கொக்குக்கு ஒக்கத் தலையில் பற்றுச் சிக்கத்து அளகக் கொத்து உற்று
உக்குப் பிணி உற்றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையில் பல் தத்து உற்றுக் கழல
கொத்தைச் சொல் கற்று உலகில் பல பாஷை திக்கித் திக்கிக் குளறிச் செப்பி
தப்பிக் கெடு பொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் சுமை பேணும் சிக்கு அற்று
உட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத்துக்குப் புகலப் பெறுவேனோ
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டிக் கிட்டி இட்டு எதிரிட்டு
அத்ரத்து எற்றிக் கடுகப் பொரு சூரன்
அச்சுக் கெட்டுப் படை விட்டு அச்சப் பட்டுக் கடலுள் புக்குப்பட்டுத் துருமத்து அடைவாக
தக்குத் திக்குத் தறுகண் தொக்குத் தொக்கு உற்றது கண்
கைக் கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி
சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக் கைச் சமர் செய்
சத்திக் கச்சிக் குமரப் பெருமாளே.
கொக்கின் நிறம் போல தலையில் பற்றியுள்ள சிகையின் மயிர்த் தொகுதி வெண்மை நிறத்தை அடைந்து, மெலிந்து, நோயுற்றவனாகி, இருமி, வாந்தி செய்து, இறுதியில் பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய, இழிவான சொற்களைக் கற்று உலகத்திலுள்ள பல மொழிகளை தடைபட்டுத் தடைபட்டுக் குழறிப் பேச, தவறுதலான வழியில் சென்று, குப்பை நிறைந்த சட்டை என்னும் இந்தக் குடிசையாகிய உடலின் சுமையை விரும்புகின்ற சிக்கல் நீங்கப் பெற்று, உள்ளத்தில் கருணை என்னும் எண்ணம் வாய்க்கப் பெற்று, தூய்மையானதும் நற் கதியைத் தர வல்லதுமான தமிழ்ப் பாக்களை நினைத்தபடி கோர்வையாகச் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? அங்குமிங்குமாகப் பல இடங்களில் போர் செய்யத் துணிந்து, மிக அருகில் வந்து நெருக்கி எதிர்த்து, ஆயுதங்களைச் செலுத்தி விரைவாகச் சண்டை செய்த சூரன் உடம்பு கெட்டுப் போய், ஆயுதங்களைக் கைவிட்டு, பயந்து, கடலுக்குள்ளே புகுந்து, மாமர உருவத்தை அடைந்து நிற்க, அகங்காரத்துடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற, கண்ணும், மற்ற உணர்ச்சிகளும் அழிந்துவிட, கைகளை மட்டும் மிகவும் கொட்டி ஆர்ப்பரித்து, உடலுடன் சில விநாடிகள் ஆட்டம் கண்டு, சக்தியாகிய வேற்படை குத்திய வலியால் (சூரன்) துடித்துக் கதறி ஒலி செய்ய, தர்மமான போரைச் செய்தவனே, சக்தியாகிய காமாட்சி தங்கும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே.
கொக்குக்கு ஒக்கத் தலையில் பற்றுச் சிக்கத்து அளகக் கொத்து உற்று ... கொக்கின் நிறம் போல தலையில் பற்றியுள்ள சிகையின் மயிர்த் தொகுதி வெண்மை நிறத்தை அடைந்து, உக்குப் பிணி உற்றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையில் பல் தத்து உற்றுக் கழல ... மெலிந்து, நோயுற்றவனாகி, இருமி, வாந்தி செய்து, இறுதியில் பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய, கொத்தைச் சொல் கற்று உலகில் பல பாஷை திக்கித் திக்கிக் குளறிச் செப்பி ... இழிவான சொற்களைக் கற்று உலகத்திலுள்ள பல மொழிகளை தடைபட்டுத் தடைபட்டுக் குழறிப் பேச, தப்பிக் கெடு பொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் சுமை பேணும் சிக்கு அற்று ... தவறுதலான வழியில் சென்று, குப்பை நிறைந்த சட்டை என்னும் இந்தக் குடிசையாகிய உடலின் சுமையை விரும்புகின்ற சிக்கல் நீங்கப் பெற்று, உட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத்துக்குப் புகலப் பெறுவேனோ ... உள்ளத்தில் கருணை என்னும் எண்ணம் வாய்க்கப் பெற்று, தூய்மையானதும் நற் கதியைத் தர வல்லதுமான தமிழ்ப் பாக்களை நினைத்தபடி கோர்வையாகச் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டிக் கிட்டி இட்டு எதிரிட்டு ... அங்குமிங்குமாகப் பல இடங்களில் போர் செய்யத் துணிந்து, மிக அருகில் வந்து நெருக்கி எதிர்த்து, அத்ரத்து எற்றிக் கடுகப் பொரு சூரன் ... ஆயுதங்களைச் செலுத்தி விரைவாகச் சண்டை செய்த சூரன் அச்சுக் கெட்டுப் படை விட்டு அச்சப் பட்டுக் கடலுள் புக்குப்பட்டுத் துருமத்து அடைவாக ... உடம்பு கெட்டுப் போய், ஆயுதங்களைக் கைவிட்டு, பயந்து, கடலுக்குள்ளே புகுந்து, மாமர உருவத்தை அடைந்து நிற்க, தக்குத் திக்குத் தறுகண் தொக்குத் தொக்கு உற்றது கண் ... அகங்காரத்துடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற, கண்ணும், மற்ற உணர்ச்சிகளும் அழிந்துவிட, கைக் கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி ... கைகளை மட்டும் மிகவும் கொட்டி ஆர்ப்பரித்து, உடலுடன் சில விநாடிகள் ஆட்டம் கண்டு, சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக் கைச் சமர் செய் ... சக்தியாகிய வேற்படை குத்திய வலியால் (சூரன்) துடித்துக் கதறி ஒலி செய்ய, தர்மமான போரைச் செய்தவனே, சத்திக் கச்சிக் குமரப் பெருமாளே. ... சக்தியாகிய காமாட்சி தங்கும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே.