இதத்துப் பற்று இதழ்த் துப்பு அற்று இருள் பொக்கக் கருத்து இட்டத்து இயக்கத்தில் தியக்கு உற்றுச் சுழலாதே
எலுப்புச் சுக்கிலம் கத்தம் தடித் தொக்குக் கடத்தைப் பெற்று எடுத்துப் பற்று அடுத்தத் தற்பத்து உழலாதே
சுதத் தத் தத் சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றைச் சொல் துவக்கில் பட்டு அவத்தைப் பட்டு அயராதே
துணைச் செப்பத்து அலர்க் கொத்து உற்பலம் செச்சைத் தொடைப் பத்திக் கடப்பம் பொற்கழல் செப்பித் தொழுவேனோ
கொதித்துக் குத்திரக் கொக்கைச் சதித்துப் பற்றி கைக்குள் பொற் குலத்தைக் குத்திரத்தைக் குத்திய வேலா
குறத் தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்குக் குலத்துக்குக் குக்குடற் கொற்றக் கொடியோனே
கதம் சுத்தச் சுதைச் சித்ரம் களிற்றுக் கொற்றவற்குக் கற்பகச் சொர்க்கப்புரப் பொற்பைப் புரிவோனே
கடுக்கைக் கண் செவிக் கற்றைச் சடைப் பக்கக் கொடிக் கற்புக் கடல் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே.
இன்பத்துடன் பற்றுகின்ற வாயிதழின் நுகர்ச்சியை நீங்கி, துன்பம் தரும் வஞ்சகமான எண்ணங்களில் விருப்பம் வைத்ததனால் மயக்கம் அடைந்து நான் சுழற்சி உறாமல், எலும்பு, இந்திரியம், மலச்சேறு, தசை, தோல் இவை கூடிய பானையாகிய உடம்பை அடைந்து, பாசம் சேர்ந்துள்ள பாவ நிலையில் அலைச்சல் உறாமல், அந்த அந்தச் சத்தத்துக்கும் சுத்தமான அர்த்தத்தை விசாரிக்கும் பத ஆராய்ச்சி செய்வோருக்கு, (அந்தத் தொனியின்) உள்ளர்த்தத்தை எடுத்துச் சொல்லும் தொடர்பிலே சிக்குண்டு, வேதனைப்பட்டு (சொல் ஆராய்ச்சியால்) சோர்வு உறாமல், (இவற்றை எல்லாம் தவிர்த்து) செம்மையான தன்மை சேர்ந்த பூங்கொத்துக்களும், நீலோற்பல மலர், வெட்சிப் பூ இவைகளால் ஆகிய மாலைகளின் வரிசைகளும், கடம்ப மலரும் கொண்ட அழகிய உனது திருவடியைப் புகழ்ந்து தொழ மாட்டேனோ? கோபம் கொண்டு வஞ்சகம் உள்ள மாமரமாகி நின்ற சூரனை அழித்து தன் வசப்படுத்தி (அவனது இரு கூறுகளான மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு), பொன் மயமான குலகிரி கிரெளஞ்ச மலையையும், அதன் வஞ்சக நிலையையும் குத்தி அழித்த வேலனே, குறவர் குலக் கிளியாகிய வள்ளியினுடையவும், கற்பியல் அறநெறியில் நின்ற தேவயானையினுடையவும் முத்தாபரணம் அணிந்த தோள்களின் அழகுக்கு ஒப்பாகும், கரும்புக்கும் ஒத்த குலமாகிய, மூங்கில் காம்பையுடைய, கோழியின் வீரக் கொடியை உடையவனே, கோபத்தையும், சுத்தமான வெண்மை நிறத்தையும், அழகையும் கொண்ட ஐராவதம் என்னும் யானைக்குத் தலைவனான இந்திரனுக்கு, (கேட்டதைத் தரும்) கற்பக மரங்கள் உள்ள சொர்க்க லோகச் சிறப்பை மீட்டுத்தந்து உதவி புரிந்தவனே, கொன்றையும், பாம்பும் அணிந்த திரண்ட சடையை உடைய சிவபெருமானது பாகத்து அமர்ந்த கொடி அனையவளும், கற்புக் கடலானவளும் ஆகிய உமாதேவி வீற்றிருக்கும் காஞ்சித் திருநகரில் அமர்ந்த அழகிய பெருமாளே.