மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற.....மொழியாலும் மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற.....நுதலாலும் அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச(ம்) நடையாலும் அங்கை.....வளையாலும் அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி.....விடலாமோ மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம் வலமாக வந்த.....குமரேசா மறி தாவு செங்கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த.....முருகேசா நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர் நடுவே நிறைந்த மதி சூழ நறை வீசு கும்ப குட(ம்) மேவு கம்பை நகர் மீது அமர்ந்த.....பெருமாளே.
காம ஆசையை அறிவிக்கும் (வேசையர்களின்) அந்த தோற்றத்தாலும், வஞ்சகம் கூடிய பழிப்புச் சொற்களைப் பேசுகின்ற பேச்சுக்களாலும், மான் பார்வை கொண்ட கண்களுக்கு அருகிலுள்ள, மாலைப் பிறையை நிகர்க்கின்ற, நெற்றியாலும், வேலை ஒத்த கண்களாலும், அன்னத்தை ஒத்த நடையாலும், அழகிய கையில் உள்ள வளையல்களாலும், என் அறிவு அழிபட்டு, சோர்வு அடைந்து, உள்ளம் ஒடுங்கி அடியேனாகிய நான் மயக்கம் கொள்ளலாமோ? மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே, மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி தேவி பெற்ற முருகேசனே, மேம்பாட்டுடன், வான் அளவும் உயர்ந்த, அழகிய மாடங்களின் உச்சியிலும் நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் நிலவு சூழ்ந்து விளங்க, (வேள்வியின் பொருட்டு) நறுமணம் கமழும் கும்ப கலசங்களும், குடங்களும் பொருந்தி உள்ள, கம்பை ஆற்றங்கரை நகராகிய காஞ்சீபுரத்தின் மீது விருப்பம் வைத்து வீற்றிருக்கும் பெருமாளே.
மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும் ... காம ஆசையை அறிவிக்கும் (வேசையர்களின்) அந்த தோற்றத்தாலும், வஞ்சகம் கூடிய பழிப்புச் சொற்களைப் பேசுகின்ற பேச்சுக்களாலும், மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற நுதலாலும் ... மான் பார்வை கொண்ட கண்களுக்கு அருகிலுள்ள, மாலைப் பிறையை நிகர்க்கின்ற, நெற்றியாலும், அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச(ம்) நடையாலும் அங்கை வளையாலும் ... வேலை ஒத்த கண்களாலும், அன்னத்தை ஒத்த நடையாலும், அழகிய கையில் உள்ள வளையல்களாலும், அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ ... என் அறிவு அழிபட்டு, சோர்வு அடைந்து, உள்ளம் ஒடுங்கி அடியேனாகிய நான் மயக்கம் கொள்ளலாமோ? மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா ... மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே, மறி தாவு செங்கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா ... மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி தேவி பெற்ற முருகேசனே, நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர் நடுவே நிறைந்த மதி சூழ ... மேம்பாட்டுடன், வான் அளவும் உயர்ந்த, அழகிய மாடங்களின் உச்சியிலும் நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் நிலவு சூழ்ந்து விளங்க, நறை வீசு கும்ப குட(ம்) மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே. ... (வேள்வியின் பொருட்டு) நறுமணம் கமழும் கும்ப கலசங்களும், குடங்களும் பொருந்தி உள்ள, கம்பை ஆற்றங்கரை நகராகிய காஞ்சீபுரத்தின் மீது விருப்பம் வைத்து வீற்றிருக்கும் பெருமாளே.