கடத்தைப் பற்று எனப் பற்றிக் கருத்து உற்றுக் களித்திட்டுக் கயல் கண் பொற்பு இணைச் சித்ரத் தன மாதர்
கலைக்குள் பட்டு அறக் கத்திச் சலித்துக் கட்டளைச் சொல் பொய்த் திரைக்குள் பட்டு அறச் செத்திட்டு உயிர் போனால்
எடுத்துக் கொட்டு இடக் கட்டைப் படத் தெட்டத் தணல் தட்டக் கொளுத்தி
சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன்
இணக்கிப் பத்திமைச் செச்சைப் பதத்தைப் பற்றுகைக்குச் சொல் தமிழ்க் கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ
அடைத்திட்டுப் புடைத்துப் பொன் பதச் சொர்க்கத்தனைச் சுற்றிட்டு அலைப்புப் பற்று எனச் சொற்றிட்ட அறு சூரை
அடித்துச் செற்று இடித்துப் பொட்டு எழப் பொர்ப்புப் படக் குத்திட்டு
அலைத்துச் சுற்று அலைத் தெற்றுக் கடல் மாயப் புடைத்திட்டு
படிக்குள் செற்று அடப் புக்குக் கதத் துக்கக் கயில் கொக்கைப் படக் குத்திப் பொருவோனே
புனத்தில் பொன் குறத்திக்குப் புணர்க்கு ஒத்தப் பசப்பு எத்திப் புணர்க் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே.
குடம் போன்ற மார்பகத்தைப் பற்றுவது போலப் பற்றி, அதன் மீதே எண்ணத்தை வைத்து மகிழ்ச்சி உற்று, மீன் போன்ற கண்ணின் அழகையும், இணையாகிய அழகிய மார்பையும் உடைய விலைமாதர்களின் மதனக் கலைக்குள் ஆசைப்பட்டு காம சாத்திரங்களை நன்றாகக் கூவி ஓதி, பின்னர் சலித்துப் போய், கற்பனைப் பேச்சுகளுக்கும், மறைப்புத் திரைக்கும் உட்பட்டவனாகி, இறந்து உயிர் போனவுடன் (உடலை), (சுடுகாட்டில்) போட வேண்டி விறகுக் கட்டைகளிடையே படும்படி வைத்து, முற்றின நெருப்பை பற்றிக்கொள்ளும்படி கொளுத்தி, சுற்றத்தார் பந்தபாசம் இல்லாதவர்களாய் சுடுகாட்டிலிருந்து போவதற்கு முன், மனம் பொருந்தி பக்தியுடன் வெட்சி மலர் கொண்ட உன் திருவடியைப் பற்றி உய்வதற்கு, சொல்லத்தக்க தமிழ் மொழி கொண்டு உனது வீரத் திருப்புகழைச் சொல்லித் திரியும் பாக்கியம் எனக்கு அமையுமோ? தேவர்களைச் சிறையில் அடைத்தும், அவர்களை அடித்தும், அழகிய இடமான சொர்க்க பூமியை வளைத்துக் கொண்டும், நீங்கள் யாவரும் அலைச்சல் கொள்ளுங்கள் என்று கூறி நீங்கிய சூரனை, அடித்தும் கோபித்தும் இடித்தும், பொடிபடும்படியாக (அவனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளையும் அழிவுறக் குத்தியும், அவனை வருத்தியும், வளைந்துள்ள அலைகள் நெருங்கியுள்ள கடலைக் கலக்கமுற்று ஒடுங்கச் செய்து அலைத்தும், பூமியில் கோபத்துடன் புயலாக அழிக்கப் புறப்பட்ட பின், கோபமும் வருத்தமும் நெஞ்சிலே கொண்டு (கடலில்) மாமரமாகி நின்ற சூரனை வேலால் அழிவு படக் குத்திச் சண்டை செய்பவனே, தினைப்புனத்தில் அழகிய குறமகள் வள்ளியைச் சேர்வதற்கு, அவளைத் தந்திர மொழிகளால் துதித்து, பின்பு அவளை மணந்தவனே, கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.
கடத்தைப் பற்று எனப் பற்றிக் கருத்து உற்றுக் களித்திட்டுக் கயல் கண் பொற்பு இணைச் சித்ரத் தன மாதர் ... குடம் போன்ற மார்பகத்தைப் பற்றுவது போலப் பற்றி, அதன் மீதே எண்ணத்தை வைத்து மகிழ்ச்சி உற்று, மீன் போன்ற கண்ணின் அழகையும், இணையாகிய அழகிய மார்பையும் உடைய விலைமாதர்களின் கலைக்குள் பட்டு அறக் கத்திச் சலித்துக் கட்டளைச் சொல் பொய்த் திரைக்குள் பட்டு அறச் செத்திட்டு உயிர் போனால் ... மதனக் கலைக்குள் ஆசைப்பட்டு காம சாத்திரங்களை நன்றாகக் கூவி ஓதி, பின்னர் சலித்துப் போய், கற்பனைப் பேச்சுகளுக்கும், மறைப்புத் திரைக்கும் உட்பட்டவனாகி, இறந்து உயிர் போனவுடன் (உடலை), எடுத்துக் கொட்டு இடக் கட்டைப் படத் தெட்டத் தணல் தட்டக் கொளுத்தி ... (சுடுகாட்டில்) போட வேண்டி விறகுக் கட்டைகளிடையே படும்படி வைத்து, முற்றின நெருப்பை பற்றிக்கொள்ளும்படி கொளுத்தி, சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் ... சுற்றத்தார் பந்தபாசம் இல்லாதவர்களாய் சுடுகாட்டிலிருந்து போவதற்கு முன், இணக்கிப் பத்திமைச் செச்சைப் பதத்தைப் பற்றுகைக்குச் சொல் தமிழ்க் கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ ... மனம் பொருந்தி பக்தியுடன் வெட்சி மலர் கொண்ட உன் திருவடியைப் பற்றி உய்வதற்கு, சொல்லத்தக்க தமிழ் மொழி கொண்டு உனது வீரத் திருப்புகழைச் சொல்லித் திரியும் பாக்கியம் எனக்கு அமையுமோ? அடைத்திட்டுப் புடைத்துப் பொன் பதச் சொர்க்கத்தனைச் சுற்றிட்டு அலைப்புப் பற்று எனச் சொற்றிட்ட அறு சூரை ... தேவர்களைச் சிறையில் அடைத்தும், அவர்களை அடித்தும், அழகிய இடமான சொர்க்க பூமியை வளைத்துக் கொண்டும், நீங்கள் யாவரும் அலைச்சல் கொள்ளுங்கள் என்று கூறி நீங்கிய சூரனை, அடித்துச் செற்று இடித்துப் பொட்டு எழப் பொர்ப்புப் படக் குத்திட்டு ... அடித்தும் கோபித்தும் இடித்தும், பொடிபடும்படியாக (அவனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளையும் அழிவுறக் குத்தியும், அலைத்துச் சுற்று அலைத் தெற்றுக் கடல் மாயப் புடைத்திட்டு ... அவனை வருத்தியும், வளைந்துள்ள அலைகள் நெருங்கியுள்ள கடலைக் கலக்கமுற்று ஒடுங்கச் செய்து அலைத்தும், படிக்குள் செற்று அடப் புக்குக் கதத் துக்கக் கயில் கொக்கைப் படக் குத்திப் பொருவோனே ... பூமியில் கோபத்துடன் புயலாக அழிக்கப் புறப்பட்ட பின், கோபமும் வருத்தமும் நெஞ்சிலே கொண்டு (கடலில்) மாமரமாகி நின்ற சூரனை வேலால் அழிவு படக் குத்திச் சண்டை செய்பவனே, புனத்தில் பொன் குறத்திக்குப் புணர்க்கு ஒத்தப் பசப்பு எத்திப் புணர்க் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே. ... தினைப்புனத்தில் அழகிய குறமகள் வள்ளியைச் சேர்வதற்கு, அவளைத் தந்திர மொழிகளால் துதித்து, பின்பு அவளை மணந்தவனே, கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.