தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு மெழுகிய அங்கமும்
பார்வையில் கொளுந்து தழல் உமிழ் கண்களும்
காளம் ஒத்த கொம்பும் உ(ள்)ள கதம் கடமா மேல்
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து
அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து
தமர் அழ மைந்தரும் சோகம் உற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள்
கமல முகங்களும் கோமளத்து இலங்கு நகையு(ம்) நெடும் க(ண்)ணும்
காதினில் துலங்கு கனககுதம்பையும் தோடும்
வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும்
கடிது உலகு எங்கணும் தாடி இட்டுவந்த மயிலும்
இலங்கு அலங்கார பொன் சதங்கை கழல் ஒலி தண்டையம் காலும்
ஒக்க வந்து வரம் எனக்கு அருள் கூர்வாய்
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை
இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்த்திடுவோனே
இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா
விசித்து நின்ற ரண முக துங்க
வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர்வேலா
அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு
கழுவில் உதைந்து உதைந்து ஏற விட்டு நின்ற அபிநவ
துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே
அமரர் வணங்கு(ம்) கந்தா
குறத்தி கொங்கை தனில் முழுகும் கடம்பா
மிகுத்த செம் சொல் அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுகப் பெருமாளே.
ஒலி செய்கின்ற (கால்) குளம்புகளும், கரிய நிறமுடைய இருளின் திரட்சி பூசியது போன்ற உடலும், பார்க்கும் பார்வையில் எரிகின்ற நெருப்பைக் கக்கும் கண்களும், ஊது கொம்பு போன்ற நீண்ட கொம்புகளும் உள்ள, கோபத்தை உடைய மத யானையைப்போன்ற எருமையின் மீது, தனியனாக வரும் யமன் பாசக் கயிற்றை வீசி எறிந்து, கொல்ல வருவான் என்னும் மனக் கவலையில் இருந்து சுற்றத்தார்கள் அழவும், எனது மக்களும் கவலை உற்று வருந்தவும், மரணம் குறுகிக் கூடும் நாளில், தாமரை போன்ற திருமுகங்களும், அவற்றில் அழகுடன் விளங்குகின்ற புன்சிரிப்பும், நீண்ட கண்களும், காதில் விளங்கும் பொன்னாலான காதணியும், தோடும், வைர ரத்தினத்தால் ஆகிய தோள் அணியாகிய வாகுவலயமும், வெற்றி பொருந்திய ஒளி வீசும் வேலாயுதமும், விரைவாக உலக முழுதும் பயணம் சென்று வந்த மயிலும், விளங்கும் அலங்காரமாய் உள்ள பொன்னாலான சதங்கை, வீரக் கழல்கள், ஒலிக்கும் தண்டைகள் அணிந்த திருவடிகளும், இவை யாவும் ஒன்று படக் கூடி வர, நீ வரத்தை எனக்கு அருள் புரிவாயாக. இமகிரியின் அரசன் பெற்ற அழகிய பதுமையாகிய பார்வதி, பச்சை நிறம் கொண்ட இளங் கொடி, அண்டங்களை எல்லாம் பெற்ற பூவை, சக்தி அம்பை எனப்படும் உமா தேவியின் இளமையான மார்பிலிருந்து தேர்ந்த ஞானமாகிய பாலைக் குடித்து விளங்குகின்ற (சம்பந்தராக வந்து), (பாண்டியனுக்கு) இயற்கையாக அமைந்த கூனை நிமிர்த்தியவனே. சிவபெருமான் வணங்கிக் கேட்க, அவர் முன் நின்று ஆகம ஞான உபதேசம் செய்த வீரனே, பேரணிகளை இறுகக் கட்டி போர் முனைக்கு வந்து எதிர்த்த கொடிய சூரனுடைய உடலைப் பிளந்த வேலாயுதத்தை உடைய ஒளி வீசும் வேலனே, சமணர்கள் அனைவரும் மதுரையில் கூட்டமாக (வாதிட்டுத் தோற்றபின்) ஒவ்வொருவரும் கழுமுனையில் காலூன்றி உதைத்து ஏறி இறக்கும்படி விட்டு நின்ற புதுமைப் பிரானே, பரிசுத்தமான கங்கைநதிக்கு மகனே, அடியவர்களுக்கு எளிமையானவனே, தேவர்கள் தொழும் கந்தனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புகளில் முழுகிய, கடப்ப மாலை அணிந்தவனே, மிகவும் வல்ல புகழ் விளங்கும் திருவண்ணாமலையின் பெரிய கோபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.
தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு மெழுகிய அங்கமும் ... ஒலி செய்கின்ற (கால்) குளம்புகளும், கரிய நிறமுடைய இருளின் திரட்சி பூசியது போன்ற உடலும், பார்வையில் கொளுந்து தழல் உமிழ் கண்களும் ... பார்க்கும் பார்வையில் எரிகின்ற நெருப்பைக் கக்கும் கண்களும், காளம் ஒத்த கொம்பும் உ(ள்)ள கதம் கடமா மேல் ... ஊது கொம்பு போன்ற நீண்ட கொம்புகளும் உள்ள, கோபத்தை உடைய மத யானையைப்போன்ற எருமையின் மீது, தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து ... தனியனாக வரும் யமன் பாசக் கயிற்றை வீசி எறிந்து, அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து ... கொல்ல வருவான் என்னும் மனக் கவலையில் இருந்து தமர் அழ மைந்தரும் சோகம் உற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள் ... சுற்றத்தார்கள் அழவும், எனது மக்களும் கவலை உற்று வருந்தவும், மரணம் குறுகிக் கூடும் நாளில், கமல முகங்களும் கோமளத்து இலங்கு நகையு(ம்) நெடும் க(ண்)ணும் ... தாமரை போன்ற திருமுகங்களும், அவற்றில் அழகுடன் விளங்குகின்ற புன்சிரிப்பும், நீண்ட கண்களும், காதினில் துலங்கு கனககுதம்பையும் தோடும் ... காதில் விளங்கும் பொன்னாலான காதணியும், தோடும், வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும் ... வைர ரத்தினத்தால் ஆகிய தோள் அணியாகிய வாகுவலயமும், வெற்றி பொருந்திய ஒளி வீசும் வேலாயுதமும், கடிது உலகு எங்கணும் தாடி இட்டுவந்த மயிலும் ... விரைவாக உலக முழுதும் பயணம் சென்று வந்த மயிலும், இலங்கு அலங்கார பொன் சதங்கை கழல் ஒலி தண்டையம் காலும் ... விளங்கும் அலங்காரமாய் உள்ள பொன்னாலான சதங்கை, வீரக் கழல்கள், ஒலிக்கும் தண்டைகள் அணிந்த திருவடிகளும், ஒக்க வந்து வரம் எனக்கு அருள் கூர்வாய் ... இவை யாவும் ஒன்று படக் கூடி வர, நீ வரத்தை எனக்கு அருள் புரிவாயாக. இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி ... இமகிரியின் அரசன் பெற்ற அழகிய பதுமையாகிய பார்வதி, பச்சை நிறம் கொண்ட இளங் கொடி, அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை ... அண்டங்களை எல்லாம் பெற்ற பூவை, சக்தி அம்பை எனப்படும் உமா தேவியின் இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்த்திடுவோனே ... இளமையான மார்பிலிருந்து தேர்ந்த ஞானமாகிய பாலைக் குடித்து விளங்குகின்ற (சம்பந்தராக வந்து), (பாண்டியனுக்கு) இயற்கையாக அமைந்த கூனை நிமிர்த்தியவனே. இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா ... சிவபெருமான் வணங்கிக் கேட்க, அவர் முன் நின்று ஆகம ஞான உபதேசம் செய்த வீரனே, விசித்து நின்ற ரண முக துங்க ... பேரணிகளை இறுகக் கட்டி போர் முனைக்கு வந்து எதிர்த்த வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர்வேலா ... கொடிய சூரனுடைய உடலைப் பிளந்த வேலாயுதத்தை உடைய ஒளி வீசும் வேலனே, அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு ... சமணர்கள் அனைவரும் மதுரையில் கூட்டமாக (வாதிட்டுத் தோற்றபின்) கழுவில் உதைந்து உதைந்து ஏற விட்டு நின்ற அபிநவ ... ஒவ்வொருவரும் கழுமுனையில் காலூன்றி உதைத்து ஏறி இறக்கும்படி விட்டு நின்ற புதுமைப் பிரானே, துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே ... பரிசுத்தமான கங்கைநதிக்கு மகனே, அடியவர்களுக்கு எளிமையானவனே, அமரர் வணங்கு(ம்) கந்தா ... தேவர்கள் தொழும் கந்தனே, குறத்தி கொங்கை தனில் முழுகும் கடம்பா ... குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புகளில் முழுகிய, கடப்ப மாலை அணிந்தவனே, மிகுத்த செம் சொல் அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுகப் பெருமாளே. ... மிகவும் வல்ல புகழ் விளங்கும் திருவண்ணாமலையின் பெரிய கோபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.