளியவர், வலிமை பொருந்திய மான், உடுக்கை ஆகியவற்றைத் தாங்கிய வளப்பம் பொருந்திய கைகளை உடையவர் பக்கத்தில் இருந்து அருளும் உமா தேவி, எம்மைப் பெற்றவள் பெற்றருளிய அமைதி வாய்ந்த குருவே, கீழோனாகிய என்னுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளும், நோயும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் அழிந்து போகும்படி தொட்டு தீக்ஷை செய்தவனும், ஒள்ளிய சுக மோகினியாகிய வள்ளி நாயகிக்கு கணவன் என்று சொல்லப்படுகின்றவனும், விளங்கும் கலை நூல்களில் வல்லவனுமான முருகனே, நெருப்பு உருவான மலையாகிய திரு அண்ணாமலையில் வளப்பம் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே.
தமிழ் ஓதிய குயிலோ மதில் ஆண்டலை ஆம் புறவம் கிளி காடை இன் அணில் ஏர் அளி ஆம் ... தமிழின் இனிமைக் குரலைக் காட்டும் குயிலோ, மயிலோ, கோழி தானோ, புறாவோ, கிளியோ, காடையோ, இனிமையான அன்றில் பறவையோ, அழகிய வண்டோ என்னும்படி குரல் வாய்ந்த அதி செம் தகு மா மிடறு ஒலியார் இதழ் ஆம் சுளை தேன் கனியின் சுவை சேரும் ... குரலை உடைய, மிக்க செம்மையான, தக்கதான, சிறந்த கண்டத்து ஒலியை (புட்குரலை) உடைய விலைமாதர்களின் வாயிதழ் பலாச் சுளை, தேன், பழம் இவைகளின் சுவை சேர்ந்ததாகும். தன பாரமும் மலையாம் என ஓங்கிட மாம் பொறி சிந்திட வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின் சரீ(ர) ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம் ... மார்பகப் பாரங்களும் மலை என்னும்படி பருத்து ஓங்க, அழகிய தேமல் அங்கும் இங்கும் சிதறிட, விழி வேல் தானோ, நெற்றி வில்லோ, சிறந்த பிறையோ, சரீரம் மாந்துளிர் போன்றதோ, கூந்தல் இருளோ? பற்கள் விளங்கும் சிறந்த சூரியனின் பாயும் ஒளியோ? மூக்கு குமிழம்பூவோ? முகம் சந்திரனோ? குளிர்ந்த செந்தாமரையோ? சரி தோடு இணை செவி ஆடு உ(ஊ)சலாம் கள(ம்) பூ கமுகம் கொடி நூல் இடை உடையார் அ(ன்)னமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர் ... பொருத்தமாக உள்ள தோடு விளங்கும் காதுகள் ஆடுகின்ற ஊஞ்சலோ? கழுத்து மென்மையான கமுகோ? இடுப்பு கொடியோ, நூலோ? எனக் கொண்டுள்ளவர்கள் அன்னம் போல்பவர். அன்பு காட்டுபவர்கள். பெருமை வாய்ந்த மின்னல் கொடி போன்றவர் (ஆகிய) பொது மகளிர். குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூங்கமலம் சரண் நூபுர குரல் ஓசையும் ஏந்திடு மா அண்டலையின் கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன் தகையேனே ... அவர்களது குணத்திலும் ஈடுபட்டு படுக்கையில் கலவி புரிந்தாலும், விளங்குகின்ற அழகிய தாமரை போன்ற உனது திருவடியில் உள்ள சிலம்பின் ஒலியும், உன் கையில் ஏந்திய கோழிக் கொடியையும், எழுதுவதற்கு அரிதான ஒளி நிறைந்த அழகும் மிகுந்த அளவுக்கு என் நினைவில் வருவதை நான் சிறிதேனும் தடை செய்யேன். திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தக என்று இயல் பேரி திசை மூடுக கடல் ஏழ் பொடியாம்படி ... திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தக இவ்வாறு ஒலிக்கும் பேரி முரசின் ஓசை திசைகள் எல்லாம் மூடும் படியும், ஏழு கடல்களும் பொடியாகும்படியும், ஓங்கிய வெம் கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட அரவின் சிர(ம்) மீள் படக் குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா ... பேரொலியுடன் வந்த கொடிய யானைகளும், தேர்களும், குதிரைகளும், அசுரர்களும் இறந்துபட, பெரிய ஆதிசேஷனாகிய பாம்பின் தலை பூ பாரத்திலிருந்து மீட்சி பெற, மலைகளின் பொடி ஆகாயத்தை அளாவும்படி செலுத்திய வளமும் ஒளியும் வாய்ந்த வேலாயுதனே, கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண் தழல் மா பொடி அருள்வோர் அடல் மான் துடி தாங்கிய வண் கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் அருள் ஈன்ற மென் குரவோனே ... மணம் வீசும் அழகிய கொன்றையைச் சூடிய சடையை உடைய சிவபெருமான், அடியேனுடைய துயரங்கள் நீங்க வெண்ணிறமான நெருப்பால் தோன்றிய பெருமை வாய்ந்த பொடியாகிய திருநீற்றை அருளியவர், வலிமை பொருந்திய மான், உடுக்கை ஆகியவற்றைத் தாங்கிய வளப்பம் பொருந்திய கைகளை உடையவர் பக்கத்தில் இருந்து அருளும் உமா தேவி, எம்மைப் பெற்றவள் பெற்றருளிய அமைதி வாய்ந்த குருவே, கடையேன் இரு வினை நோய் மல(ம்) மாண்டிட தீண்டிய ஒண் சுக மோகினி வ(ள்)ளி நாயகி பாங்கன் எனாம் பகர்மின் கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே. ... கீழோனாகிய என்னுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளும், நோயும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் அழிந்து போகும்படி தொட்டு தீக்ஷை செய்தவனும், ஒள்ளிய சுக மோகினியாகிய வள்ளி நாயகிக்கு கணவன் என்று சொல்லப்படுகின்றவனும், விளங்கும் கலை நூல்களில் வல்லவனுமான முருகனே, நெருப்பு உருவான மலையாகிய திரு அண்ணாமலையில் வளப்பம் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே.