கறுவு மிக்கு ஆவியைக் கல(க்)கும் அக் காலன் ஒத்து
இலகு கண் சேல் களிப்புடன் நாடக் கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி
உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று
உறு மலர்ப் பாயலில் துயர் விளைத்து ஊடல் உற்று
உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர் ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன்
உயிர்ப் புணை இணைத் தாள்தனைத் தொழுவேனோ
மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மைச் செறி திருக் கோலம் உற்று அணைவானும்
மறைகள் புக்கார் எனக் குவடு நெட்டாழி வற்றிட அடல் சூரனைப் பொரும் வேலா
அறிவுடைத்தாரும் மற்றுடன் உனைப் பாடல் உற்று அருணையில் கோபுரத்து உறைவோனே
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசை உற்று அயரும் அச் சேவகப் பெருமாளே.
கோபம் மிகுந்து உயிரைக் குலையச் செய்யும் அந்த யமனைப் போன்று, விளங்கும் சேல் மீன் போன்ற கண் மகிழ்ச்சியுடன் விரும்பிப் பார்க்க, யோசனை செய்து முன்னதாகவே உடலுக்கு அளவான பொருள் இவ்வளவு என்று பேசி, உள்ளத்தில் வைத்த கள்ளத்தனத்தால் பொருளுக்குத் தக்க உறவு பூண்டு, பொருந்திய மலர்ப் படுக்கையில் துயரத்தை உண்டு பண்ணியும், பிணக்கு உற்றும், அதிகப் பொருள் தர வேண்டும் என்று கூறி உட்படுகின்ற விலைமாதர்கள் கடிந்து கூறும் துன்பத்துக்கு என் உள்ளத்து அறிவை இழந்தவன் நான். என் உயிருக்குப் பிறவிக் கடலைக் கடக்கத் தெப்பம் போல உதவும் உனது இரு திருவடிகளையும் தொழ மாட்டேனோ? வேதங்களை எடுத்து ஓதுபவனாகிய பிரமனும், வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனும், மேகம் போலக் கருமை நிறம் நிறைந்த அழகிய கோலத்தைக்கொண்டு சேரும் திருமாலும், (சூரனுக்குப் பயந்து) மறைவிடம் தேடி (தன்னிடம்) அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்ற காரணத்தால், மலைகளைக் கொண்ட நெடிய கடல் வற்றிப்போக, வலிமை வாய்ந்த சூரனோடு போர் செய்யும் வேலனே, அறிவு வாய்ந்த பெரியோர்களும் என்னுடன் கூடி (யான் பாடும் சந்தப் பாக்களால்) உன்னைப் பாட திருவண்ணாமலையில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருப்பவனே, வள்ளி மலைக் காட்டில் மயில் போன்று உலாவும் வள்ளியின் அழகிய பெரிய மார்பகங்களுக்கு ஆசை அடைந்து சோர்வு கொண்ட வலிமை வாய்ந்த பெருமாளே.
கறுவு மிக்கு ஆவியைக் கல(க்)கும் அக் காலன் ஒத்து ... கோபம் மிகுந்து உயிரைக் குலையச் செய்யும் அந்த யமனைப் போன்று, இலகு கண் சேல் களிப்புடன் நாடக் கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி ... விளங்கும் சேல் மீன் போன்ற கண் மகிழ்ச்சியுடன் விரும்பிப் பார்க்க, யோசனை செய்து முன்னதாகவே உடலுக்கு அளவான பொருள் இவ்வளவு என்று பேசி, உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று ... உள்ளத்தில் வைத்த கள்ளத்தனத்தால் பொருளுக்குத் தக்க உறவு பூண்டு, உறு மலர்ப் பாயலில் துயர் விளைத்து ஊடல் உற்று ... பொருந்திய மலர்ப் படுக்கையில் துயரத்தை உண்டு பண்ணியும், பிணக்கு உற்றும், உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர் ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் ... அதிகப் பொருள் தர வேண்டும் என்று கூறி உட்படுகின்ற விலைமாதர்கள் கடிந்து கூறும் துன்பத்துக்கு என் உள்ளத்து அறிவை இழந்தவன் நான். உயிர்ப் புணை இணைத் தாள்தனைத் தொழுவேனோ ... என் உயிருக்குப் பிறவிக் கடலைக் கடக்கத் தெப்பம் போல உதவும் உனது இரு திருவடிகளையும் தொழ மாட்டேனோ? மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மைச் செறி திருக் கோலம் உற்று அணைவானும் ... வேதங்களை எடுத்து ஓதுபவனாகிய பிரமனும், வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனும், மேகம் போலக் கருமை நிறம் நிறைந்த அழகிய கோலத்தைக்கொண்டு சேரும் திருமாலும், மறைகள் புக்கார் எனக் குவடு நெட்டாழி வற்றிட அடல் சூரனைப் பொரும் வேலா ... (சூரனுக்குப் பயந்து) மறைவிடம் தேடி (தன்னிடம்) அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்ற காரணத்தால், மலைகளைக் கொண்ட நெடிய கடல் வற்றிப்போக, வலிமை வாய்ந்த சூரனோடு போர் செய்யும் வேலனே, அறிவுடைத்தாரும் மற்றுடன் உனைப் பாடல் உற்று அருணையில் கோபுரத்து உறைவோனே ... அறிவு வாய்ந்த பெரியோர்களும் என்னுடன் கூடி (யான் பாடும் சந்தப் பாக்களால்) உன்னைப் பாட திருவண்ணாமலையில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருப்பவனே, அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசை உற்று அயரும் அச் சேவகப் பெருமாளே. ... வள்ளி மலைக் காட்டில் மயில் போன்று உலாவும் வள்ளியின் அழகிய பெரிய மார்பகங்களுக்கு ஆசை அடைந்து சோர்வு கொண்ட வலிமை வாய்ந்த பெருமாளே.