காரும் மருவும் பெருகு சோலை மருவும் கொடிய காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே
கால் அடர வம்பு அமளி மேல் அடர
வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என
ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே ஊடி இரு கொங்கை மிசை கூடி
வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே
ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர்
ஆதி பரவும்படி நினைந்த குரு நாதா
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே.
மேகமும், மருக்கொழுந்தின் வாசனையும் பெருகி எழும் சோலையில் உள்ள பொல்லாத குயிலாகிய எக்காளம் இடைவிடாமல் ஒலிக்கின்ற அந்தக் காரணத்தாலும், தென்றல் காற்று நெருங்கி வாசனை ஏற்றியுள்ள படுக்கையின் மேல் வேகமாக வீசுவதாலும், போருக்கு எழுந்த மன்மதன் செலுத்துவதால் மேலே படுகின்ற பாணங்களாகிய ஐந்து மலர்களாலும், ஊராரும் உலகத்தாரும் பழைய பெரிய யுகாந்த பிரளய காலம் வந்தது போல் (எனனைப் பற்றிய வசை) ஆரவாரம் செய்வதாலும், (நீ என் மீது மனம் இரங்கி) ஓர் இராப் பொழுதேனும் வந்து என் மனம் நைந்து அழியாதபடி, மாறி மாறிப் பிணங்கியும் எனது மார்பகங்களின் மீது கூடி இணங்கியும், இசைப் பாட்டுகளைப் பாடும் வண்டின் கூட்டங்கள் உலவுகின்ற கடப்ப மலர் மாலையைத் தந்து அருள்வாயாக. ஆத்தி மலரையும், பாம்பையும், பிறைச் சந்திரனையும், கங்கையையும் அணிந்துள்ள சடையராகிய ஆதி மூர்த்தியான சிவ பெருமான் தியானித்த குருநாதனே, ஆறு முகங்களும், குராமலரும், வாகனமாகிய மயிலும், குறத்தியாகிய வள்ளி அணைந்து ஆட்சி கொள்ளும் மார்பும், (ஞானச்) செல்வமும், அன்பும் உடையவனே, மேரு மலையும், பெரிய சூரனும், கிரெளஞ்ச மலையும், கரிய அலை கடலும், பகைவர்களும் பயப்படும்படி செலுத்திய வேலாயுதனே, உலகம் வணங்கும் திருவண்ணாமலையில் திகழ்கின்ற திரு வீதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
காரும் மருவும் பெருகு சோலை மருவும் கொடிய காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே ... மேகமும், மருக்கொழுந்தின் வாசனையும் பெருகி எழும் சோலையில் உள்ள பொல்லாத குயிலாகிய எக்காளம் இடைவிடாமல் ஒலிக்கின்ற அந்தக் காரணத்தாலும், கால் அடர வம்பு அமளி மேல் அடர ... தென்றல் காற்று நெருங்கி வாசனை ஏற்றியுள்ள படுக்கையின் மேல் வேகமாக வீசுவதாலும், வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே ... போருக்கு எழுந்த மன்மதன் செலுத்துவதால் மேலே படுகின்ற பாணங்களாகிய ஐந்து மலர்களாலும், ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ... ஊராரும் உலகத்தாரும் பழைய பெரிய யுகாந்த பிரளய காலம் வந்தது போல் (எனனைப் பற்றிய வசை) ஆரவாரம் செய்வதாலும், ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே ஊடி இரு கொங்கை மிசை கூடி ... (நீ என் மீது மனம் இரங்கி) ஓர் இராப் பொழுதேனும் வந்து என் மனம் நைந்து அழியாதபடி, மாறி மாறிப் பிணங்கியும் எனது மார்பகங்களின் மீது கூடி இணங்கியும், வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே ... இசைப் பாட்டுகளைப் பாடும் வண்டின் கூட்டங்கள் உலவுகின்ற கடப்ப மலர் மாலையைத் தந்து அருள்வாயாக. ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ... ஆத்தி மலரையும், பாம்பையும், பிறைச் சந்திரனையும், கங்கையையும் அணிந்துள்ள சடையராகிய ஆதி பரவும்படி நினைந்த குரு நாதா ... ஆதி மூர்த்தியான சிவ பெருமான் தியானித்த குருநாதனே, ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே ... ஆறு முகங்களும், குராமலரும், வாகனமாகிய மயிலும், குறத்தியாகிய வள்ளி அணைந்து ஆட்சி கொள்ளும் மார்பும், (ஞானச்) செல்வமும், அன்பும் உடையவனே, மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா ... மேரு மலையும், பெரிய சூரனும், கிரெளஞ்ச மலையும், கரிய அலை கடலும், பகைவர்களும் பயப்படும்படி செலுத்திய வேலாயுதனே, மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே. ... உலகம் வணங்கும் திருவண்ணாமலையில் திகழ்கின்ற திரு வீதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.