சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி
நித்திரைக் கோசம் வேரற
சீவன் முத்தியிற் கூடவே
களித்து அநுபூதி சேர
அற்புதக் கோல மாமென
சூரியப்புவிக் கேறி யாடுக
சீலம் வைத்தருள் தேறியேயிருக்க அறியாமல்
பாசம் விட்டுவிட் டோடி போனது
போது மிப்படிக்கு ஆகிலேன்
இனிப் பாழ்வழிக்கு அடைக்காமலே
பிடித்து அடியேனைப் பார் அடைக்கலக் கோலமாமென
தாபரித்து நித்த ஆரம் ஈதென
பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே
தேசில் துட்டநிட்டூர
கோதுடைச் சூரை வெட்டி
யெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட்கு
ஏத மேதவிர்த்தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி
வித்துருப் பாதன்
ஓர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான
நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் புலிவேளூர்
காள அத்தியப் பால்சி ராமலை
தேச முற்றுமுப் பூசை மேவி
நற் காம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே.
சீச்சீ என்று வெறுக்கத்தக்க தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி, தூக்கமும், ஆன்மாவை முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும் வேரோடு அற, ஆன்மா முக்தி நிலை அடைந்து விடுதலை பெற, யான் மகிழ்ந்து பேரின்ப அநுபவத்தைப் பெற, அற்புதத் தோற்றம் இது என்று கூறும்படியாக சூரிய மண்டலத்தில் யான் சென்று அங்கு நடனம் புரிய, ஒழுக்க வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல், பாசங்கள் என்னை விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை போதும் போதும். இப்படிப் பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம். இனியாகிலும் இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல் என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக. ஞானம் இல்லாத துஷ்டனும், கொடுமை வாய்ந்தவனும், குற்றங்கள் நிறைந்தவனுமான சூரனை வெட்டி, எட்டுத் திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான அறிஞர்களின் துயரத்தை நீக்கி அருளியவனே, தன் திருக்கரங்களில் சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும், பவளம் போன்ற சிவந்த பாதங்களை உடையவருமான சிவபெருமானின் ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி பெற்றெடுத்த அழகிய குருநாதனே, காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா, நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைத்தீசுரன்கோயில், திருக்காளத்தி, அதன்பின் திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும் நாடு முழுவதும் மூன்று காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று, நல்ல காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி ... சீச்சீ என்று வெறுக்கத்தக்க தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி, நித்திரைக் கோசம் வேரற ... தூக்கமும், ஆன்மாவை முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும் வேரோடு அற, சீவன் முத்தியிற் கூடவே ... ஆன்மா முக்தி நிலை அடைந்து விடுதலை பெற, களித்து அநுபூதி சேர ... யான் மகிழ்ந்து பேரின்ப அநுபவத்தைப் பெற, அற்புதக் கோல மாமென ... அற்புதத் தோற்றம் இது என்று கூறும்படியாக சூரியப்புவிக் கேறி யாடுக ... சூரிய மண்டலத்தில் யான் சென்று அங்கு நடனம் புரிய, சீலம் வைத்தருள் தேறியேயிருக்க அறியாமல் ... ஒழுக்க வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல், பாசம் விட்டுவிட் டோடி போனது ... பாசங்கள் என்னை விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை போது மிப்படிக்கு ஆகிலேன் ... போதும் போதும். இப்படிப் பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம். இனிப் பாழ்வழிக்கு அடைக்காமலே ... இனியாகிலும் இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல் பிடித்து அடியேனைப் பார் அடைக்கலக் கோலமாமென ... என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, தாபரித்து நித்த ஆரம் ஈதென ... ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே ... உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக. தேசில் துட்டநிட்டூர ... ஞானம் இல்லாத துஷ்டனும், கொடுமை வாய்ந்தவனும், கோதுடைச் சூரை வெட்டி ... குற்றங்கள் நிறைந்தவனுமான சூரனை வெட்டி, யெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட்கு ... எட்டுத் திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான அறிஞர்களின் ஏத மேதவிர்த்தருள்வோனே ... துயரத்தை நீக்கி அருளியவனே, சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி ... தன் திருக்கரங்களில் சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும், வித்துருப் பாதன் ... பவளம் போன்ற சிவந்த பாதங்களை உடையவருமான சிவபெருமானின் ஓர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா ... ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி பெற்றெடுத்த அழகிய குருநாதனே, காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான ... காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா, நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் புலிவேளூர் ... நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைத்தீசுரன்கோயில், காள அத்தியப் பால்சி ராமலை ... திருக்காளத்தி, அதன்பின் திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும் தேச முற்றுமுப் பூசை மேவி ... நாடு முழுவதும் மூன்று காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று, நற் காம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே. ... நல்ல காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.